ஞாயிறு, 13 மே, 2012

நாடாளுமன்றத்தை பல நாள்கள் இயங்கவிடாமல் ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டினைக் கூறும் பா.ஜ.க.வின் யோக்கியதை பாரீர்!

தமிழர் தலைவர் அறிக்கை
நாடாளுமன்றக் கூட்டத்தை ஏதாவது காரணம் காட்டி நடக்க விடாமல் முடக்கி வரும் பா.ஜ.கட்சியைக் கண்டித்து தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாடாளுமன்றத்தை முடக்கும் பா.ஜ.க.
மத்தியில் பிரதான எதிர்க் கட்சியாக உள்ள பாரதீய ஜனதாவும், அதன் தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணிக் கட்சிகளும், நடைபெறும் நாடாளு மன்றக் கூட்டத் தொடரில் பல நாள்கள் அதை இயங்கவிடாமல்  சதா ஏதாவது ஒரு ஊழல் குற்றச் சாட்டினை- ஊடகங்களை விட்டு ஊதிப் பெருக்க வைத்து - கூறி தடுத்து வருகின்றன.
அடுத்த 2 ஆண்டுகளில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் இந்துத்துவா காவி ஆட்சியை நடத்திட இவைகளை தாம் மூலதனமாகப் பயன்படுத்திடலாம் என்ற உள்நோக்கத்தோடேயே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நடந்து வருகின்றனர்.
நம்மைப் பொறுத்தவரை ஊழலுக்கு வக்காலத்து வாங்குகிறவர்கள் அல்ல; ஆனால் ஊழல் என்று அனுமான, யூக நட்டங்களைக் கூட, அதிகார வர்க்கத்தில் தங்கள் ஆதரவாளர்களை விட்டு, கணக்குத் தணிக்கை, தங்கள் சார்புடைய இன்னோரன்ன பிற அமைப்புகள் உதவியால், மத்தியில் ஆட்சியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மீண்டும் வராமல் தடுக்கவே இதை ஒரு நடை முறை உத்தியாகவே கையாளுகின்றன.
ஊழலின் ஊற்றுக் கண்ணே பா.ஜ.க.தானே?

ஆனால், இப்படிக் குற்றம் சுமத்தும் இந்த பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மலைகளையும் சுரங்கங்களையும் சுரண்டி பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடிக்கும் கொள்ளை லாபக் குபேரர்களைத் தங்கள் அமைச்சரவையில் அமைச்சர்களாக ஆக்கியும், தங்கள் கட்சியின் முதலமைச்சர்கள் அவர்களிடமிருந்து கணிசமான நிதி உதவி பெற்று பயனாளிகளாகிய ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறார்கள் என்பது உச்சநீதிமன்றத்தில் சி.பி.அய். விசாரணைக்கு ஆணையிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன (கர்நாடகா உதாரணம் - எடியூரப்பா - சதானந்த கவுடா பதவிப் போட்டிகள்) சுட்டிக் காட்டப்படவேண்டியவை.

2.அது மட்டுமா? பா.ஜ.க.வின் தலைமைத் தேர்வை ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் செய்கிறது. அப்படி வந்தவர்தான் நிதின் கட்காரி என்ற பிரபல பார்ப்பன பணமுதலாளி. அவர் ராஜ்யசபை வேட்பாளர் தேர்தலில்  சில மாதங்களுக்கு முன் (ஜார்கண்ட்) மிக முக்கிய பா.ஜ.க. பாராளுமன்றவாதிகளில் ஒருவரான அலுவாலியாவைத் தேர்வு செய்யாமல் ஒரு பண முதலையை வேட்பாளராக அறிவித்தது கட்சிக்குள் புயலைக் கிளப்பியதா இல்லையா? பிறகு, மறுபடி அலுவாலியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தோற் கடிக்கப்பட்டாரே!

இதற்குப் பெயர் ஊழல் இல்லையா? காரணம் வெளிப்படையானதுதானே!


3. உ.பி. சட்டமன்றத் தேர்தல் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற போது, அங்கே மாயாவதி அரசின் சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு தந்த நிதியைக் கூட்டுக் கொள்ளையடித்தனர் என்ற குற்றச்சாட்டால் மாயாவதியால் அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாபுசிங் குஷ்வாகா என்பவரை பா.ஜ.க.வில் சேர்த்து, வேட்பாளராக்கிட  நிதின் கட்காரி முயன்றதும், எதிர்ப்புக் கிளம்பியதும் அமைதியாக்கப்பட்டதும் நாடறிந்த கதை அல்லவா?

இவர்கள்தான் நாட்டின் ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்தவர்கள்! புரிந்து கொள்ளுங்கள்!!

4. ஜார்க்கண்ட் (பா.ஜ.க. ஆளும்) மாநிலத்தில் நிலக்கரி ஊழல் - பல்லாயிரக்கணக்கான கோடிகள் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளன ஊடகங்களில் இது பற்றி நிறைய செய்திகள் அடுக்கடுக்காக வருகின்றன.

ராஜஸ்தானில் உட்கட்சிச் சண்டை

5. ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் இந்நாள் எதிர்க் கட்சித் தலைவர் வசுந்தரா ராஜே போர்க்கொடி தூக்கி, பல பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் அவர் பக்கம் நின்று அங்கே (அடுத்த ஆண்டு மாநில சட்டசபைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில்) கட்சி கலகலத்துள்ளதே! பதவிச் சண்டைகள்தானே!

ஊழலுக்காக சிறைக்குச் சென்ற பா.ஜ.க. முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன்.

6. கட்சித் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டு, ஊழல், லஞ்சம் நிரூபிக்கப்பட்டு, சிறப்பு நீதி மன்றத்தால் 4 ஆண்டுகள் தண்டனை அடைந்து சிறையில் அடைக்கப் பட்டுள்ளாரே! (டெல்லி உயர்நீதிமன்றமும் அந்த தண்டனையை நேற்று உறுதி செய்துவிட்டதே!)

இதுதான் பா.ஜ.க. தனித்தன்மையான, வித்தியாச மான கட்சி (“We are a different Party”) என்று அவாள் முழங்கினார்களே அதற்கு எடுத்துக்காட்டா?

பாபர் மசூதி இடிப்பு வழக்குக் குற்றவாளிகள்

1992 இல் திட்டமிட்டு சதி செய்து இடிக்கப் பட்டதாக பாபர் மசூதி வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப் பட்டுள்ள பா.ஜ.க.வின் முன்வரிசை மூத்த தலைவர்கள் மீதான வழக்கு ஊறுகாய் ஜாடியில் ஊறாமல் உடனடியாக எடுத்து அன்றாடம் விசாரணை என்று விசாரணை நடந்தால் அதன்  இன்றைய கர்ச்சனைத் தலைவர்கள் காராக்கிரகம் நுழைபவர்களாக ஆகி விடுவார்களே?

20 ஆண்டுகளாக இப்படி பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி, நாட்டில் மதக் கலவரம் காரணமாக, இரத்த ஆறு ஓடக் காரணமான வழக்கு தாமதிக்கப்பட்டு நீதி வழங்கினால் அது மறுக்கப்பட்ட நீதியாகி விடாதா?

ஜஸ்டிஸ் லிபரான் கமிஷனே இப்போது மக்களுக்கு மறந்து போய்விட்டதே!

நரேந்திர மோடியைத் தூக்கிப் பிடிக்கும் பார்ப்பன ஊடகங்கள்

குஜராத் மோடியின் அரசியல் வித்தைகள் பற்றி அவ்வப்போது வரும் செய்திகள் பா.ஜ.க.வும், பார்ப்பன ஊடகங்களும் என்னதான் தூக்கிப் பிடித்தாலும் உண்மை கள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளனவே!

குற்றம் சாட்டப்படும் காங்கிரசைவிட பதவிச் சண்டைகள், கோஷ்டிச் சண்டைகள் நாளும் ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.வில் அரங்கேறியவண்ணம் உள்ளதே!

அங்கேயே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உட் கட்சி போராட்டம் மறைமுகமாக நடந்தவண்ணம் உள்ளது என்பது மனச்சாட்சியோடு பேசுபவர்களுக்கே அங்கு தெரியுமே?

மருத்துவரே முதலில் உம்மைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்ற பழமொழிதான் நமக்கு நினைவுக்கு வருகிறது!  இந்தக் கூத்துக்களையும், ஆளுங்கட்சியைக் குற்றம் சுமத்தி இந்த இந்துத் துவவாதிகளின் இமாலய ஊழல்களை ஜமுக்காளத் தால்மூட நினைக்கும் வேடிக்கை கண்டு எவர்தான் விலா நோகச் சிரியாமல் இருப்பார்கள்?  வாக்காளர்களின் மறதி தான் இவர்களது மூலதனமா?

கி.வீரமணி

கருத்துகள் இல்லை: