புதன், 16 மே, 2012

விஜயகாந்துக்கு துணைக்கு ஆள் அனுப்பியவர் ஜெயலலிதா!”

Viruvirupu
“சிவப்பு நிறத்தைக் கண்டால் மாடு மிரளும்” என்று நம்ம கிராமங்களில் சொல்வார்கள். அதைப் பொய் என்று நிரூபித்தவர் யார் தெரியுமா? ராமராஜன்! அவரது திரைப்படங்களில் சிவப்பு, ரோஸ், பிங்க், குருத்துப் பச்சை என பலபல பளபள வர்ணங்களில் சட்டை அணிந்து வருவார். அவருடைய அநேக படங்களில் மாடும் மெயின் ரோலில் நடிக்கும். அப்படியிருந்தும் அந்த மாடுகள் அவரது சட்டையைப் பார்த்தும் மிரண்டதில்லை, அவரைப் பார்த்தும் மிரண்டதில்லை.
ஆனால் இப்போது அவரது பேச்சு, விஜயகாந்தை மிரள வைக்கப் போகிறது.

அப்படி என்னதான் பேசினார் நடிகர் ராமராஜன்? “கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் தே.மு.தி.க.-வினர் போட்டியிட்டார்கள். ஆனால் ஒரேயொரு இடத்தில் தான் ஜெயிக்க முடிந்தது. அதுவும் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். சட்டசபைக்கு தனது கட்சிக்காரர்கள் யாரையும் துணைக்கு அழைத்துச் செல்லக்கூட அவரால் முடியவில்லை.
ஆனால் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலி்ல் வெற்றி பெற்ற விஜயகாந்த், தன்னுடன் 28 பேரை சட்டசபைக்கு ஆணைக்கு அழைத்துச் செல்ல முடிந்தது. இதற்குக் காரணம் யார்? முதல்வர் அம்மாதான். விஜயகாந்துக்கு துணைக்கு ஆளனுப்பவும் அம்மாதான் வரவேண்டியிருக்கிறது. இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
முதல்வர் அம்மாவை எதிர்த்தால், தாம் முதல்வராகி விடலாம் என்று அவர் கனவு காண்கிறார். அந்த கனவு ஒரு நாளும் பலிக்காது” என்று விஜயகாந்துக்கு துணை கிடைத்த ரகசியத்தை மதுரை பெத்தனியாபுரத்தில் போட்டு உடைத்திருக்கிறார் இந்த முன்னாள் ஹீரோ.
மதுரை பெத்தனியாபுரத்தில் இவருக்கு என்ன சோலி? வேறொன்றுமில்லை. மதுரை மாநகர் எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில், அ.தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டம் அங்கு நடந்தது. அதில் அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன் செல்லப்பா, ஆகியோருடன் மேடையேறி, மேலேயுள்ள விளக்கத்தை கொடுத்தார் ராமராஜன்.
தமிழக அரசு பட்ஜெட்டுக்கும், விஜயகாந்த்துக்கு துணை கிடைத்ததற்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது என்பதை அவர் விளக்கவில்லை.
உற்சாகம் மேலிட்ட ராமராஜன், “பிற மாநிலங்கள் அம்மாவின் திட்டங்களை வியப்புடன் பார்க்கின்றன” என்று சொன்னபோது, அமைச்சர்களே கொஞ்சம் கலங்கித்தான் போனார்கள். “இந்தாள் எந்த திட்டங்களை சொல்கிறார்? சசிகலாவை மீண்டும் சேர்த்துக் கொண்ட திட்டமா? ராவணனை வெளியே விட்ட திட்டமா?”
நல்ல வேளையாக ரா.ராஜன் கூறிய திட்டம் வேறு. “இலவச அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாணவர்களுக்கு லேப்டாப், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், உதவித்தொகை ஆகியவை வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்கள் ஆகும். அதனால்தான் மற்றைய மாநிலங்கள் வியப்புடன் அம்மாவை அண்ணாந்து பார்க்கின்றன” என்று விளக்கம் கொடுத்தார்.
இலவச ஆடு கொடுக்கப்படுவதை மறந்துபோய் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். (கவலைப் படாதிங்க. யாராவது கார்டனில் போட்டுக் கொடுப்பாங்க. அடுத்த வாட்டி ஆட்டையும் சேத்துக்கலாம்)
சரிதான். இலவச திட்டங்களுக்கு வந்துவிட்டார். அடுத்து, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மெயின் திட்டங்கள் பற்றி பேசப் போகிறார் என்று பார்த்தால், அடுத்த ட்ராக்கில் பாய்ந்து விட்டார். “விஜயகாந்த் எனக்கு முன்பே ஹீரோவாகி விட்டார். அவர் நடித்த சிவப்பு மல்லி உள்பட 4 படங்களில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அப்போது அவருக்கு வசனம் சொல்லிக் கொடுத்தவன் நான். அவர் மதுரைக்காரர். மதுரை அருகே உள்ள மேலூர் தான் எனது சொந்த ஊர்” என்றார்.
அம்மா.. உங்களுக்கு புண்ணியமா போகும், அடுத்த தடவையாவது பட்ஜெட்டுக்கு விளக்கம் கொடுக்க, ‘பட்ஜெட்’ என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங் ஆச்சும் தெரிந்த யாரையாவது அனுப்பி வையுங்க.

கருத்துகள் இல்லை: