செவ்வாய், 20 டிசம்பர், 2011

தலைவரின் ‘மறைத்து வைக்கப்பட்ட மரணம்’ இன்று உறுதி செய்யப்பட்டது!

வட கொரிய மக்களால் ‘அன்புத் தலைவர்’ என்று அழைக்கப்பட்ட (அல்லது துப்பாக்கி முனையில் அழைக்க வைக்கப்பட்ட) ஜனாதிபதி இறந்துபோன சேதி, அவர் இறந்து 2 நாட்களின்பின் இன்று (திங்கட்கிழமை) காலை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய அறிவிப்பில், அவர் சனிக்கிழமை மரணமடைந்தார் என்பதும் கூறப்பட்டுள்ளது ஆச்சரியம்தான்.
69 வயதில் மரணமடைந்துள்ள ஜனாதிபதி கிம் ஜொங்-இல் இறந்துபோன செய்தி உடனே அறிவிக்கப்படாமல் வைக்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை தென்கொரியா வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், சுலபமாக ஊகித்துக் கொள்ளலாம்.
ஜனாதிபதிக்குப் பின் அதிகாரத்தை அவரது மகன் சிக்கல் இல்லாமல் கைப்பற்றிக் கொள்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காகவே மரணச் செய்தி சுமார் 48 மணி நேரம் தாமதிக்கப்பட்டிருக்கிறது.
இன்று காலை வெளியிடப்பட்ட மரண அறிவிப்புடன் கூடவே, “மக்களும் ராணுவமும் ‘அன்புத் தலைவரின்’ இளைய மகனுக்குப் பின்னால் அணிதிரண்டு, அவரது கரங்களை வலுப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது (உத்தரவிடப்பட்டுள்ளது)
ஜனாதிபதி தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார் என்று இப்படியான போட்டோக்கள் அடிக்கடி வெளியிடப்படுவது வட கொரியாவில் வழக்கம். அவர் ஆலோசனை சொல்லவே ட்ரெயினில் சென்று இறந்தார் என்று இப்போதும் சொல்கிறார்கள்!
வட கொரிய அரசின் அதிகாரபூர்வ நியூஸ் ஏஜென்சி KCNA, “அன்புத் தலைவர் சனிக்கிழமை மரணமடைந்தார். நாட்டுக்காக கடுமையான பணிபுரிந்ததில் உடலும், மனமும் சோர்வடைந்து, அதனால் ஏற்பட்ட பாதிப்பில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தனது பிரத்தியேக ட்ரெயினில் அவர் பயணம் செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, உடனடியாக மரணம் சம்பவித்தது. அரசு ஊழியர்களது பணியை மேற்பார்வை செய்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கவே அவர் ட்ரெயினில் பயணம் செய்துகொடிருந்தார்” என்று அறிவித்துள்ளது.
2008-ம் ஆண்டு அவரது உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டது எனவும், அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் உள்ளார் எனவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியிருந்தன. அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., வட கொரிய ஜனாதிபதியின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது என்று கூறியிருந்தது.
ஆனால் வடகொரிய அரசு, அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவை முழுமையாக மூடிமறைத்திருந்தது.
அந்தச் சம்பவம் நடைபெற்று சில மாதங்களின் பின்னரே அவர் வெளியே தலைகாட்டியிருந்தார். அப்போதுகூட அவருக்கு உடல்நிலையில் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை உள்நாட்டு மக்களுக்கே தெரியாதபடி கவனமாக மறைத்துக் கொண்டது வடகொரிய அரசு.
இன்றைய அறிவிப்பு, எதிர்பாராத அதிர்ச்சியாக வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை அவர் மரணமடைந்தது குறித்து வதந்திகள்கூட அடிபட இல்லை!

கருத்துகள் இல்லை: