வெள்ளி, 23 டிசம்பர், 2011

சிபிஐ உருவாக்கிய 'பொய் சாட்சி' தான் ஆசீர்வாதம் ஆச்சாரி: ராசா பரபரப்பு குற்றச்சாட்டு


Raja
டெல்லி: 2ஜி வழக்கில் எனது முன்னாள் உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரியை, எனக்கு எதிராக பொய் சாட்சியாக சிபிஐ உருவாக்கியுள்ளது என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் 2ஜி வழக்கு விசாரணையில், ராசாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமார், நீதிபதி ஓ.பி.சைனியிடம் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக ஆச்சாரி புகார் கூறியிருப்பதும் ஒரு நாடகம் தான் என்றும் ராசாவின் வழக்கறிஞர் கூறினார்.
அவர் வாதாடுகையில், ராசாவுக்கு எதிராக பொய் சாட்சி சொல்வதற்காக ஆசீர்வாதத்தை சிபிஐ தயார் செய்துள்ளது. இது தான் இந்த வழக்கில் முக்கிய வாதமே.


தன்னைக் கொல் முயல்வதாக ஆசீர்வாதம் நேற்று நீதிமன்றத்தில் கூறியதும் கூட சிபிஐ நடத்திய நாடகம் தான். ராசாவின் முன்னாள் செயலாளர் சந்தோலியாவின் ஜாமீன் மனு வரும் ஜனவரி 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடாமல் செய்யவே இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் தான் சந்தோலியாவுடன் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தவர் மூலம் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று ஆசீர்வாதம் திடீரென்று கூறுகிறார் என்றார்.

அப்போது இடைமறித்த நீதிபதி ஓ.பி.சைனி, இதற்கு முன் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஆசீர்வாதம் ஏன் கூறவில்லை. இதை முன்பே அவர் கூறியிருந்தால், இந்த வழக்கில் பலருக்கும் ஜாமீன் கிடைத்திருக்காது என்றார்.

தொடர்ந்து வாதாடிய ராசாவின் வழக்கறிஞர், ஆசீர்வாதத்தை குறுக்கு விசாரணையும் செய்தார். முன்னதாக சிபிஐ தனது விசாரணையை முழுமையாக முடித்து, 3வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாத வரை நான் யாரையும் குறுக்கு விசாரணை செய்ய மாட்டேன் என்று ஒரு மாதமாக ராசா மறுத்து வந்தது குறிப்பிடத்தகுக.

கடந்த 12ம் தேதி சிபிஐ தனது 3வது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ததையடுத்து ராசாவின் வழக்கறிஞர் தனது குறுக்கு விசாரணையைத் தொடங்கினார்.

ராசாவுக்கு எதிராக சிபிஐ நிறுத்தியுள்ள முக்கிய சாட்சி ஆசீர்வாதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் அதன் அதிபர்கள், அதிகாரிகளுக்கும் ராசாவுக்கும் இடையே இருந்த தொடர்புகள், விதிகளை மீறி லைசென்ஸ்கள் வழங்கப்பட்ட முறை ஆகியவை குறித்து ஆசீர்வாதம் அளித்த வாக்குமூலங்களையே சிபிஐ இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக முன் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்திய ராசாவின் வழக்கறிஞர், அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

நிரா ராடியாவிடம் பலமுறை ஆசீர்வாதம் பல்வேறு தொலைபேசி எண்களில் இருந்து மாற்றி மாற்றிப் பேசியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை: