புதன், 16 மே, 2012

நாடாளுமன்றத்தில் ஆ.ராசா: கூட்டத் தொடரில் பங்கேற்றார்!

டெல்லி: 2ஜி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா இன்று நாடாளுமன்றம் வந்தார். பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார்.
இந்த வழக்கில் கைதாகி கடந்த 15 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராசாவுக்கு நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதன்படி அவர் டெல்லியிலேயே தங்கியிருக்க வேண்டும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும், தமிழகத்துக்குச் செல்ல நீதிமன்ற அனுமதி பெற வேண்டும், தொலைத் தொடர்பு அலுவலகத்துக்குச் செல்லக் கூடாது, ஆனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்று நீதிபதி நிபந்தனைகள் விதித்திருந்தார்.

இந் நிலையில் இன்று காலை ராசா நாடாளுமன்றம் வந்தார். எம்.பி என்ற முறையில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிவப்பு விளக்கு பொறுத்தப்பட்ட காரில் ராசா நாடாளுமன்றம் வந்திறங்கினார். அவருடன் ஏராளமான திமுகவினரும் மற்ற கார்களில் வந்தனர்.

நாடாளுமன்ற வாயிலில் அவரை பத்திரிக்கையாளர்கள் வழிமறித்து கேள்விகள் கேட்டனர். ஆனால், எதற்கும் பதில் சொல்லாமல் சிரித்தபடியே சென்றுவிட்டார்.

நாடாளுமன்றத்தில் கடைசி இருக்கையில் அமர்ந்த அவர் றிது நேரத்துக்கு பிறகு கிளம்பிச் சென்றார். அவரை சில எம்.பிக்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதே விவகாரத்தில் கைதாகி ஜாமீனில் விடுதலையான கனிமொழியும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று இரவு திகார் சிறையிலிருந்து தனது டெல்லி மோதிலால் நேரு மார்க் பகுதி அரசு இல்லத்துக்கு வந்த ராசாவை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வீட்டின் முன் கூடியிருந்த திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ராசாவையும் திமுக தலைவர் கருணாநிதியையும் வாழ்த்தி கோஷமிட்டனர்.

இரவு அவரது வீட்டில் சுமார் 200 திமுகவினருக்கு விருந்தும் பரிமாறப்பட்டதாகத் தெரிகிறது.

சிறை வாசலில் வரவேற்று அழைத்துச் சென்ற டி.ஆர்.பாலு:

முன்னதாக சிறை வாசலில் ராசாவை திமுக மூத்த எம்பியான டி.ஆர்.பாலு வரவேற்று வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் மத்திய இணையமைச்சர் நெப்போலியன் அங்கு வந்து ராசாவிற்கு தன் வாழ்த்து தெரிவித்தார்.

அதே நேரத்தில் ராசாவின் வீட்டிற்கு வெளியே அவரது ஆதரவாளகளுக்கும் பத்திரிக்கையாளர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிறு மோதலும் நடந்தது.

கருத்துகள் இல்லை: