வெள்ளி, 23 டிசம்பர், 2011

லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:


1. லோக்பால் சட்ட மசோதாப்படி, மத்திய அளவில் லோக்பால் என்ற அமைப்பும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவும் அமைக்கப்படும். இந்த அமைப்புகளுக்கு மேற்பார்வையிடும் அதிகாரம், முதல் கட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், புகார்கள் மீது வழக்குத் தொடரும் அதிகாரம் போன்றவை இருக்கும்.
2. லோக்பால் அமைப்பிற்கு தலைவர் ஒருவரும், எட்டு உறுப்பினர்களும் இருப்பர்.
3. லோக்பால் உறுப்பினர்களின் 50 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், மலைவாழ் பழங்குடியின வகுப்பினர், இதர பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களாகவும், பெண்களாகவும் இருப்பர். இதில், மைனாரிட்டி பிரதிநிதித்துவமும் உண்டு.

4. லோக்பால் அமைப்பில் முதல் கட்ட விசாரணைகளை மேற்கொள்ள விசாரணைப் பிரிவு ஒன்று இருக்கும். அதன்பின் வழக்கு விசாரணைகளை கையாள தனிப்பிரிவு இருக்கும்.
5. லோக்பால் அமைப்பில் செயலர், அரசு தரப்பு இயக்குனர், விசாரணை இயக்குனர் மற்றும் இதர அதிகாரிகள் இடம் பெறுவர்.
6. லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை, பிரதமர், லோக்சபா சபாநாயகர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்லது தலைமை நீதிபதியால் நியமிக்கப்படும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பிரபல சட்ட நிபுணர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்யும்.
7. இந்தத் தேர்வு கமிட்டிக்கு உதவி செய்ய தேடுதல் கமிட்டி ஒன்றும் செயல்படும். தேடுதல் கமிட்டியில் இடம் பெறும் உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.

அதிகார வரம்பு

8. சில விதிவிலக்குகளுடன் பிரதமரும், லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். சர்வதேச உறவுகள், உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு பாதுகாப்பு, பொது ஒழுங்கு, அணுசக்தி மற்றும் விண்வெளி விவகாரங்கள் தொடர்பாக, பிரதமருக்கு எதிராக புகார்கள் கூறப்பட்டால், அது தொடர்பாக லோக்பால் அமைப்பு விசாரணை நடத்தாது.

9. பிரதமருக்கு எதிராக எந்த ஒரு விசாரணை அல்லது வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது என, முடிவெடுத்தாலும், அதற்கு லோக்பால் அமைப்பின் மொத்த உறுப்பினர்கள் குழுவாகக் கூடி, அதில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர் ஆதரவு மற்றும் ஒப்புதல் இருக்க வேண்டும். இந்த ஆதரவு தெரிவிக்கும் விபரங்கள் எல்லாம் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும்.

10. பொது ஊழியர்களில், குரூப், "ஏ', "பி', "சி' மற்றும் "டி' பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எல்லாம், லோக்பால் விசாரணை வரம்பிற்குள் வருவர். ஆனாலும், குரூப், "ஏ' மற்றும் "பி' பிரிவு அதிகாரிகளைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு எதிரான புகார்களை, லோக்பால் அமைப்பு, மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்திற்கு பரிந்துரை செய்யும். அந்த அமைப்பு விசாரணை நடத்தி, மேல் நடவடிக்கை எடுப்பது குறித்த, லோக்பால் அமைப்புக்கு அறிக்கை அளிக்கும்.

அதேநேரத்தில், குரூப், "சி' மற்றும் "டி' பிரிவு ஊழியர்களைப் பொறுத்தமட்டில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையமே, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்கும். அது தொடர்பான அறிக்கையை மட்டும் லோக்பால் அமைப்பிடம் சமர்ப்பிக்கும். அதை லோக்பால் அமைப்பும் பரிசீலிக்கும்.

நன்கொடைகளுக்கு "செக்'

11. அன்னிய நன்கொடைகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், எந்த ஒரு அமைப்பு அல்லது நபர்கள், ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் நன்கொடைகள் பெற்றாலும், அது லோக்பால் விசாரணை வம்பிற்குள் வரும். ஆனால், இந்த விஷயத்தில், லோக்பால் அமைப்பு தானாகவே முன்வந்து விசாரணைகளை மேற்கொள்ள முடியாது.

இதர சிறப்பு அம்சங்கள்

12. லோக்பால் அமைப்பு விசாரிக்கும் வழக்குகளில், மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள, எந்த விதமான முன் அனுமதியும் பெற வேண்டியதில்லை.

13. வழக்கு விசாரணைகள் நிலுவையில் இருக்கும் போதே, முறைகேடான வழிகளில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய இந்த அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

14. லோக்பால் அமைப்பு விசாரணையில் உள்ள விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., உட்பட எந்த ஒரு புலனாய்வு நிறுவனத்திற்கும் உத்தரவிடவும், அந்த அமைப்புகளுக்கு பரிந்துரை செய்யப்படும் வழக்குகளை மேற்பார்வையிடவும் அதிகாரம் உண்டு.

15. லோக்பால் அமைப்பிற்கு வரும் புகார்கள் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டால், அது மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால், மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படலாம்.

அதேநேரத்தில் முழுமையான விசாரணை எனில், ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். தேவையெனில், மேலும் ஆறு மாதங்களுக்கு கால அவகாசத்தை நீட்டிக்கலாம். அதேபோல், வழக்கு விசாரணைகளை எல்லாம் ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லை எனில், மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு உண்டு.

கருத்துகள் இல்லை: