புதன், 16 மே, 2012

மதுரை ஆதீனம்: அ.தி.மு.க. கனெக்ஷன்.. தி.மு.க.விலும் கனெக்ஷன்”

நித்தியானந்தா, மதுரை இளைய ஆதீனமாக்கப்பட்ட செயல் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள நிலையில், தமது அரசியல் தொடர்புகள் பற்றி கோடி காட்டத் துவங்கியுள்ளார் மூத்த ஆதீனம். தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளுக்கும், தமக்கும் இடையே ‘விட்டகுறை தொட்டகுறை’ உறவுகள் இருப்பதாக கூறுகிறார் அவர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மதுரையில் பத்திரிகையாளர்களை சந்திந்த மூத்த ஆதீனம், “ஆதீனமான பின்னரும் நான் தி.மு.க.-வை ஆதரித்தேன். ஆதீனமாவதற்கு முன் நான் தி.மு.க.-வில் உறுப்பினராக இருந்தேன். இப்போது, அ.தி.மு.க.-வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறேன்” என்று தமது மல்டி பார்ட்டி ஜிங்கிள் ஒன்றை எடுத்து விட்டார்.
“முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு, நியாயத்துக்கும் உண்மைக்கும் ஆதரவளிக்கும் அரசு” என்று பக்கா அ.தி.மு.க. ஆதரவாளராக காட்டிக்கொண்ட மூத்த ஆதீனம், “நேர்மைக்கும் நியாயத்துக்கம் ஆதரவளிக்கும் அரசு என்பதால், எங்களுக்கும் ஆதரவளிக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது.
தமிழக முதல்வரைச் சந்திக்க தேதி கேட்டுள்ளோம். தமிழக அரசிடம், ஆதீன மடத்துக்குப் பாதுகாப்பு கோரியுள்ளோம். எம்மைச் சந்திப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா ஆர்வமாக இருப்பார் என நம்புகிறோம்” என்றார்.
இப்படி ஒரேயடியாக அ.தி.மு.க. பக்கமாக சாய்ந்தால். தி.மு.க. கோபம் கொண்டால் என்னாவது? அவர்கள் இந்த விவகாரத்தை கிளறி அரசியல் செய்வார்களே.. அதிலிருந்து எப்படி தப்புவது?
அதற்காக சென்டிமென்ட்டல் லிங்க் ஒன்றை எடுத்து விட்டார் மூத்த ஆதீனம். “கருணாநிதி ஒரு மூதறிஞர். எனக்கும் அவருக்கும் இடையே இருப்பது, தந்தை-மகன் உறவு.  அவர் என்னைப் பற்றி அவதூறாக எழுதியிருப்பது, ஒரு தந்தை தன் பிள்ளையைத் திட்டுவது போலத்தான். ஆகவே, கருணாநிதியின் அவதூறான எழுத்தைப் பொறுத்துக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.
கருணாநிதி இரவு பகலாக தமிழுக்காக உழைத்தார். நானும் இரவு பகலாக உழைத்தது தமிழுக்குத்தான். 1987-ல் தி.மு.க.-வின் அண்ணா அறிவாலயத் திறப்பு விழா எனது தலைமையில்தான் நடைபெற்றது என்பதை மறக்காதீர்கள். ஆதீனமாவதற்கு முன்பு நான் தி.மு.க.-வில் இருந்தேன். ஆதீனமான பின்னர் தி.மு.க.-வை ஆதரித்தேன் என்பதில் சந்தேகமில்லை
ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் எனக்கு மரியாதை தரவில்லை. அந்த நிலையில், அ.தி.மு.க.-விலிருந்து வந்து என்னிடம் பேசினார்கள். நாமும் ஆதரவை மாற்றிக் கொண்டு, அ.தி.மு.க.-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறோம்” என்றார்.
அடேங்கப்பா! சுவாமிகளுக்கு விஜயகாந்துடன் கனெக்ஷன் ஏதும் கிடையாதா?

கருத்துகள் இல்லை: