திங்கள், 14 மே, 2012

திமுக -அதிமுக இணைய பிஜு பட்நாயக் ஈடுபட்டார்! நானும் எம்.ஜி.ஆரும் தனிமையில் பேசினோம்! கலைஞர் கடிதம்!

;தி.மு.க., -அ.தி.மு.க., இணைப்புக்கான முயற்சியில், பிஜு பட்நாயக் ஈடுபட்டார்' என்றும், நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் அந்த விடுதியின் வேறொரு அறையில் தனிமையில் பேசினோம் என்றும் தி.மு.க., தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதம்:
சென்னையில் 11-5-2012 அன்று நடைபெற்ற ஒடிசா மாநில 76வது ஆண்டு விழாவில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த விழாவில் நமது முதலமைச்சர் பேசும்போது, ஒடிசா முதல்வரான நவீன் பட்நாயக் அவர்களின் தந்தையான பிஜுபட் நாயக்கை மூன்று முறை வரவேற்றிருப்பதாகவும், மிகச் சிறந்த தலைவராக சாதனை புரிந்தவராக திகழ்ந்த பிஜு பட்நாயக் அவர்களின் மகன் நவீன் பட்நாயக்கை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக வும் தெரிவித்ததோடு, பிஜு பட்நாயக் தனக்கு தந்தை போன்றவர் என்றும், அந்த உணர்வுகளை தனது சகோதரரைப் போன்ற நவீன் பட்நாயக் அவர்களுடன் பகிர்ந்துகொள்வதாகவும் குறிப்பிட்டதை ஏடுகளில் படித்தபோது மறைந்த பிஜு பட்நாயக் அவர்களைப் பற்றி நான்பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய “நெஞ்சுக்கு நீதி” - மூன்றாம் பாகத்தில் எழுதியிருந்தது என் ஞாபகத்திற்கு வந்ததையொட்டி, அதை அப்படியே இங்கே தந்துள்ளேன்.

“1979, செப்டம்பர் 6ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தில்லியிலே இருந்தார். அன்று மாலையில் அவர் இந்திரா காந்தியைச் சந்திப்பதாக இருந்தது. ஆனால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. அதற்குக் காரணம்; எம்.ஜி. ஆருக்கு ஏற்பட்ட குழப்பம் என்று ஏடுகள் எழுதின. குழப்பத்திற்குக் காரணம்; அதே நாள் காலையில் அவர், பிரதமர் சரண்சிங்கைச் சந்தித்தபோது “அ.தி.மு.க., இந்திரா காங்கிரசுடன் உறவு கொள்வதாக இருந்தால் காபந்து சர்க்காரில்
மத்தியில் அமைச்சர்களாக இருக்கும் இரண்டு அ.தி.மு.க. அமைச்சர்களும் பதவி விலகி விடுவதுதான் நியாயமாகும்” என்று சரண்சிங், எம்.ஜி.ஆரிடம் கூறி விட்டார். எனவே எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தியைச் சந்திக்காமலே திரும்பி விட்டார்.அதே செப்டம்பர் 6ஆம் தேதி மாலையில் தில்லியிலிருந்து மத்திய அமைச்சர் பிஜு பட்நாயக்; தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு, முக்கியமான அரசியல் விஷயம் பேச வேண்டுமென்றும் சென்னைக்கு வந்து என்னைச் சந்திப்பதாகவும் கூறினார். நானும் அவர் என்னை சென்னைக்கு வந்து சந்திப்பதை ஒப்புக்கொண்டேன்.

இதற்கிடையில் ஏடுகளில் தி.மு.க.வையும் அ.தி.மு.க. வையும் இணைப்பதற்கான முயற்சிகளில் பிஜு பட்நாயக் ஈடுபடப் போவதாகச் செய்திகள் வந்தன.

செப்டம்பர் 8ஆம் தேதி வேலூர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த என்னிடம் இது பற்றிக் கேட்டனர். “பூம்புகாரில் நிருபர்களிடம் பேசிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., தி.மு.க., அ.தி.மு.க., இரண்டும் ஒன்றாக இணைவதில் என்ன தவறு என்று கூறியிருக்கிறார். ஆனால் அதே நாள் மாலையில் காரைக்கால் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. நாடாளு மன்றத் தேர்தலில் வெற்றி பெறாது என்று அறை கூவல் விடுத்துப் பேசியிருக்கிறார். எதற்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று கருத்துப்படப் பதில் அளித்தேன்.

என்னிடம் தொலைபேசியில் கூறியவாறு 12-9-79 அன்று பிஜு பட்நாய்க் சென்னையில் என் வீட்டில் என்னைச் சந்தித்து தி.மு.க., அ.தி.மு.க., இணைப்புக் குறித்துப் பேசினார். நீண்ட நேரம் இருவரும் விவாதித்த பிறகு; ஏற்கனவே

நான் கழகப் பொதுச்செயலாளருடனும் கழக முன்னணித் தலைவர்களுடனும் கலந்து பேசி எடுத்த முடிவுக்கேற்ப ; இரு கட்சிகளும் இணைந்திடச் சில நிபந்தனைகளைச் சொன்னேன்.

1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில்தான் இயங்கவேண்டும்.

2. அக்கட்சிக்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.

3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி. ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும்.

4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.க.வில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை.

5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.

6. முக்கியமான விஷயம் : எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.

இவற்றைக் கேட்டவுடன்; பிஜு பட்நாயக் அவர்கள் மிகவும் மகிழ்ந்து உற்சாகத்துடன் “இந்த நிபந்தனைகளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்ள எந்தக் கஷ்டமும் இருக்காது. நான் இப்போதே எம்.ஜி.ஆர். இல்லம் செல்கிறேன். இன்றைக்கே உங்கள் இருவரையும் சந்திக்க வைக்கிறேன்” என்றார். அதற்கு நான்; “அவரைச் சந்திப்பதில் எனக்கொன்றும் மறுப்பு இல்லை. சந்திப்பதற்கு முன்பு கழக முன்னோடிகள் அனைவரிடமும் நான் கலந்து பேச வேண்டும். பொதுச் செயலாளர் வெளியூர் சென்றுள்ளார். இன்று மாலையில்தான் வருகிறார். அவரையும் மற்றவர்களையும் கலந்து பேசிக் கொள்கிறேன். எனவே சந்திப்புக்கு நாளைய தினம் ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன். மறுநாள் 13-9-1979 அன்று சந்திக்க முடிவாயிற்று.

அதற்குள் மாநில முழுவதுமுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலா ளர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டு, அவர்கள் அனைவரும் 13ந்தேதி காலையில் சென்னை வந்து சேர்ந்திடவே - அவர்களின் கருத்துக்களையும் நானும் பொதுச் செயலாளரும் கேட்டறிந்தோம். அதன்பிறகு அன்று 11 மணியளவில் பிஜுபட் நாயக் முன்னிலையில் நானும் எம்.ஜி.ஆரும் சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் சந்தித்துப் பேசினோம். அப்போது கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், அ.தி.மு.க. சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். பிறகு நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் அந்த விடுதியின் வேறொரு அறையில் தனிமையில் பேசினோம். பிஜுபட்நாயக்கிடம் நான் தெரிவித்த கருத்துக்களும் நிபந்தனைகளும் உண்மைதானா என்று எம்.ஜி.ஆர். வியப்புடன் கேட்டார். இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில் இயங்க வேண்டுமென்பதற்கு தி.மு.க. என்ற பெயரில்தான் ஏற்கனவே பல இடங்களில் கட்டிடங்கள், சொத்துக்கள் இருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், தி.மு.க. என்பதுதான் அண்ணா உருவாக்கிய கழகம்; எனவே அந்தப் பெயரே நிலைக்கலாம் என்பதையும் அவரிடம் விளக்கி னேன். அண்ணாவின் படத்தைப் பதித்துள்ள கொடியே இணைந்து விடப் போகும் கட்சியின் கொடியாக இருக்கட்டுமென்றும் கூறினேன். மற்றும் பிஜு பட்நாயக்கிடம் கூறிய மற்றவைகளையும் எம்.ஜி.ஆரிடம் விளக்கி னேன். அவர் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லா மல், ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு கட்சிகளின் செயற்குழு, பொதுக் குழுக்களையும் வெவ்வேறு இடங்களில் கூட்டி இரு கட்சிகளின் இணைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி விடலாம் என்றும் அறுதிட்டுக் கூறினார்.

பின்னர் இருவரும் நாங்கள் தனித்துப் பேசிக் கொண்டிருந்த அறையிலிருந்து வெளியே வந்து பிஜு பட்நாயக்கிடமும் அங்கிருந்த இரு கட்சிகளின் தலைவர்களிடமும் பேச்சின் முடிவு குறித்துத் தெரிவித்தோம். செய்தியாளர்கள், புகைப்படக் காரர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு கை குலுக்கினர். புகைப்படமெடுத்தனர். நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்த போதும் நான், எம்.ஜி.ஆர். இருவருமே இரு கட்சிகளின் செயற் குழு, பொதுக்குழுக்களில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படுமென்று கூறினோம்.

செப்டம்பர் 13ம் தேதி நாங்களிருவரும் பிஜுபட் நாயக் முன்னிலையில் சந்தித்துப் பேசியதற்கு மறுநாள் 14-9-79 அன்று வேலூர் பொதுக் கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.க., அ.தி.மு.க. இணைப்புப் பற்றி உறுதியான கருத்து எதுவும் தெரிவிக்காதது மட்டுமல்ல; அவரை மேடையில் வைத்துக் கொண்டே அவரது அமைச்சர்கள் தி.மு. கழகத்தையும், என்னையும் மிகக் கடுமையாகவும், தரக்குறைவாகவும் தாக்கிப் பேசியிருக்கிறார்கள். சேப்பாக்கம் அரசினர் விடுதியில் நாங்கள் சந்தித்துப் பேசிய பிறகு வேலூர் பொதுக் கூட்டத்திற்கு இடையில் என்ன நடந்தது என்று தெரியாது. வேலூருக்குப் பிறகு இணைப்புப் பற்றிப் பேச்சுத் தொடரவில்லை. வேலூர் கூட்டத்துப் பேச்சுக்களினால் புண்பட்ட தி.மு.கழக முன்னணியினரும்; இணைப்பு என்பதில் தங்களுக்குள்ள மாறுபாடான கருத்தைத் தலைமைக்குத் தெரிவிக்கத் தொடங்கினர். யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தினர், என்னை அணுகி, “தொடர் நடவடிக்கை என்ன?” என்று கேட்டபோது “இரு தரப்பிலும் தொடர் நடவடிக்கை இல்லை. இரு கட்சிகளின் தேர்தல் உடன்பாடுகள் வெவ்வேறாகதானிருக்கக் கூடுமெனக் கருதுகிறேன்” என்று பதில் அளித்தேன். ஆனால் பிஜுபட்நாயக், தனது முயற்சி வெற்றி பெற்று விட்டது என்ற மகிழ்ச்சியுடன் தில்லியிலிருந்து எனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்து இணைப்புக்கான அடுத்த முயற்சிகள் எப்படியிருக்கின்றன என்று விவரம் கேட்டார். நான் அவரிடம் வேலூரில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டம் பற்றியும் அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் பேசிய கருத்துக்கள் இணைப்புக்கான அடிப்படையில் இல்லாதது மட்டுமல்ல; இணைப்புக் கூடாது என்ற நிலையில் இருந்தது என்பதையும், எனவே தி.மு.க. முன்னணியினரும், பல்வேறு மட்டங்களில் உள்ள செயல்வீரர்களும் இணைப்புக்கு இப்போது சாதகமாக இல்லையென்று கூறினேன். அவர் என்னை உடனே புறப்பட்டு தில்லி வருமாறு கேட்டுக் கொண்டார்.இதற்கிடையே இந்திரா காந்தி அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்தவரும், இந்திரா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த ஸ்டீபன், முரசொலி மாறனுடன் தில்லியில் தொடர்பு கொண்டு, இந்தியாவின் நன்மைக்காகவும், ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டுமென்பதற்காகவும் நடந்தவைகளையெல்லாம் மறந்து விட்டு மீண்டும் தி.மு.க. வுடன் இந்திரா காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு கொள்ள விரும்புவதாகத் தெரிவித்து; இரண்டு மூன்று முறை மாறனிடம் அக்கருத்தை அவர் வலியுறுத்தவே, மாறன் அதுபற்றி எனக்குத் தகவல் தெரிவித்தார். 1971ஆம் ஆண்டுக்கு முன்பு பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசிய உடமை ஆக்கியது, மன்னர் மானியங்களை ஒழித்தது போன்ற செயல்களுக்காகத் தி.மு.க.வும், இடதுசாரி கட்சிகளும் அவரை ஆதரித்ததைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திரா காந்தியின் ஆதரவு பெற்ற வேட்பாளரான வி.வி. கிரியை ஆதரித்து வெற்றி பெறவும் செய்தது ஒரு கட்டம். அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. இந்திரா காங்கிரசுடன் உடன்பாடு கொண்டு நாடாளுமன்றத்திற்கு மட்டும் இந்திரா காங்கிரசுக்கு ஒன்பது இடங்களை விட்டுக் கொடுத்து வெற்றி பெறச் செய்தது. அதன் பின்னர் 1975ல் நெருக்கடிக் காலப் பிரகடனம், அதற்கு தி.மு.க. பெரும் எதிர்ப்பு, 1976இல் ஆட்சிக் கலைப்பு - மிசாக் கொடுமை இத்தனைக்கும் பிறகு, மீண்டும் தி.மு.க. வுடன் தேர்தல் உடன்பாடு கொள்ள 1980ல் இந்திரா காந்தி பெருமுயற்சி எடுத்து, என்னையும் உடனடியாகப் புறப்பட்டு தில்லிக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறுகிறார் என்றால்; அது அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனைதானே என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: