வியாழன், 17 மே, 2012

ஆயுள் தண்டனை இனி 30ஆண்டுகள்..14 அல்ல : உச்சநீதிமன்றம்


புதுடில்லி, மே 17- தூக்குத் தண்டனை விதிப்பதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், கொடூர குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் போதுமான தண்டனை விதிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஆயுள் தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள், 30 ஆண்டுகளுக்குப் பிறகே முன்கூட்டியே விடுதலை கோர முடியும் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, நீதிமன்றங்கள் ஆயுள் தண்டனை விதிக்கின்றன. ஆயுள் தண்டனை என்பது, ஆயுள் முழுக்க சிறையில் அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்பது தான்.
ஆனால், சிறை விதிகளின்படி, 14 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்தவர்கள், தண்டனைக் குறைப்பு என்ற பெயரில், முன்கூட்டியே விடுதலை பெற உரிமை உள்ளது.
அந்த வகையில், பல ஆயுள் தண்டனைக் கைதிகள், 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்த பிறகு விடுதலை செய்யப்படுகின்றனர்.
அதே நேரத்தில், இது போன்ற குற்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதற்கு, நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. உலக நாடுகள் பலவற்றில், தூக்குத் தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதால், தூக்குத் தண்டனைக்குப் பதில், ஆயுள் தண்டனையின் காலத்தை அதிகரிப்பது என, நீதித் துறை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நடைமுறையை, உச்சநீதிமன்ற நீதிபதி சவுகான், நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு', இரு வேறு வழக்குகளில் பின்பற்றியுள்ளது. தனது நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் கொடுமை செய்து கொன்ற தந்தைக்கும், கருவைக் கலைக்க மறுத்த காதலியைக் கொன்ற காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து, 30 ஆண்டுகள் வரை, தண்டனைக் குறைப்பு கோர முடியாது என தீர்ப்பளித்துள்ளது.
அல்ல
இவ்விரு தீர்ப்புகளும் மூன்று நாள்கள் இடைவெளியில் வழங்கப்பட்டுள்ளன. நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் கொடுமை செய்து கொன்ற தந்தைக்கு, 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி சவுகான், இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்காகக் கருத முடியாது. இருந்தாலும், குற்றத்தின் தன்மை, கொடூரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குற்றவாளிக்கு சாதாரண தண்டனைகள் வழங்க முடியாது.

அதனால், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றவாளி, 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதன் பிறகு மட்டுமே தண்டனைக் குறைப்பு வழங்கி, முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்றார்.

திட்டமிட்டு கொலை இதேபோல, கருவைக் கலைக்க மறுத்த காதலியைக் கொன்ற காதலனுக்கும், ஆயுள் தண்டனை விதித்து, அதை, 30 ஆண்டுகள் வரை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி கலிபுல்லா, வேண்டுமென்றே திட்டமிட்டுக் கொன்ற வழக்கை, அரிதினும் அரிதான வழக்காகக் கருத முடியும். இந்த வழக்கும் அந்த வகையிலானது தான்.

அதற்காக, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, அதை 30 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும். அதன் பிறகே, தண்டனைக் குறைப்பு வழங்கி, விடுதலை செய்யலாம் எனத் தீர்ப்பளித்தார்.

இதனால் ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் என்றிருந்த வழக்கத்தை 30 ஆண்டுகளாக உயர்த்தி இந்த இரு வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் ஆயுள் தண்டனை என்றால் 30 ஆண்டுகள்தான் என்பது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: