சனி, 19 மே, 2012

எங்கே தியாகு? மன உளைச்சலில் கவிஞர் தாமரை

தமிழ்நாட்டில் தீவிர அரசியல் பேசும் இளைஞர்களின் ஆதர்ஷம்... தோழர் தியாகு. தமிழ்த் தேசிய அரசியலை சித்தாந்தம் அறிந்துப் பேசும் தலைவர்களில் முக்கியமானவர். ஈழப் பிரச்னையில் அவர் காட்டிய தீவிரமும் அக்கறையும் குறிப்பிடத் தகுந்தது. ஆனால், கடந்த 13-ம் தேதியில் இருந்து தோழர் தியாகு எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை.

நாகப்பட்டினம் மாவட்டத்தின் சிறிய கிராமத்தில் இருந்து வர்க்கப் போராளியாக எழுந்து வந்தவர் தியாகு. ஓர் அழித்தொழிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனைக் கைதியானார். தன்னுடன் சிறையில் இருந்த லெனின் என்ற தோழரின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டார். விடுதலையாகி வெளியில் வந்து இருவரும் இணைந்து வாழ்ந்தபோதிலும், அவர்களுக்கு இடையிலான மனக் கசப்பால் பிரிந்தனர். அதன் பிறகுதான், திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரையும் தியாகுவும் இணைந்து வாழ்ந்தனர். (தாமரைக்கும் அது இரண்டாவது திருமணம்).
இப்படிப்பட்ட நிலையில்​தான், தியாகு யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்றுவிட்டார் என் கிறார்கள். இதை மையப்படுத்தி அரசியல் வட் டாரத்தில் பல தகவல்கள் உலா வருகின்றன.
'தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்’ என்பது தியாகு நடத்திய அமைப்பு. அவர்தான் இந்த அமைப்பின் பொதுச்செயலாளர். கடந்த 13-ம் தேதி அன்று இந்த அமைப்பின் மற்ற நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து தியாகுவை அமைப்பில் இருந்து நீக்கிவிட்டதாகச் சொல்லப்​படுகிறது. இதைப்பற்றி, மாநில அமைப்புக் குழு உறுப்பினரும், ஈரோடு மாவட்டச் செய​லாளருமான மோகன்​​ரா ஜிடம் பேசியபோது, ''கடந்த ஒரு வருடமாக தியாகு அமைப்பு வேலைகள் எதையும் செய்யவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுவதில் மட் டும்தான் ஆர்வம் காட்டினார். அவரி டம் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது முறையான பதில் இல்லை. அதனால், அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறோம். அதன்பிறகு, அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் வரும் 27-ம் தேதி ஈரோட்டில் நடக்கிறது. அதில் அடுத்தக் கட்ட முடிவை எடுப்போம். மற்றபடி, தோழர் தியாகுவைப்பற்றி வேறு வதந்திகள் இருக்கலாம். அதற்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது'' என்றார்.
வேறு வதந்திகள் என இவர் சொல்வதுதான் இப்போது பிரதானமாகப் பேசப்படுகிறது. ''ஒரு பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்காக கொல்லிமலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தியாகுவைத் தேடி வந்தார். அந்தப் பெண்ணுடன் தியாகு தலைமறை​வாகி விட்டார்'' என்று சிலர் சொல்கிறார்கள். ''அப்படி ஒரு பெண் வந்தது உண்மைதான். ஆனால் அந்தப் பெண்ணுக்கும் தியாகுவுக்கும் தவறான உறவு இருப்பதாக தாமரைதான் தவறாகக் கற்பனை செய்துகொண்டு அவரைத் துன்புறுத்தி விட்டார்'' என்றும் சிலர் சொல்கிறார்கள். இரண்டில் எது உண்மை என்று தெரியவில்லை. தியாகுவுக்கு போன் செய்தோம். அந்த லைனையும் தாமரைதான் எடுக்கிறார். ''நான் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன். இதைப்பற்றி பேசும் மனநிலையில் இல்லை'' என்று அவரிடம் இருந்து பதில் வந்தது.
தியாகு வந்து சொன்னால்தான் உண்மை தெரியும்!
- நமது நிருபர்
thanks vikatan + narmatha  haridhwar

கருத்துகள் இல்லை: