சென்னை : பாதிரிவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த வாரம் விடுமுறை தினத்தில் பள்ளிக்கு வந்து மொட்டை மாடியில் வைத்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்து, அந்த காட்சியை செல்போன் மூலம் பரப்பியதால், பிளஸ் 2 மாணவர்கள் 5 பேருக்கும் 11ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கும் டிசி கொடுக்கப்பட்டது. டிசி கொடுக்கப்பட்ட செதில்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாணவி, மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாதபோது, மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்படி, பாதிரிவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போனில் படம் பிடித்த 5 மாணவர்களை கும்மிடிப் பூண்டி டிஎஸ்பி குமார் தலைமையிலான போலீ சார் தேடி வருகின்றனர்.பிரேத பரிசோதனை முடிந்தபின் உடலை கிராமத்துக்கு கொண்டு சென்றனர். திடீரென மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மாதர்பாக்கத்தில் இருந்து செதில்பாக்கம் செல்லும் கூட்டு சாலையில் உடலை வைத்து மறியல் போராட்டம் நடத்தினர். மாணவி சாவுக்கு காரணமான மாணவர்கள் 5 பேரை கைது செய்ய வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
தகவலறிந்து, கும்மிடிப் பூண்டி டிஎஸ்பி குமார் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தபின் சடலத்தை எடுத்துக் கொண்டு சென்றனர். இதனால், அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக