புதன், 15 பிப்ரவரி, 2012

வீரபாண்டியார் குமுறல் திமுக தலைமை மனதை புண்படுத்தி விட்டது


Veerapandi Arumugam
சேலம்: திமுக தலைமை எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் விட்டது எங்களது மனதைப் புண்படுத்தி விட்டது என்று முன்னாள் அமைச்சரும், திமுகவின் பெரும் ஜாம்பவான்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சுற்றி திமுக இளைஞர் அணிக்கான நிர்வாகிகளை கட்சிப் பொருளாளரும், இளைஞர் அணி அமைப்பாளருமான ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில், மு.க.அழகிரியின் ஆதரவாளரான வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா, சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி அளித்தது.இதையடுத்து இந்த நேர்காணல் நடத்தக் கூடாது. இது கட்சி விரோத செயல் என்று எச்சரித்து அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து ராஜா தனது நேர்காணலை நிறுத்தினார்.

இந்த நிலையில் திமுக தலைமை விடுத்த எச்சரிக்கை மனதைப் புண்படுத்தி விட்டதாக வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார். விருப்ப மனுக்கள் மட்டுமே வாங்கப்பட்டதாகவும், தன்னிச்சையாக தேர்வு எதுவும் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே சென்னையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தின்போது வீரபாண்டியாருக்கு எதிராக ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆவேசத்துடன் கூச்சலிட்டு வீரபாண்டியார் தரப்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். இந்த நிலையில் தற்போதைய இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல் விவகாரத்தால் மீண்டும் சேலத்தில் பூசல் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

கருத்துகள் இல்லை: