புதன், 15 பிப்ரவரி, 2012

எங்கெங்கும் இல்லை கரண்ட்-தொழிற்சாலைகள் முடக்கம்: எங்கு பார்த்தாலும் போராட்டம்!

சென்னை: சென்னையைத் தவிர்த்து தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள கடும் மின்வெட்டால் தொழிற்சாலைகள் கிட்டத்தட்ட முழுமையாக ஸ்தம்பித்துப் போயுள்ளன. அனைத்து வகையான தொழில்களும் முடங்கிப் போயுள்ளன. மக்களும், தொழிலாளர்களும் சாலைகளுக்கு வந்து போராடுவது கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் - சென்னை மற்றும் புறநகர்களைத் தவிர்த்து- பல மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 8 மணி நேரம் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் அதையும் தாண்டி மின்தடை அமலில் உள்ளது.


இதன் காரணமாக பள்ளி மாணவர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், மக்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

மிக்ஸியைப் போட முடியவில்லை, கிரைண்டரைப் பயன்படுத்த முடியவில்லை, பேன் ஓடவில்லை, தொழிற்சாலைகள் இயங்கவில்லை என எங்கு பார்த்தாலும் ஒரே குமுறலாக உள்ளது. மாணவர்கள் குறிப்பாக பத்து மற்றும் பிளஸ்டூ படித்து வரும் மாணவர்களின் நிலை பெரும் கவலை தருவதாக உள்ளது.

இந்த தொடர் மின்வெட்டைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அத்தனை மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில், 300 பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில், பாத்திரங்கள் உற்பத்தி செய்து, விற்பனைக்காக, தமிழகம் தவிர வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இத்தொழிலை நம்பி, 7,000 தொழிலாளர்கள் உள்ளனர். நாளொன்றுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு, பாத்திரங்கள் உற்பத்தியாகின்றன.

பாத்திரங்களை இணைப்பதற்கான வெல்டிங், பாத்திரங்களை வடிவமைக்க, பாலிஷ் செய்ய, உற்பத்தி செய்த பாத்திரத்தில் டிசைன் செய்ய, என, அனைத்து பணிகளுக்கும், மின்சாரம் அவசியம்.

தற்போதைய தொடர் மின்வெட்டால் இவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. பாத்திர உற்பத்தி 10 சதவீதம் மட்டுமே நடக்கிறது. தொழில் நடத்த முடியாமல் பலர், பட்டறையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு வேலையில்லா நிலை ஏற்பட்டுள்ளது.

மின்வெட்டை கண்டித்தும், தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரியும், பாத்திர உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், தொழிற்சங்கத்தினர் அடங்கிய கூட்டமைப்பினர், நேற்று, பாத்திர உற்பத்தி நிறுத்தம், கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர். திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதியில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். இங்கு பிடிக்கப்படும், நண்டு, கனவாய், இறால், வாவல் போன்ற மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மற்ற வகை மீன்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் மீன்கள், ஐஸ் மூலம் பதப்படுத்தப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. தொடர் மின்தடையால், முழுமையாக ஐஸ் தயாரிக்க முடிவதில்லை. ஜெனரேட்டர் இயக்கினால் அதிக செலவாவதால், ஐஸ் கம்பெனிகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

ஐஸ் இல்லாததால், மீன்கள் பதப்படுத்த முடியாமல் அழுகி வீணாகின்றன. தினமும் 70 முதல் 80 டன் மீன்கள் அனுப்பப்பட்டன. தற்போது 40 முதல் 50 டன் மட்டுமே அனுப்பப்படுகின்றன.

தமிழகத்தில் தொடர் மின்வெட்டால், சரக்கு லாரி போக்குவரத்து தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக, மதுரை லாரிஉரிமையாளர் சங்கத்தினர் குமுறுகின்றனர். மின்வெட்டால் தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகளில் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், லாரி மூலம் கொண்டு வரப்படவில்லை.

இதனாலும், மின்வெட்டாலும், அனைத்து தொழிற்சாலைகளும் மூடும் அபாயம் உள்ளது. சரக்கு போக்குவரத்தில் 50 சதவீதம், தொழிற்சாலைகளை நம்பி உள்ளது. பொருட்களின் உற்பத்தி குறைவால், லாரி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் மீதான கடனுக்கு, முறையான தவணை தொகைகளை கட்ட இயலவில்லை. பொருளாதார அடிப்படையிலும் தவிக்கிறோம் என்கிறார்கள் அவர்கள்.

ராஜபாளையம் சத்திரப்பட்டி பகுதிகளில் பேண்டேஜ் துணி தொழிலில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாக, சத்திரப்பட்டியில் தினம் எட்டு முதல் பத்து மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. தொழிலாளர்கள் வேலை இல்லாமலும், குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்ய முடியாமலும் உற்பத்தியாளர்கள் சிரமப்படுகின்றனர்.

நேற்று ஓசூர் பகுதியில் அனைத்துத் தொழிற்சாலைகளையும் மூடி தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் செய்தனர்.

போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கும் சூழ்நிலையில் இதுகுறித்து விரைவான ஒரு முடிவுக்கும், நடவடிக்கைக்கும் தமிழக அரசு வர வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்

கருத்துகள் இல்லை: