புதன், 21 டிசம்பர், 2011

ரயில் மூலம் கேரளாவுக்கு காய்கறி, உணவை அனுப்பும் மலையாள ரயில்வே அதிகாரிகள்!

கோவை: தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பால் உள்ளிட்டவை தடுக்கப்பட்டு வருவதால், ரயில்கள் மூலம் இவற்றைக் கொண்டு செல்ல தமிழகத்தில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த மலையாள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உதவி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின்போக்கைக் கண்டித்து, இன்று தமிழக கேரள எல்லைப்புறங்களில் மதிமுக மற்றும் தமிழ் அமைப்புகளின் சார்பில் பொருளாதார முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் கந்தைகவுண்டன் சாலை, வாளையாறு, வேலந்தாவலம், பொள்ளாச்சி அருகே நடுப்புணி, வலந்தாயமரம், ஆனைக்கட்டி ஆகிய 6 இடங்களில் மதிமுகவினர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.


கடைகள் அடைப்பு

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உக்கடம் பெருமாள் கோவில் மார்க்கெட், காந்திபுரம், சாய்பாபா காலனி காய்கறி மொத்த மார்க்கெட், ராஜவீதி தியாகி குமரன் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

குனியமுத்தூர், கோவைபுதூர், போத்தனூர், மதுக்கரை உள்ளிட்ட இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதுபோல், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலும் கடையடைப்பு நடத்தப்படுகிறது. போராட்டத்துக்கு ஆதரவாக லாரிகள் இயக்கப்படவில்லை. மினி ஆட்டோ, சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவை இயக்கப்படவில்லை.

ரயில் மூலம் கேரளா செல்லும் சரக்குகள்

கேரளாவுக்கு செல்லும் 13 வழித்தடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றதால் கேரளாவுக்கு காய்கறிகள், பழங்கள், உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் ஏற்கனவே தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ஒரு பொருளும் போகவில்லை. மற்ற பகுதிகளிலும் கூட தடைகள் ஏற்பட்டு வருகின்றன.

இதனை போக்கும் விதமாக கேரள வியாபாரிகள் பலரும் ஈரோடு மற்றும் கோவை ரயில் நிலையத்திலிருந்து ரயில்களின் மூலமாக காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசியமான உணவுப்பொருட்களை கேரளாவுக்கு எடுத்து செல்கிறார்கள்.

மலையாள அதிகாரிகள் ஒத்துழைப்பு

செவ்வாய்கிழமை முதல், பெங்களூர் - எர்ணாகுளம் இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை - கண்ணனூர் பாசஞ்சர், கோவை - பாலக்காடு பாசஞ்சர், மங்களூர் -கண்ணனூர் எக்ஸ்பிரஸ், தன்பாத் எக்ஸ்பிரஸ், கோவை –திருச்சூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களில் சரக்குகளை அனுப்பி வருகிரார்கள்.

இதற்கு தமிழகத்தில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் மலையாள அதிகாரிகள் உறுதுணையாக இருந்து கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர். இதற்காக, கண்ணனூர் கோவை பாசஞ்சரில் கூடுதலாக மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டன என்று கோவை ரயில்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக பயணிகள் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும்போது இந்த மார்க்கத்தில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ரொம்பவே யோசிப்பார்கள் இந்த அதிகாரிகள். ஆனால் தற்போது காய்கறிகள் உள்ளிட்டவற்றை கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்காக கூடுதல் பெட்டிகளை இணைத்து தங்களது பேருதவியைப் புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: