செவ்வாய், 1 ஜனவரி, 2013

19 மாதங்களில் நாம் செய்த சாதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறார் முதல்வர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து) கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன், அவைத் தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர்கள் பி.எச்.பாண்டியன், ஈ.வெ.கி.சுலோசனா சம்பத்." வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று முதல்வரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்தார்.சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியது: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருக்கு முன்னால் அனைத்திந்திய என்ற வார்த்தையை எம்.ஜி.ஆர். சேர்த்ததற்கான காரணத்தை வரும் மக்களவைத் தேர்தலில் நாம் ஈட்டப்போகும் வெற்றியின் மூலம் அரசியல் உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். இந்த நேரத்தில் அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சி நமக்கு என்ன செய்தது என்பதைவிட கட்சிக்காக நாம் என்ன செய்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அதிமுகவினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உயர்வானவர்கள். திறமையானவர்கள். ஒன்றாக இணைந்து கடமையாற்றினால் அதிமுகவை வெல்வதற்கு இவ்வுலகில் எந்த இயக்கமும் இல்லை. இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தனி மனிதனாக இருந்தாலும், ஒரு இயக்கமாக இருந்தாலும் சில அரிய வாய்ப்புகள் எப்போதாவதுதான் வரும். அதுபோல சரித்திரத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடிய அளவுக்கு உலக சாதனை படைக்கும் வாய்ப்பு வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு அமையப் போகிறது.
இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் மீண்டும் ஒரு வாய்ப்பு வராமலே போய்விடலாம். எனவே, கிடைக்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி நமது எதிர்காலத்தை நாம் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
எனது தலையெழுத்து: நம்மைப் பொறுத்தவரை யாரையும் சார்ந்திருக்க முடியாது. பெரிய கட்சிகளையும், தேசியக் கட்சிகளையும் மற்ற கட்சிகள் சார்ந்திருக்கலாம். ஆனால், நாம் யாரையும் சார்ந்திருக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டு விட்டது.
பெரும்பாலான பெண்கள் இளம் வயதில் தந்தையையும், பெரியவர்களான பிறகு கணவனையும், வயதான பிறகு பிள்ளைகளையும் சார்ந்திருப்பார்கள்.
ஆனால், யாரையும் சார்ந்திருக்கும் கொடுப்பினை எனக்கு இல்லை. நல்லது என்றாலும், கெட்டது என்றாலும் எனக்கு நானே முடிவெடுக்கிறேன். வாழ்க்கையில் எது வந்தாலும் தனித்தே சந்திக்கிறேன்.
இது எனது தனித்திறமை என்று சொல்லமாட்டேன். இது விதி. தலையெழுத்து.
தனித்துப் போட்டி: தேசிய அளவில் காங்கிரஸýம், பாஜகவும் பெரிய கட்சிகள். காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் செயல்படுகின்றன. ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை தனித்தே நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
காங்கிரஸ் - பாஜக ஒற்றுமை: மத்தியில் காங்கிரஸýம், கர்நாடகத்தில் பாஜகவும் ஆட்சியில் உள்ளன. ஆனால், இரு கட்சிகளும் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கொடுக்கக் கூடாது என்பதில் ஒற்றுமையாக இருக்கின்றன. தமிழகத்தில் இல்லாத ஒற்றுமை கர்நாடகத்தில் இருக்கிறது.
கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோர், பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை அழைத்துக் கொண்டு பிரதமரைச் சந்திக்கிறார்கள். காவிரியிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று கோரிக்கை வைக்கிறார்கள். பிரதமரைச் சந்திக்க காங்கிரஸ், பாஜக எம்.பி.க்கள் செல்கிறார்கள்.
ஆனால், டி.ஆர்.பாலு தலைமையில் பிரதமரைச் சந்தித்த திமுக எம்.பி.க்கள், என்ன நடந்தாலும் சரி, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டு விடாதீர்கள் என்று சொன்னதாகக் கேள்விப்படுகிறேன்.
திமுகவை விட்டுவிடுங்கள். எப்படி பார்த்தாலும் அது முடிந்துபோன கதை. நமது எதிர்காலத்தை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளையும் நாம் சார்ந்திருக்க முடியாது.
தமிழகத்தின் உரிமைகளைப் பெறவும், டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகாமல் தடுக்கவும் மக்களவைத் தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிட வேண்டும். புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வென்று மத்தியில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
2011 மே 16-ல் நாம் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 19 மாதங்களில் நாம் செய்த சாதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும். நம்பிக்கையோடு மக்கள் பணியாற்றுங்கள். வருங்காலம் நமதாகும் என்றார் ஜெயலலிதா dinamani.com

கருத்துகள் இல்லை: