இஸ்லாத்தை எதிர்த்து எழுதினால் குண்டாந்தடியை எடுப்போம் என்பது பச்சையான ரவுடித்தனம். இதை மதத்தின் பெயரால் நியாயப்படுத்த நினைக்கும் எவருக்கும் தகுதி இல்லை.
கடந்த 27/01/2012 வெள்ளிக் கிழமை மதியம் கடையநல்லூர் கடைவீதியில் (மெயின் பஜார்) இருக்கும் மஸ்ஜிதுன் முபாரக் பள்ளிவாசலின் ஜும்மா பேருரையில் ஓர் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ”மக்கட்டி துராப்ஷா என்பவர் வைத்திருக்கும் கறிக்கோழி கடையில் யாரும் கோழி வாங்கி சமைக்க வேண்டாம். அவர் இஸ்லாத்துக்கு விரோதமானவர் என்பதால் அவரிடம் கோழி வாங்கி உண்பது ஹராமாகும்( இஸ்லாமிய முறைப்படி விலக்கப்பட்ட உணவு)” என்று போகிறது அந்த அறிவிப்பு. அறிவித்தவர் மஸ்ஜிதுன் முபாரக் கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சைபுல்லா ஹாஜா என்பவர்.இப்படி ஓர் அறிவிப்பை வெளியிடுவதற்கான காரணமாக கூறப்படுவது என்ன? “இறையில்லா இஸ்லாம்” எனும் தளத்தில் தஜ்ஜால் என்பவர் எழுதி வெளியிட்ட “லூத் என்றொரு லூஸ்” என்ற கட்டுரையை தோழர் துராப்ஷா தன்னுடைய முகநூல் (ஃபேஸ்புக்) சமூக தளத்தில் இணைப்பு கொடுத்திருந்தார், அவ்வளவு தான். இதற்குத்தான் மேற்படி நடவடிக்கை. முகநூல் போன்ற சமூக தளங்களில் யாராரெல்லாம், என்னென்ன விதமான விசயங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இணையம் பாவிக்கும் யாரும் அறிந்தது தான். ஃபேஸ்புக் நட்பு வட்டத்தின் மூலம் தனக்கு பிடித்த, பிடிக்காத, ஒத்த கருத்துள்ள, எதிர் கருத்துள்ள அனைவரது இணைப்புகளையும் ஒருவர் வைத்திருக்கலாம். அது அவரது தனிப்பட்ட விருப்பம், உரிமை சார்ந்தது.
ஆக, மேம்போக்காக பார்க்கும் போதே இந்த நடவடிக்கைக்கு கூறப்படும் காரணம் உண்மையானதோ, சரியானதோ அல்ல என்பது யாருக்கும் எளிதாக விளங்கும்.
எனில், அற்பமான இந்த பிரச்சனை ஜும்மாவில் பொது அறிவிப்பு கொடுத்து தடை செய்யும் அளவுக்கு போனது ஏன்? அதை அறியவேண்டுமானால் ஆழங்களில் புதைந்திருக்கும் வேர்கள் தோண்டி எடுக்கப்பட்டாக வேண்டும்.
முதலில் அறிமுகப் படலம். தோழர் துராப்ஷா கடையநல்லூர் சிபிஐ (வலது கம்யூனிஸ்ட் கட்சி) யில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர். கடவுள் நம்பிக்கையற்றவராக, மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவராக இருந்தாலும் சமுதாயத்தினருக்கு உதவிகள் செய்வதிலும், துணை நிற்பதிலும் துடிப்பாக செயல்படுபவர். சிபிஐ-யில் இருக்கும் போதுகூட கட்சியின் நடவடிக்கைகளை எதிர்த்து நிர்வாகக் குழுவில் நேர்மையாக விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்தார். முடிவில் சிபிஐயிலிருந்து வெளியேறி தற்போது புரட்சிகர இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய சகோதரி தேர்தலில் நின்றபோதும் கூட உறவினர்களையெல்லாம் எதிர்த்து “ஓட்டுப்போடாதே புரட்சி செய்” என்று பிரச்சாரம் செய்தவர்.
சைபுல்லா ஹாஜா கடையநல்லூர் மக்கள் மத்தியில் பல காலமாக மத அறிஞராக மதிக்கப்பட்டவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் நிர்வாக மட்டத்தில் மேலாண்மைக் குழுவில் செயலாற்றியவர். என்றாலும் அவர்மீது தனிப்பட்ட சில விமர்சனங்களும் இசுலாமிய மக்களிடம் இருக்கின்றன. தன் குடும்ப திருமணத்தில் இஸ்லாமிய நெறிமுறைகளை பேணவில்லை என்று தவ்ஹீத் ஜமாத் வட்டாரத்திலேயே சலசலப்பு எழுந்ததுண்டு. இது குறித்து ஆன்லைன் பிஜேவில் இவரை நிறையவே தாளித்திருக்கிறார்கள். ஆமினா என்ற பெண்ணுடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்து, மதுரையில் ஒரு தங்கும் விடுதியில் அந்தப் பெண்ணுடன் தங்கியிருந்ததாக சில ஆண்டுகளுக்கு முன் கடையநல்லூரில் பரபரப்புடன் பேசப்பட்டது.
முபாரக் பள்ளியுடன் தொடர்புடைய நிலத்தை ஜமாத்தின் பெயரிலோ, பொது அறக்கட்டளையின் பெயரிலோ பதிவு செய்யாமல் தனி ஒருவரின் பெயரில் பதிவு செய்ததாக கடந்த ஆண்டு இவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து விலக்கப்பட்டுவிட, தற்போது கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் (மஸ்ஜிதுன் முபாரக் கமிட்டி) என்ற பெயரில் தனியாக செயல்பட்டு வருகிறார்.
தோழர் துராப்ஷாவுக்கும் மேற்கண்ட சைபுல்லா ஹாஜாவுக்கும் இடையே முன்பிருந்தே சிற்சில பிரச்சனைகள் இருந்ததாக தெரிய வருகிறது. முபாரக் பள்ளிக்கு அருகில் இருக்கும் நகராட்சிக்கு சொந்தமான பாழடைந்த கிணற்று நிலத்தில் சிபிஐ பாராளுமன்ற நிதியில் இருந்து பொது நூலகத்திற்கு சொந்த கட்டிடம் எழுப்பும் முயற்சியில் முபாரக் பள்ளிக்கு எதிராக செயல்பட்டது. தொழுகை நேரம் தவிர ஏனைய நேரங்களிலும் (இரவு நேரங்களில் கூட) அன்றாட மதரசா நிகழ்சிகளையும் ஒலிபெருகியை சப்தமாக வைத்து மக்களுக்கு தொல்லை கொடுப்பது இது போன்ற சின்னச் சின்ன பிரச்சனைகளில் மறைமுகமாக பிணக்கு ஏற்பட்டிருந்தாலும் நேரடியாக தலையிடும்படியான சூழலும் நேர்ந்தது.
தோழர் புரட்சிகர இயக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளத் தொடங்கிய பிறகு, சைபுல்லா ஹாஜாவின் முபாரக் பள்ளி கமிட்டியின் கீழ் மஸ்ஜிதுல் முபாரக் ஆட்டோ சங்கம் என்ற பெயரில் ஆட்டோ சங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் இந்த சங்கத்தின் ஆட்டோக்கள் கடைவீதியில் முபாரக் பள்ளிக்கு அருகில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும். முதலில் நிறுத்தப்பட்ட ஆட்டோவுக்கு முதல் சவாரி எனும் அடிப்படையில் செயல்பட்டாலும், குறிப்பிட்ட சிலரை மட்டும் ஆட்டோவை முதலில் நிறுத்தவிடாமல் தடுப்பது, சவாரி அவர்களுக்கு கிடைக்காத வண்ணம் தில்லுமுல்லுகளைச் செய்வது என்று நடந்திருக்கின்றனர்.
குறிப்பிட்ட அந்த ஓட்டுனர்கள் இந்த பிரச்சினையை சைபுல்லா ஹாஜாவிடம் கொண்டு சென்ற பின்பும், தனக்கு வேண்டியவர்கள் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முடிவில் இதனால் பாதிக்கப்பட்ட ஆறு ஆட்டோ ஓட்டுனர்கள், ”நாங்கள் சங்கத்திலிருந்து விலகிக் கொள்கிறோம், உறுப்பினர் சேர்ப்பு கட்டணமாக நாங்கள் செலுத்திய பணத்தை திரும்பத் தாருங்கள்” என்று கேட்டபோது சைபுல்லா ஹாஜா, ”பணத்தையும் திரும்பத்தர முடியாது, நீங்கள் தனியாகவும் செயல்படக் கூடாது. மீறி செயல்பட்டால் கடையநல்லூரில் எந்த இடத்திலும் தொழில் செய்ய முடியாமல் செய்து விடுவேன்.” என்று மிரட்டியதாக தெரிகிறது.
இதனையடுத்து அந்த ஆறு ஆட்டோ ஓட்டுனர்களும் தோழர் துராப்ஷாவை அணுகி தங்களுக்கு உதவமுடியுமா எனக் கேட்டுள்ளனர். துராப்ஷாவும் வேறு தோழர்களின் உதவியுடன் அவர்களுக்கு சங்கம் என்றால் என்ன?, உரிமைகளுக்காக போராடுவது, அதனூடான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று செயல்பட்டிருக்கிறார்.
இது மட்டுமன்றி, வேறொரு அரசியலும் இதில் தொழிற்பட்டிருக்கிறது. முபாரக் பள்ளியில் அறிவிப்பு வெளியிடுவதற்கு முந்திய வாரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குழுவினருக்கான பள்ளியில், இணையத்தில் சில ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேறொரு தோழருக்கு எதிராக, ”இஸ்லாத்தை விமர்சித்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார், அவரை ஊரை விட்டு விலக்கிவைக்க வேண்டும்” என்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இதை செவியுற்ற முபாரக் பள்ளியும் அவர்களுக்கு முன்னதாக நாம் நடவடிக்கை எடுத்து காட்ட வேண்டும் எனும் போட்டி மனப்பான்மையுடனேயே தோழர் துராப்சாவுக்கு எதிரான அறிவிப்பை அவசரமாக வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது இசுலாத்தை யார் காப்பாற்றுவது என்பதில் தவ்ஹீத் ஜமாத் குழுவினருக்கும், முபாரக் பள்ளிக்கும் பெரும் போட்டி நிலவியிருக்கிறது.
இவர்களின் இந்த போட்டி மனப்பான்மைக்கு, ஹஜ்ஜுப் பெருநாளை வெவ்வேறு குழுக்களின் சார்பில் மூன்று தனித்தனி நாட்களில் மூன்று பெருநாளாக கொண்டாடியது, நோன்புப் பெருநாளில் தொழுகை நடத்துவதற்கு ஒரு திடலுக்கு மூன்று குழுக்களும் போட்டி நடத்தி காவல்நிலையம் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தது என்று கடையநல்லூரிலிருந்தே எடுத்துக்காட்டுகளை கூற முடியும். இது தான் தோழர் துராப்ஷாவுக்கு எதிரான வெள்ளிக்கிழமை அறிவிப்புக்கு அடிப்படையான காரணம். இதைத்தான் இஸ்லாம், ஹராம், ஹலால் என்று திசை திருப்பி மக்களை வெறியேற்றி விட்டிருக்கிறார்கள்.
இவ்வாறான பின்னணிப் பிரச்சனைகளெல்லாம் இல்லாமல் இஸ்லத்திற்கு எதிராக கட்டுரை எழுதியது மட்டும் தான் பிரச்சனை என்றால் என்ன செய்திருக்கப்பட வேண்டும்? சம்மந்தப்பட்டவரை அழைத்து விசாரித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் வெள்ளிக் கிழமை அறிவிப்புக்கு முன்பும் பின்பும் தோழரிடம் யாரும் இது குறித்து விசாரிக்கவோ, விளக்கம் கேட்கவோ இல்லை. தனக்கும் குறிப்பிட்ட அந்த தளத்திற்கும், குறிப்பிட்ட அந்த கட்டுரைக்கும் தொடர்பு ஒன்றுமில்லை என்றும், முடிந்தால் அதை நிரூபித்துக் காட்டுங்கள், அதன்பிற்கு நீங்கள் வழங்கும் எந்த தீர்ப்புக்கும் கட்டுப்பட தயாராக இருக்கிறேன் எனும் தோழரின் கூற்று யார் காதிலும் ஏறவில்லை. மாறாக அவர்களின் செயல்கள் அப்பட்டமாக மேற்கூறப்பட்ட பின்னணிகள் தான் இந்த நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்பதை உணர்த்துகின்றன.
வெள்ளிக்கிழமை அறிவிப்பை வெளியிடும் போது அவர் அதை எப்படி கூறினார்? “அந்தக் கட்டுரையை நீங்கள் படித்தால் உணர்ச்சிவசப்பட்டு அவரையும் அந்தக் கடையையும் அடித்து நொறுக்கி விடுவீர்கள் அவ்வளவு கேவலமாக அது எழுதப்பட்டிருக்கிறது. அப்படி நீங்கள் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் கடையை புறக்கணியுங்கள் என்கிறேன்” என்று கூறியிருக்கிறார். மட்டுமல்லாது குறிப்பிட்ட அந்தக் கட்டுரையை படியெடுத்து அதன் கீழே நபிமார்களை இவ்வளவு கேவலமாக எழுதியிருக்கும் இவனை என்ன செய்யலாம் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று எழுதி அதை வீடு வீடாக எடுத்துச் சென்று வினியோகித்திருக்கிறார்கள்.
உண்மையில் தோழர் துராப்ஷவுக்கும் அந்தக் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் அவர் எழுதியது போன்ற தோற்றத்தை இவர்கள் உருவாக்க விரும்பினார்கள். இது ஒரு விமர்சன கட்டுரையை வெளியிட்டதற்கான எதிர்வினை என்றில்லாமல், திட்டமிட்டு தோழர் மீது மக்களிடம் வெறுப்பை உண்டாக்க வேண்டும், அவருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும், மக்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்வது போன்ற தோற்றத்தில் அவர் மீது தாக்குதலை தொடுக்க வேண்டும் எனும் எண்ணத்திலேயே இவைகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.
வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியான பின்னர் அந்த அறிவிப்பு பெரிய அளவில் மக்களை ஈர்க்கவில்லை. சனிக்கிழமை தோழரின் கடையில் ஒப்பீட்டளவில் வியாபாரம் குறைந்திருந்தது என்றாலும் ஞாயிற்றுக்கிழமை அந்த பாதிப்பு மீண்டுவரத் தொடங்கியது. காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை நடக்கும் வியாபாரமே நாளின் மொத்த வியாபரத்தையும் தீர்மானிக்கும் எனும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பழையபடி வியாபாரம் மீளத் தொடங்கியிருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு.
என்ன தான் ஹலால் பிரச்சனையை தூண்டினாலும் தோழரின் கடையில் கறி வாங்கும் அனைவருக்குமே தெரியும், அங்கு ஹலாலான முறையில் தான் கோழி அறுத்து விற்பனை செய்யப்படுகிறது என்பது. தோழரே முன்னின்று நேரடியாக அறுத்து விற்பனை செய்வதில்லை. நிறுத்துக் கொடுப்பது அதற்கான பணத்தை வாங்குவதை மட்டும் தான் தோழர் செய்துவந்தார். கோழி அறுப்பதற்கும் வெட்டி துண்டுகளாக்குவதற்கும் இஸ்லாமியர் ஒருவரையே வேலைக்கு அமர்த்தியிருந்தார். எனவே அது இஸ்லாமிய முறைப்படி ஹலாலானது தான் என்பது அனைவருக்கும் தெரியும். மட்டுமல்லாது வாங்குவதை தவிர்த்தவர்களும் கூட ’எதற்கு வம்பு’ எனும் ஜாக்கிரதை உணர்ச்சியில் தவிர்த்திருப்பார்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம்.
அந்தக் கடையைத் தவிர பொருளாதார வசதிகளோ வேறு ஆதாரங்களோ இல்லாத தோழர், பள்ளிவாசலில் அறிவித்தவுடன் வாழ்வாதாரத்திற்கே தடை வந்துவிட்டதே என்று கலங்கி தம்மிடம் ஓடிவந்து மன்னிப்புக் கேட்டு பணிந்துவிடுவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள் போலும். அவ்வாறல்லாமல் நிலமை சகஜமாவதை கவனித்த அவர்கள், ஞாயிற்றுக் கிழமை 9 மணிக்கு மேல் கடைக்கு முன் திரளத் தொடங்கினார்கள். ”எங்கள் நபியை கேவலப்படுத்திய உன்னை கடையை நடத்த விடமாட்டோம், கடையை மூடு” என்று கூச்சலிடத் தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடத் தொடங்கியது.
தயாராக கொண்டு வந்திருந்த (கட்டுரை அடங்கிய) பிரசுரத்தையும் கூட்டத்தில் வினியோகித்தனர். அந்தக் கூட்டத்திலேயே ஒருவன் ”வெளியிலிருந்து என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் கடைக்குள் நுழைந்து எதையாவது செய்தால் அது நமக்கு எதிராக திரும்பிவிடும்” என்று கூறியிருக்கிறான். இதிலிருந்து அவர்கள் முன் யோசனையுடன் திட்டமிட்டு வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
கூச்சல் குழப்பம் அதிகரிக்கவே வேறு வழியின்றி தோழர் கடையை அடைத்து விட்டு தொலைபேசியில் தோழர்களை அழைத்து ஆலோசனை கேட்கிறார். இதற்குள் அவர்களாகவே காவல்துறைக்கு மதத்தை கேவலப்படுத்தி எழுதிய ஒருவரின் கடைக்கு முன்னே மக்கள் திரண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் தெரிவிக்க போலீஸ் வந்தது. தோழரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர், தோழரும் தன்னுடய தரப்பு நியாயங்களை எடுத்துவைத்தார். கடைசியில் புதன் வரை கடையை மூடி வைப்பது என்றும் வியாழனிலிருந்து வழக்கம் போல் கடையை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன்பிறகும் அமைதியடையாத சைபுல்லா ஹாஜா குழு, ஞாயிறு மதியத்திற்குப் பிறகு, தோழர் வசிக்கும் வட்டார ஜமாத்திற்கும், மக்கட்டி குடும்பத்தார்களுக்கும் (வட்டார ஜமாத் என்பது வசிக்கும் தெருவை உள்ளடக்கிய அமைப்பு, குடும்பத்தார்கள் என்பது குறிப்பிட்ட குடும்பப் பெயரைக் கொண்டிருக்கும் அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பு) அந்தக் கட்டுரையை அனுப்பி இப்படிப்பட்டவர் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து கூடிய வட்டார ஜமாத் நாங்கள் முடிவு செய்வதை விட உலமாக்கள் சபைக்கு இதை அனுப்பி வைக்கிறோம். அவர்கள் கூறும் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிவிட்டார்கள்.
குடும்பத்தார்களோ முபாரக் பள்ளி கமிட்டிக்குச் சென்று நிபந்தனையற்று மன்னிப்பு கூறு இல்லாவிட்டால் குடும்பத்திலிருந்து நீக்கிவைப்போம் என்று தோழரை நிர்ப்பந்தம் செய்து மிரட்டுகிறார்கள். இத்தனைக்கும் முபாரக் பள்ளி கமிட்டியிலிருந்து இதுவரை என்ன பிரச்சனை என்றோ, விளக்கம் என்ன என்றோ தோழரிடம் யாரும் விசாரணை செய்யவே இல்லை. தோழரோ தன்மீது எந்த தவறும் இல்லை என்றும், தான் அந்த கட்டுரையை எழுதவில்லை, அந்த தளத்தை நடத்துவதும் நானல்ல என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அது யாருடைய செவியையும் எட்டவில்லை.
ஆம், பிரச்சனையை அணுகுபவர்களுக்கு அல்லவா, என்ன நடந்தது, எங்கு தவறு என்பன போன்றவையெல்லாம் தேவையாக இருக்கும். இங்கு நடப்பது தோழரை முடக்கி தண்டித்தாக வேண்டும் எனும் முயற்சியல்லவா? அதனால் தான் தங்கள் பலத்தை பயன்படுத்தி, நேர்மையை புறந்தள்ளி தங்களின் திட்டமிட்ட இலக்கை அடைய முயல்கிறார்கள். இவர்கள் தான் இஸ்லாம் நீதியையும் நேர்மையையும் பேணுகிறது என்று மதத்தை போதிக்கும் அறிஞர்களாம், வெட்கக்கேடு.
இதன் பிறகுதான் நிகழ்ச்சிகள் வேகம் பெறத் தொடங்கியிருக்கின்றன. மறுநாள் திங்கட்கிழமை மக்கட்டி குடும்பத்தார்கள் கூட்டம் தொடங்கியது, தோழரை அழைத்து விசாரித்திருக்கிறார்கள். விசாரித்திருக்கிறார்கள் என்பதை விட, ”நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும், இல்லாத பட்சத்தில் குடும்பத்திலிருந்து நீக்கி வைப்போம், எந்த விதத்திலும் எங்களுடைய உதவி உங்களுக்கு கிடைக்காது” என்று மிரட்டியிருக்கிறார்கள் என்பதே சரி.
மட்டுமல்லாது உலமாக்கள் சபை என்ன தீர்ப்பு கூறப்போகிறது என்பதையும் முன்னதாகவே கூறியிருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் தவறு நடந்திருக்கிறதா என்பதை ஆராய்வதல்ல, எந்த விதத்திலாவது மன்னிப்பு கேட்கவைத்து, பிரச்சனையை மூடிவிடுவது என்பதாகவே இருக்கிறது. முடிவில் தொடர்ந்த அவர்களின் வற்புறுத்தல்களின் காரணமாக எந்த தவறும் செய்யத நிலையிலும் தோழர் மன்னிப்பு கேட்பதற்கு சம்மதிக்கிறார்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை, மெல்ல மெல்ல விசயம் தெரிந்து பலரும் தோழரை தொலைபேசியில் விசாரித்திருக்கிறார்கள். ஊடகவியலாளர் கவின்மலருக்கும் விசயம் தெரிந்து, ஜூனியர் விகடனுக்கும், நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்திருக்கிறார். அதேநேரம் கடையநல்லூரும் சூடேறிக் கொண்டிருந்தது.
மதிய நேர லுஹர் தொழுகைக்குப் பின்னர் தான் கூட்டம் நடக்கவிருக்கிறது என்றாலும் அதற்கு முன்பிருந்தே இளைஞர்கள் பெருமளவில் குழுமத் தொடங்குவார்கள் என்பதால், தொழுகை நேரத்திற்கும் முன்னதாகவே பள்ளிவாசலுக்குள் சென்று உள்ளேயே இருங்கள் வெளியில் வரவேண்டாம் என்று தோழருக்கு அறிவுரை தரப்பட்டது. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு ”நாங்கள் அழைத்த பின்னரே வரவேண்டும்” என்று கூறினார்கள். மன்னிப்பு கேட்பதற்காகத்தான் வருகிறார் என்றாலும் பாதுகாப்புக்காக காவல் துறையை அணுகுவதற்கு அனுமதி கேட்டபோது, “காவல் துறையை அணுகினால், நாங்கள் விலகி விடுகிறோம், நீயே தனியாக சந்தித்துக் கொள்” என்று குடும்பத்தார்கள் மிரட்டியிருக்கிறார்கள்.
என்ன செய்வதெனத் தெரியாத நிலையிலேயே கூட்டத்திற்கு சென்றிருக்கிறார் தோழர். விசாரணை இல்லை. விளக்கம் கூற அனுமதி இல்லை. மன்னிப்பு மட்டுமே கேட்க வேண்டும் வேறு எதையும் பேசக்கூடாது என்று மிரட்டி அழைத்துச் சென்றாலும், பள்ளிவாசலில் நுழைந்ததுமே, அங்கிருந்த மதவெறியேறிய காட்டுமிராண்டிக் கும்பல் தோழரை தாக்கத் தொடங்கியிருக்கிறது. உறவினர்கள் கடுமையான முயற்சிக்குப் பிறகு தோழரை தனியறையில் தள்ளி அடைத்து தாக்குதல்களை தடுத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே தயாராக கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் தோழரிடம் கையெழுத்து வாங்கி, “இவர் காஃபிர் என அறிவிக்கப்படுகிறார், தாய், மனைவி குழந்தைகள் உட்பட இவரோடு யார் தொடர்பு கொண்டாலும் அவர்களும் காஃபிர்களாக கருதப்படுவார்கள்” என்று அறிவித்து விட்டார்கள். இதன்பிறகு காவல்துறை தோழரை பாதுகாப்பாக வெளியேற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. காவலர்களின் கண் முன்பே காவல்துறை வாகனத்தில் வைத்தும்கூட தாக்கியிருக்கிறார்கள் அந்த மதவெறி பிடித்த மிருகங்கள். “காவல்துறை எங்களை எதுவும் செய்ய முடியாது. என்றிருந்தாலும் உன்னுடைய சாவு எங்கள் கையில் தான்” என்றெல்லாம் அந்த கும்பல் வெறிக் கூச்சலிட்டது.
இதனிடையே ஒருவரை காஃபிர் என ஃபத்வா கொடுக்கும் அதிகாரம் மண்டல அரசு காஜிக்கு மட்டுமே உண்டு. ஆனால் தோழருக்கு கொடுக்கப்பட்ட ஃபத்வா அரசு காஜியினால் கொடுக்கப்படவில்லை. அவருடைய அனுமதியின்றி இவர்களாகவே ஃபத்வா கொடுத்துவிட்டு பின்னர் அரசு காஜியிடம் கையெழுத்துக்காக சென்றிருக்கிறார்கள். அவர் கையெழுத்திடுவதற்கு முதலில் மறுத்திருக்கிறார், இதில் பிரச்சனை ஒன்றுமில்லை, அவர் மன்னிப்பு கடிதம் கொடுத்து இஸ்லாத்தில் சேர்ந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் என்று சமாதானம் செய்து கையெழுத்து கேட்டிருக்கிறார்கள். முதலில் மன்னிப்பு கடிதம் வாங்கி வாருங்கள் பின்னர் பார்க்கலாம் என்று அரசு காஜி கூற, எப்படியோ கடிதம் வாங்கி ஃபத்வாவில் கையெழுத்து பெற்றிருக்கிறார்கள்.
இது ரவுடிக் கும்பலின் அட்டகாசம் என்பதிலோ, மதவெறிபிடித்த காட்டுமிராண்டிக் கும்பலின் வெறியாட்டம் என்பதிலோ நேர்மையுடன் பரிசீலிக்கும் யாருக்கும் ஐயம் இருக்கமுடியாது. ஆனால் இதில் இஸ்லாமியர்களின் பார்வை, நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகளை இழிவுபடுத்தியவரை நாங்கள் தாக்குவதில் என்ன தவறு இருந்துவிட முடியும்? என்பதாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கூட்டமும் இப்படித்தான் இந்து மதத்தை, இந்துக்கடவுளரை புண்படுத்தி விட்டார்கள் என்று கூறி வருவதோடு எம்.எப்.ஹூசைன் உட்பட பலரை தாக்கியிருக்கிறது. நாட்டை விட்டே விரட்டியுமிருக்கிறது. மதவாதிகள் அனைவருமே விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் கையில் எடுக்கும் ஆயுதம் எங்கள் மனது புண்படுகிறது என்பது தான்.
இஸ்லாத்தின் ஆரம்பமே பிற மத நம்பிக்கைகளை விமர்சிப்பதிலிருந்து தான் தொடங்கியிருக்கிறது. காபாவில் வைக்கப்பட்டிருந்த முன்னூறுக்கும் அதிகமான சிலைகளை அடித்து நொறுக்கித்தான் இஸ்லாத்தின் புனிதம் நிறுவப்பட்டிருக்கிறது. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். இன்றும் கூட பைபிள் இறை வேதமல்ல, மனிதர்கள் அதை திருத்திவிட்டார்கள் என்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள், மேடைகளில் பரப்புரை செய்கிறார்கள், விவாதம் நடத்துகிறார்கள். இதனால் எங்கள் மனது புண்படுகிறது என்று கிறித்தவர்கள் இவர்கள் மீது தாக்குதல் தொடுத்தால், அதை சரி என்பார்களா? ஆக இது பலம் இருக்கிறது என்பதால் வெளிப்படும் திமிர்த்தனம் தானேயன்றி வேறொன்றுமில்லை.
பொதுவெளியில் இருக்கும் எதையும் விமர்சனம் செய்வதற்கு எவருக்கும் உரிமையுண்டு. செய்யப்படும் விமர்சனத்தில் தவறு இருப்பதாக கருதினால் சுட்டிக் காட்டுவதையோ, விசாரிப்பதையோ யாரும் தவறென கூற முடியாது. ஆனால் எங்கள் நம்பிக்கையை எதிர்த்து எழுதினால் நாங்கள் குண்டாந்தடியை எடுப்போம் என்பது பச்சையான ரவுடித்தனம். இதை மதத்தின் பெயரால் நியாயப்படுத்த நினைக்கும் எவருக்கும் மனிதனாக நீடிப்பதற்கான தகுதி இல்லை.
தோழர் துராப்ஷா குறிப்பிட்ட கட்டுரையை எழதவில்லை, அவரது ஃபேஸ்புக் ஐடிக்கு வந்திருக்கிறது என்பதற்காக மட்டும் தாக்கப்படவில்லை. அவர் தன்னை ஒரு பொதுவுடமையாளராக அறிவித்துக் கொண்டு வாழ்வது இவர்களுக்கு பிடிக்கவில்லை. ஒருவேளை இசுலாமிய மதவாதிகள் ஆட்சியிலிருந்தால் அவர் கடைய நல்லூரில் கல்லால் அடித்தே கொல்லப்பட்டிருப்பார். அந்த வகையில் இசுலாத்தின் ஆட்சியை நேற்றும்-இன்றும்-நாளையும் கொண்டு வராமல் இருப்பதன் மூலம் பல கோடி இசுலாமிய மக்கள் கொல்லப்படாமல் இருப்பதற்காக நாம் ‘அல்லா’விற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
இசுலாத்தில் இருந்து கொண்டு எல்லா பாவச்செயல்களையும் ஆதிக்கம், அதிகாரம் காரணமாக செய்யும் எவரையும் இவர்கள் சீண்டக்கூட மாட்டார்கள். ஆனால் உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன், நேர்மையுடன் பாடுபடுவேன், அதற்காக பொதுவுடமைக் கொள்கையை ஏற்கிறேன் என்று ஒருவர் அறிவித்தால் இவர்கள் கொலைவெறி அடைகிறார்கள்.
அந்த வகையில் உழைக்கும் இசுலாமிய மக்களின் எதிரிகள் எவரையும் இவர்கள் தமது சுண்டு விரலைக்கூட நீட்டி எதிர்த்ததில்லை. லாட்டரிச் சீட்டு புகழ் ஹாருணா, ஈராக்கையும், ஈரானையும் பிணக்காடாக்குவேன் என்று எக்காளமிடும் அமெரிக்காவின் பாதந்தாங்கிகளான சவுதி அரசு ஷேக்குகளா, இவர்களெல்லாம் இசுலாத்தின் பாதுகாவலர்கள் என்று போற்றுவார்கள். ஆனால் ஒரு ஏழையின் கண்ணீரைத் துடைப்பேன் என்று போராடும் ஒரு கம்யூனிஸ்ட்டை அவன் பிறப்பால் இசுலாமியராக இருக்கும் ஒரே காரணத்தால் ஒழிக்க முனைவார்கள்.
இசுலாமிய நண்பர்கள் உள்ளிட்டு அனைவரும் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலை வெளிப்படையாக கண்டிப்பதோடு தத்தமது நட்பு வட்டாரத்தில் இதை தெரிவித்து தோழர் துராப்ஷாவுக்கு நடந்திருக்கும் அநீதிக்கெதிராக பொதுக் கருத்தை உருவாக்க வேண்டும். இத்தகைய மத பிற்போக்குத்தனங்களிலிருந்து நமது மக்களை விடுவிப்பதற்கு உங்களது வெளிப்படையான ஆதரவு அவசியம் என்பதை இங்கே உரிமையுடன் கோருகிறோம்.
________________________________________________
- வினவு செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக