புதன், 16 மே, 2012

Mayavathi சிலைகள் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல்

லக்னோ: உ.பி.,யில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியின்போது, மாயாவதி, கன்ஷிராம் மற்றும் யானை சிலைகளை அமைத்ததில், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் கிளம்பியுள்ளன. "இது தொடர்பாக எந்த விதமான விசாரணை நடத்துவது என்பது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்' என, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.


உத்தரபிரதேசத்தில், 2007 முதல் 2012ம் ஆண்டு வரை, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடந்தது. முதல்வராக மாயாவதி பதவி வகித்தபோது, லக்னோ மற்றும் நொய்டாவில் பிரமாண்டமான பூங்காக்கள் அமைக்கப்பட்டதோடு, அவற்றிலும், வேறு பல இடங்களிலும், பகுஜன் கட்சி நிறுவனத் தலைவர் கன்ஷிராம், மாயாவதி மற்றும் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சிலைகள், ஏராளமான அளவில் அமைக்கப்பட்டன.

முறைகேடு எவ்வளவு? இதற்கு அரசு பணம் செலவிடப்பட்டது. இதில், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக, சட்டசபை தேர்தலின் போது, முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியது. தற்போது மாநிலத்தில், அக்கட்சியே ஆட்சியில் அமர்ந்துள்ளதால், இது குறித்து நேற்று தலைநகர் லக்னோவில், முதல்வர் அகிலேஷ் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் சிலைகள் அமைத்ததில், நடந்துள்ள முறைகேடுகள் எவ்வளவு என்பதை பத்திரிகைகள் சொல்ல வேண்டாம். அதை, 5 ஆயிரம் கோடி ரூபாயாகவும் குறைக்க வேண்டாம். நாங்கள் (சமாஜ்வாதி) சட்டசபை தேர்தலின்போதே, இந்த விவகாரத்தில், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது என்பதை தெரிவித்துள்ளோம். எவ்வளவு நடந்துள்ளது என்பதை, மாநில அரசு கணக்கிடும். சிலைகள் அமைத்தற்கான செலவுகளை கணக்கிடும் போது, சிலைகள் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் கணக்கில் கொள்ளப்படவில்லை.

விசாரணை எப்படி? சிலைகள் அமைத்த போது, ஒப்பந்ததாரர்களுக்கு அதிக அளவில் பணம் தரப்பட்டுள்ளது. ஒரு சிலைக்கு, 5 லட்ச ரூபாய் செலவாகிறது எனில், மாநில அரசு நிறுவனம் ஒவ்வொரு சிலைக்கும், 60 லட்ச ரூபாய் கொடுத்ததாக கணக்கு உள்ளது. பல கட்டடங்கள் கட்டப்பட்டு, பின் இடிக்கப்பட்டது எல்லாம் கணக்கில் காட்டப்படவில்லை. அதேபோல், எல்லைச் சுவர்கள் அமைக்கப்பட்டு, பின் இடிக்கப்பட்டதும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்த மோசடிகளில் பலம் அடைந்தது யார் என்பதை எல்லாம், குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடிப்பர். மேலும், மோசடி தொடர்பாக, எந்தவிதமான விசாரணை நடத்தப்படும் என்பது குறித்து, மாநில அரசு விரைவில் முடிவு செய்யும். இவ்வாறு, முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: