வெள்ளி, 23 டிசம்பர், 2011

டிஜிட்டல்- குறைந்த செலவில் தமிழ் படங்கள் தயாராகிறது டிஜிட்டல் உபயம்

தமிழ் சினிமா டிஜிட்டல் மயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உயர்ரக கேமராவான ரெட்ஒன்னின் பயன்பாடு அதிகரித்து விட்டது. முன்பு மும்பையில் மட்டுமே கிடைக்கும் இந்த கேமரா, இப்போது சென்னையிலேயே கிடைக்கிறது. தற்போது தயாரிப்பில் உள்ள படங்களில் 60 சதவிகிதம் டிஜிட்டல் முறையில் படமாக்கப்படுகிறது. படத் தயாரிப்பு பட்ஜெட்டில் பெரும்பகுதி பிலிமுக்கே ஒதுக்கப்படும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அது தேவையில்லை என்பதால் சிறு முதலீட்டு படங்களின் தயாரிப்பு அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 150 படங்களின் படப்பிடிப்பு, தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கணக்கு குறும்படங்களையும் சேர்த்து என்கிறார்கள். முன்பு சில தியேட்டர்களில் மட்டுமே டிஜிட்டல் சினிமாவை திரையிடும் வசதி இருந்தது. இப்போது 75 சதவிகித தியேட்டர்கள் இந்த வசதிகளை கொண்டிருக்கின்றன.
 சமீபத்தில் நடந்த பிக்கி மாநாட்டில் பேசிய கமல்ஹாசன், 'டிஜிட்டல் சினிமா தவிர்க்க முடியாத ஒன்று. நாளைக்கு செல்போனில் சினிமா வெளியாகும். ரசிகனின் வீட்டுக்கே ரிலீஸ் தேதியன்று படம் முறையாகச் சென்று சேரும் காலம் வரும்.
இதற்கு டிஜிட்டல் தவிர்க்க முடியாத ஒன்று' என்றார். 'சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, படைப்பாளிகளுக்கும் டிஜிட்டல் வரப்பிரசாதம். ஒரு பிலிம் பிரிண்டுக்கு, 60 ஆயிரம் வரை செலவாகிறது. டிஜிட்டல் வடிவத்துக்கு பத்தாயிரத்திற்கும் குறைவுதான்'' என்கிறார் தயாரிப்பாளரும், இயக்குனருமான ராம.நாராயணன்.

டிஜிட்டல் சினிமா சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களிடையே வரவேற்பை பெற்றாலும் ஒளிப்பதிவாளர்களிடம் அதிக வரவேற்பை பெறவில்லை. முன்னணி ஒளிப்பதிவாளர்கள் டிஜிடலுக்கு தயக்கம் காட்டுகிறார்கள். 50 கோடிக்கு மேல் செலவு செய்யும் நிறுவனத்துக்கு பிலிம் செலவு பொருட்டல்ல என்பது இவர்கள் வாதம். பெரும் பொருட்செலவில் டிஜிட்டலில் படமாக்கப்பட்ட காட்சிகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மீண்டும் ஷூட் பண்ண வேண்டிய நிலைமை வந்ததை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

'என்னதான் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் பிலிமுக்கு மாற்று வரவில்லை. டிஜிட்டல் கேமரா, வெளிநாட்டின் குளிர் தட்பவெட்பத்தை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுபவை. 'பருத்தி வீரன்' படத்தை டிஜிட்டலில் எடுத்திருக்கவே முடியாது. காரணம் ஷூட்டிங் முழுவதும் 100 டிகிரிக்கும் கூடுதலான வெயிலில் நடந்தது. செலவு அதிகம் என்பதை தவிர, பிலிமில் வேறுகுறைபாடு இல்லை, அப்படி இருக்க, ஏன் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும்?' என்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.

இந்த விவாதங்கள் ஒருபக்கம் இருந்தாலும் டிஜிட்டல் சினிமா அதிகரித்துள்ள நிலையில் பல புதிய கோரிக்கைகள் எழுந்துள்ளன. முன்பு டிஜிட்டல் முறையில் தணிக்கை குழுவினர் படம் பார்த்தால் அதற்கு, 'டிஜிட்டல் சினிமா' என்று சான்றிதழ் கொடுத்து வந்தனர். 'பியூச்சர் பிலிம்' சான்றிதழ் வாங்க வேண்டுமானால் டிஜிட்டலில் படம் எடுத்தாலும் அதை பிலிமுக்கு மாற்றி சென்சாருக்கு அனுப்ப வேண்டும். சமீபத்தில்தான் இந்த முறை மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல டிஜிட்டல் சினிமாவின் வியாபார மதிப்பு மிகவும் குறைவு என்கிறார்கள்.

'டிஜிட்டல் சினிமாவுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும், விருது பரிசீலனை பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தால் சில லட்சங்களிலேயே ஒரு படத்தை எடுத்து விடலாம் என்ற நிலை உள்ளதால் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யாமல் பல படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்றாமல், புதியவர்கள் பணியாற்றுகிறார்கள். இதை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதும் திரையுலகம் அடுத்து சந்திக்கப் போகும் பிரச்னை' என்கிறார்கள்

கருத்துகள் இல்லை: