திங்கள், 13 பிப்ரவரி, 2012

சினிமா வன்முறை காட்சிகள்தான் என்னை கத்தி எடுக்க வைத்தன! - ஆசிரியையைக் கொன்ற மாணவன் வாக்குமூலம்


Student Kill Teached
சென்னை: வருத்தமா இருக்கு... எங்க டீச்சர் செத்துடுவாங்கன்னு நினைக்கவே இல்ல.. போலீஸ் வந்து கைது பண்ணுவாங்கன்னும் தெரியாது, என அப்பாவியாக வாக்குமூலம் அளித்துள்ளான், சமீபத்தில் தனது வகுப்பு ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன்.
மேலும் ஆசிரியையை கொல்ல கத்தி எடுக்கத் தூண்டியதே தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகள்தான் என அந்த மாணவன் கூறியுள்ளான்.சென்னை நகரை மட்டுமல்ல, பள்ளி கல்வி முறையையே உலுக்கியுள்ளது, வகுப்பு ஆசிரியையை அவரது மாணவனே குத்திக் கொன்ற சம்பவம்.
கடந்த வியாழக்கிழமை பாரிமுனையில் உள்ள ஆர்மேனியன் தெருவில் இருக்கும் செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்த கொலை நிகழ்ந்தது. அந்த பள்ளியின் ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரிடம் படிக்கும் 9-வது வகுப்பு மாணவனே இந்த கொடூரத்தை செய்துவிட்டான்.

அந்த பள்ளி மாணவன் தற்போது கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது பிஞ்சு மனது நஞ்சாகி கொலை செய்யும் அளவுக்கு அவன் எவ்வாறு தூண்டப்பட்டான் என்பது அவனது வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.

சிறுவர் சீர்திருத்த இல்லத்தில்...

அந்த மாணவன் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு தற்போது புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அதே சீர்திருத்த இல்ல வளாகத்தில் செயல்படும் சீர்திருத்த நீதிமன்றம் அவன் மீதான வழக்கை விசாரிக்க உள்ளது.

அந்த சீர்திருத்த இல்லத்தில் பல்வேறு குற்றங்களில் மாட்டியுள்ள 60 சிறுவர்களும், 2 சிறுமிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் 60 பேரும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒரு பிரிவாகவும், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இன்னொரு பிரிவாகவும் தனித்தனியாக அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15 வயது நிரம்பியவன் என்பதால், 10 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் அந்த இல்லத்தின் முதல் மாடியில் தங்க வைக்கப்பட்டுள்ளான்.

பொதுவாக அறியாத வயதில் புரியாமல், தெரியாமல் சிறுவர்- சிறுமிகள் குற்றங்களில் ஈடுபட்டு இந்த இல்லத்தில் அடைக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் விரும்பிய நேரத்தில் இவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

பாரிமுனை பள்ளி மாணவனையும் முதல் நாளன்று அவனது பெற்றோரும், 3 அக்காள்களும் மற்றும் உறவினர்களும் பார்த்து பேச அனுமதிக்கப்பட்டனர்.

சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டவுடன் அவன் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 3 பெண் அதிகாரிகள் அவனிடம் அன்பாக பேசினார்கள். அவனது மனம்கோணாத வகையில் நடந்த சம்பவம் பற்றி அவனிடம் அன்பாக பேசி கேட்டறிந்தார்கள். முதலில் இல்லத்துக்கு சென்றவுடன் மாணவன் வருத்தத்தோடும், மனஇறுக்கத்தோடும் காணப்பட்டான். பெண் அதிகாரிகளின் அரவணைப்பான பேச்சால், இயல்பான அவன் நடந்த சம்பவம் பற்றி விளக்கி கூறியுள்ளான்.

கொலை செய்தது ஏன்?

அவனது வாக்குமூலத்தின் ஒரு பகுதி:

ஆசிரியை உமா மகேஸ்வரி மிகவும் நல்லவர். அதே நேரத்தில் கண்டிப்பாக பேசுவார். முதலில் அவரை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. வீட்டில் நான் ஒரே பிள்ளை. அப்பா-அம்மா, என்னை செல்லமாக வளர்த்தார்கள்.

வீட்டில் எனக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கும். நான் அந்த அறையில் இருந்துதான் படிப்பேன், படுத்து தூங்குவேன்.

மனசைக் கெடுத்த சினிமா

கொலை, வெட்டுக்குத்து, வில்லனை கதாநாயகன் அடித்து நொறுக்கும் சண்டைக்காட்சிகள் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில படங்களையே நான் விரும்பி பார்த்தேன். கடைசியாக `அக்கினி பத்' என்ற இந்தி படத்தை நான் பார்த்தேன்.

அதில், கதாநாயகன், வில்லனை கத்தியால் நெற்றியில் குத்துவான். அந்த காட்சி எனது மனதில் ஆழமாக பதிவானது.

ரிப்போர்ட் கார்டில் தவறாக எழுதினார்

நான் இந்தி பாடத்தை சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி என்னை கண்டிப்பார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 3 முறை எனது `ரிப்போர்ட்' கார்டில் என்னைப்பற்றி தவறாக எழுதிவிட்டார். என்னிடம் பாசத்தை கொட்டும் எனது தந்தைகூட இதை பார்த்துவிட்டு என்மீது கோபப்பட ஆரம்பித்தார்.

எனக்கு தினமும் செலவுக்காக நான் கேட்கும் பணத்தை என் அப்பா கொடுப்பார். ரிப்போர்ட் கார்டில் ஆசிரியை எழுதியதை பார்த்தவுடன் எனக்கு செலவுக்கு பணம் கொடுப்பதை இனிமேல் தரமாட்டேன் என்று எனது தந்தை கண்டிப்பாக கூறினார்.

இது, மனதுக்கு ஒரு கஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆசிரியை மீது கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த புதன்கிழமை அன்று இந்தி பாடம் சரியாக படிக்காத என்னைப் போன்ற 7 மாணவர்களை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு வகுப்புக்காக ஆசிரியை உமா மகேஸ்வரி வரச்சொன்னார். அப்போது அவர் என்னை திட்டினார். இனி ஒழுங்காக படிக்காவிட்டால், பெயிலாகி விடுவாய் என்று சொன்னார். இது, எனது மனதில் ஏற்கனவே இருந்த கோபத்தோடு பயத்தையும் உண்டாக்கியது.

மாணவர்கள் கிண்டல்

ஆசிரியை இவ்வாறு சொன்னதை பார்த்து, எனது சகமாணவர்கள் என்னை கிண்டல் செய்தனர். இது, எனக்கு அவமானத்தையும், மேலும் கோபத்தையும் தூண்டியது.

அப்போதுதான் இந்தி படத்தில் வரும் காட்சியைப்போல, ஆசிரியையை கத்தியால் குத்தவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஆசிரியை செத்துப்போவார். போலீசார் பிடிப்பார்கள். நம்மை இப்படி இல்லத்தில் அடைப்பார்கள் என்று எதுவும் எனக்கு தெரியாது. இப்போது வருத்தமாக உள்ளது," என்று கூறியுள்ளான்.

அந்த மாணவனுக்கு கவுன்சலிங் கொடுத்து இயல்பாக இருக்க வைத்துள்ளனர் போலீசார்.

நேற்று காலையிலும், நேற்று முன்தினம் காலையிலும் அவனுக்கு ஒரு மணி நேரம் யோகா சொல்லிக்கொடுக்கப்பட்டது. மற்ற மாணவர்களோடு விளையாடவும் அனுமதிக்கப்பட்டான்.

டிவி பார்க்கவும், விளையாடவும் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவன் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் தெரிந்த 2 ஆசிரியைகள் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். அந்த மாணவனுக்கு புதிய சீருடை தைத்து வழங்கப்பட்டது.

ஒரு குற்றவாளி என அந்த மாணவனுக்கு நினைப்பு வராத அளவுக்கு பார்த்துக் கொள்கின்றனர் அந்த இல்லத்தில். அவனுக்கு என்ன தண்டனை என்பதை சீர்திருத்த நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.

கருத்துகள் இல்லை: