செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

Valentine’s Day காதல் திருமணங்கள் அவசியம்

காதலை நேசிப்போருக்கு மட்டுமே உரிய நாள் அல்ல பிப்ரவரி 14!
சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை அகற்ற "ஆதலினால் காதல் செய்வீர்" என்று மலர்க்கொடி தூக்குவோரும் "அய்யோ! சமூகக் கட்டுமானம் சரிந்து போகிறதே" என்று கலாச்சார காவலர்களாக அவதரிப்போரும் உச்சரிக்கும் நாளும்கூட!
காதலர்  தினத்தின் பின்னனி
காதலர்களை இணைத்து வைத்ததற்காக மரித்துப் போன பாதிரியாரின் நினைவுநாள்தான் பிப்ரவரி 14. கி.பி. 3-ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசன் இரண்டாம் கிளாடியஸ் காலத்து காதல் கதை!
திருமணத்துக்கு தடைவிதித்து பேரரசன் பிறப்பித்த ஆணையை மீறி காதலர்களை இணைத்து வைத்ததற்காக மரணதண்டனைப் பெற்ற பாதிரியாரின் பெயர்தான் வேலன்டைன்ஸ்!
கி.பி.5-ம் நூற்றாண்டு வரை கிறித்துவர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு விடுமுறை நாளாக அனுசரிக்கப்பட்ட வரலாறும் இருந்திருக்கிறது. மேற்குலக நாடுகளில் மட்டுமே கடைபிடிக்கப்பட்ட பிப்ரவரி 14- காதலர் தினம் என்பது இந்தியாவின் தாராளமயப் பொருளாதாரக் கதவுகள் திறக்கப்பட்ட காலத்தில் குடியேறிவிட்டது.

ஆண்டுதோறும் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டத்தைப் போல் இளைஞர் பட்டாளம் கூத்தாடி மகிழ்கிற ஒரு நாளாகிவிட்டது.

காதல்

ஆதாம்-ஏவாள் காலத்திலிருந்து இன்றைய இளசுகள் வரை காதலை சுமக்காத தலைமுறையே இருந்தது இல்லை. சீர்திருத்தம், புரட்சி பேசிய போராளிகள் காதலை நேசிக்காமல் இருந்தது இல்லை. ஆன்மீகம், தத்துவம் பேசியவர்களும் காதலிலிருந்து விலக்குப் பெற்றுவிடவில்லை.

"'தொடுதலும், புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச்சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும்.' -

"'தருதலும் பெறுதலுமற்ற கருணைப் பெருவெளியில் சிறகுச்சிக்கலின்றிப் பறத்தலே காதல்! முழு விடுதலையை மூச்சிழுத்துப் பூப்பதுதான் காதல்.' இவை கவிஞர் அறிவுமதியின் வரிகள்.

ரசிக்க வேண்டிய, அனுபவிக்க வேண்டிய ஒரு மென்தன்மையான காதலைக் கொண்டாடுவது என்பது இப்போது வன்முறை வெடிக்கும் ஒரு நாளாக விஸ்வரூபமெடுத்துவிட்டதுதான் காதலுக்கு நேர்ந்த சோகம்!

காதலர் தினத்தின் விஸ்வரூபம்

உலக நாடுகளிலேயே சாதிய ஏற்றத் தாழ்வுகளை ஆழப் பதிந்துகிடக்கும் ஆணிவேரில் சுமந்துகொண்டிருப்பது இந்திய சமூக அமைப்பு. இந்தியாவில் முளைத்த அல்லது கால்பதித்த எந்த மதத்தையும் இந்தப் பிரிவினை விட்டுவைக்கவில்லை. மதங்கள் சாதிய அமைப்புகளோடு பின்னிப் பிணைந்தே இருக்கிறது.

இதனால் சமூகம் பற்றி சிந்தித்த தந்தை பெரியார் இத்தகைய ஏற்றத் தாழ்வுக் கட்டுமானங்களை கலகலக்க காதல் திருமணங்கள் அவசியம் என்று வலியுறுத்தினார். பெரியாரைப் பின்பற்றுகிற இயக்கங்கள் காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்கின்றனர்.

ஆனால் இந்தியாவின் கலாசாரம் என்பது தனித்துவமானது. இதனை சீர்குலைக்கும் வகையில் மேற்குல நாடுகளைப் போல் நடுவீதியில் கட்டிப்பிடித்து பொது இடங்களில் கும்மாளமிட்டுக் கொண்டிருப்பது கலாசார சீர்கேடு என்பது எதிர்ப்பாளர்களின் கருத்து.

காதலர் தினத்தன்ரு காதலர்களை காயப்படுத்தும் விதமாக நாய்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கிற அளவுக்கு இறங்கிப் போகின்றனர் கலாசார காவலர்கள்! சமூகக் காவலர்களும் கலாசார காவலர்களும் மோதுகிற களமல்ல காதலர் தினம்..

விநாயகர் சதுர்த்தி நாள், பாபர் மசூதி இடிப்பு நாளுக்கு இணையாக பதட்டத்தை உருவாக்காதீர்கள்

கொள்கைகளைப் பேசலாம்! வெளிப்படுத்தலாம்!

காதலர் தினத்தைக் கொண்டாடுகிறோம் என்று கூறிக் கொண்டு எதிர்தரப்பை உசுப்பேற்றாமல் இருப்பதும் காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என்று கூறிக் கொண்டு காதலை கொச்சைப்படுத்தாமல் இருப்பதுமே அனைவரது எதிர்பார்ப்பு. காதலை அனுபவித்து கொண்டாட விழைவோரின் கனவுகளை கானல் நீராக்கிவிட வேண்டாம்!

கருத்துகள் இல்லை: