புதன், 15 பிப்ரவரி, 2012

ரோசய்யாவுடன் ஜெயேந்திரர் சந்திப்பு-குடியரசுத் தலைவருக்கு சங்கரராமன் மனைவி கடிதம்

Sankararaman
சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் ஏற்கனவே நீதி தாமதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் எனது கணவரின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஜெயேந்திரர், தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தது போன்ற புகைப்படம் வெளியாகியிருப்பது இந்த வழக்கில் நீதி கிடைக்காது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. எனவே ஆளுநர் ரோசய்யாவை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்று தடுக்க வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு சங்கரராமன் மனைவி பத்மா கடிதம் அனுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் வரதாஜ பெருமாள் கோவிலில் வைத்து சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அவரது தம்பி ரகு, காஞ்சிபுரம் சங்கர மட மேலாளர் சுந்தரசே அய்யர், அப்பு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது அத்தனை பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.இந்த கொலை வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும், ஜெயேந்திரரும் ஒரு பெண்ணும் தொலைபேசியில் பேசியதாக சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பான ஆடியோ டேப் வெளியாகியது. இதையடுத்து அந்த நீதிபதி மாற்றப்பட்டார்.

இந்தச் சூழ்நிலையில், பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டார். அவரை ஜெயேந்திரர் சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது. இருவரும் சிரித்துப் பேசியபடி அந்த புகைப்படத்தில் உள்ளனர்.

இதையடுத்து சங்கரராமனின் மனைவி பத்மா குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு ஒரு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், எனது கணவர் சங்கரராமன் கொலை வழக்கில் ஏற்கனவே நீதி தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. சாட்சிகளைக் கலைக்க ஜெயேந்திரர் தரப்பு பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், எனது கணவரின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஜெயேந்திரர், தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தது போன்ற புகைப்படம் வெளியாகியிருப்பது இந்த வழக்கில் நீதி கிடைக்காது என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

எனவே ஆளுநர் ரோசய்யாவை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது, கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை சந்திக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: