வெள்ளி, 18 மே, 2012

நித்யானந்தா வெளியிட்ட ரகசியம்..ஆதீன எதிர்ப்பாளர்கள்

மதுரை: ""ஆதீன மீட்புக்குழுவில் உள்ளவர்களில் பலர், மறைமுகமாக என்னை தேடி வந்து ஆசீர்வாதம் பெற்று சென்றனர். எதிர்ப்பாளர்களின் போராட்டம் பிசுபிசுத்து போகும்,'' என நித்யானந்தா கூறினார்.
மதுரையில் நேற்று கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் எனக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட ஏற்பாடு செய்தவர்கள், ஆதீன சொத்துகள் மீது சட்டவிரோதமாக அமர்ந்திருப்பவர்கள். கருப்புக்கொடி காட்டியவர்கள் அரசின் நூறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்பவர்கள் என தெரியவந்தது. இது குறித்து அம்மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட வேலையாட்களின் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனக்கு எதிராக மே 27ல், நெல்லையில் பேரணி நடத்தப் போவதாக நெல்லை கண்ணன் அறிவித்துள்ளார். அதே நாளில், ஆதீன பாதுகாப்புக் குழு சார்பில் பேரணி நடத்தப்படும். எந்த போராட்டத்தையும் பாதுகாப்புக் குழு எதிர்க்கொள்ளும். சங்கரமடத்தில் இருந்து பிரதிநிதி வருவதாக கூறியிருக்கிறார்கள். என்னை பற்றி கூறிய கருத்தை வாபஸ் பெற போவதில்லை, என ஜெயேந்திரர்தான் சொன்னாரா என தெரியவில்லை. செருப்பு வீச்சு தொடர்பாக, சம்பவ இடத்தில் இல்லாதவர் கைது செய்யப்பட்டதை சட்டப்படி எதிர்க்கொள்வோம்.

ஆதீன சொத்துகள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. முறையாக வாடகை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆதீனத்திற்கு சொந்தமான 4 கோயில்களின் வருவாய், அந்தந்த ஊர்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். மே 26, 27ல் மடத்தில் 10 ஆயிரம் பேருக்கு இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. ஆதீன மீட்புக்குழுவினர் "காமெடி பீஸ்'. ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பர் என அறிவித்தனர். 150 பேர்தான் வந்தனர். அதில் 100 பேர் சாப்பிட்டுவிட்டு சென்றனர். 50 பேர்தான் கைதாயினர். போராட்டக்குழுவில் உள்ளவர்களில் பலர் என்னிடம் "சைலன்டாக' ஆசீர்வாதம் வாங்கி சென்றனர். அவர்களின் போராட்டம் பிசுபிசுத்து போகும், என்றார். புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நித்யானந்தா நன்றி தெரிவித்ததோடு, கோயில்களில் அன்னதானம், திருப்பணி செய்து வருவதற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: