வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

ரஷ்ய அணு விஞ்ஞானிகளை நாடு திரும்ப விடமாட்டோம்': மத்திய அரசு உறுதி

கூடங்குளத்தை விட்டு ரஷ்ய விஞ்ஞானிகளும், நிபுணர்களும் வெளியேற மாட்டார்கள். அவர்களை நாடு திரும்பவிட மாட்டோம்' என, பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி உறுதிபடத் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று நிருபர்களிடம் டில்லியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: கூடங்குளத்தில் உள்ள ரஷ்ய நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் தங்களது சொந்த நாட்டிற்கே திரும்பப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனாலும், அவ்வாறு நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அவர்கள் கூடங்குளத்திலேயே தங்கியிருக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.
விஞ்ஞானிகளையும், நிபுணர்களையும் திருப்பி அனுப்பும் அளவுக்கு நிலைமை செல்லாது. இதுகுறித்து ரஷ்ய அரசுடன் முறைப்படி அதிகாரிகள் பேசிவருகின்றனர். எனவே, இப்பிரச்னை உரிய முறையில் அணுகப்பட்டு, தீர்வு காணப்படும்.

கூடங்குளம் பிரச்னை குறித்து, 15 பேர் அடங்கிய நிபுணர் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்தார். அந்த குழு 77 பக்க அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது. அதன்படி, கூடங்குளம் அணுமின் நிலையம் பரிபூரண பாதுகாப்புடன் உள்ளது. அதில், நவீன தொழில்நுட்பத்துடன் இந்த அணுமின் நிலையம் இருப்பதால், சுற்றுச்சூழல் கேடுகள் ஏற்படாது. கடல்வளம் பாதிக்கப்படுவதோ, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. தமிழக அரசும் அணு விஞ்ஞானி சீனிவாசன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவும் ஆராய்ந்து அறிக்கை அளிக்கவுள்ளது. கூடங்குளம் விஷயத்தில், மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிபூரண ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

தமிழகத்தின் மின்தேவை 11 ஆயிரத்து 500 மெகாவாட். இதில், 7,000 மெகாவாட் மட்டுமே சமாளிக்க முடிகிறது. மீதி பற்றாக்குறையாக உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் துவங்கியதும், 500 மெகாவாட் வரை தமிழகத்திற்கு கிடைக்கும். தமிழகத்தின் மின்தேவைக்கு என, பகலில் 100 மெகாவாட்டும், இரவில் 750 மெகாவாட்டும் கூடுதலாக மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படுகிறது. பகல் தேவைக்கு கூடுதலாக மேலும் 100 மெகாவாட் அளிக்க வேண்மென, மின் துறை அமைச்சர் ஷிண்டேயிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை: