புதன், 7 டிசம்பர், 2011

பரம்பிக்குளம்-ஆழியாறு அணையைத் தகர்க்க சதி?

Parambikulam and Azhiyar Dams
பொள்ளாச்சி: தமிழகம், கேரளா இடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கும் தொடர்புள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டப் பாதைகளையும் அணைகளையும் தகர்க்கும் சதித் திட்டத்துடன் ஒரு கும்பல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குள் ஊடுறுவியுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கும்பல் விட்டுச் சென்ற பொருட்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் பரம்பிக்குளம், ஆழியாறு திட்ட அணைகள் மற்றும் நீர்வழிப் பாதைகள் குறித்த மேப்கள் கிடைத்துள்ளன.

தற்போது இந்தக் கும்பல் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் ஊடுறுவியுள்ளதாக தெரிகிறது. இவர்கள் நக்சலைட்களா அல்லது தீவிரவாதிகளா என்பது தெரியவில்லை. இதையடுத்து இப்பகுதியில் அதிரடிப்படையினர் தீவிர வேட்டையி்ல இறங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 33 கிமீ தூரத்தில் உள்ளது டாப்சிலிப் வனப்பகுதி, தமிழக - கேரள எல்லையில் அமைந்திருக்கிறது. இப் பகுதியில் இருக்கும் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறையில் தொடங்கி அமராவதி, பொள்ளாச்சி, மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரகங்களை உள்ளடக்கியது. 858 சதுர கிமீ பரப்பு உடையது. 300-க்கும் மேற்பட்ட வகையான விலங்குகள் உள்ளன. தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமாக டாப்சிலிப், இந்திகாந்தி வன உயிரின சரணாலயம் இருப்பதால், இங்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகம்.

புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட எருமைப்பாறை பகுதியில் வனக் காவலர்கள் அன்பழகன், மெய்யப்பன் ஆகியோர் சனிக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த பெரிய பிளாஸ்டிக் பையைக் கண்டெடுத்துள்ளனர்.

அதில் சிறிய டார்ச் லைட்டுக்குப் பயன்படுத்தும் பேட்டரி உறைகள், 6 கத்திகள், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் வரும் அணைகள், நீர்வழிப்பாதைகளின் வரைபடம், வனப் பகுதியில் அந்த அணைகளுக்குச் செல்வதற்கான வழித்தட விவரம், தீப் பெட்டிகள், பேண்ட், டி-சர்ட், மலையேற்றப் பயிற்சிக்குப் பயன்படுத்தும் கொக்கியுடன் கூடிய 47 மீட்டர் கயிறு, ஆக்ஸா பிளேடு ஆகியவை இருந்துள்ளது.

இதுகுறித்து டாப்சிலிப் வனச்சரகர் சரவணனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் அந்த பொருள்களை மீட்டு வந்துள்ளனர். இதுபற்றி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள முகாமில் இருந்து சிறப்பு அதிரடிப்படையின் எஸ்பி கருப்பசாமி தலைமையில் அதிரடிப்படை வீரர்கள் 65 பேர், வனத்துறையினர் 25 பேர் நான்கு குழுக்களாகப் பிரிந்து திங்கள்கிழமை தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பந்தாரவரை, கதவுசாத்தி, சீச்சாலி, கேரள பகுதியான கரியஞ்சோலை ஆகிய பகுதிகளுக்கு நான்கு குழுக்களாகப் பிரிந்து மாலை 6 மணி வரை தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேடுதல் வேட்டை இன்றும் தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சோதனையைத் தொடர்ந்து டாப் சிலிப்பில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். டாப் சிலிப்புக்கு சுற்றுலாப் பயணிகள் வரவும்,தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் போகவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதிக்குள் ஊடுறுவியிப்பது வேட்டைக்காரர்களா, நக்சலைட்களா அல்லது தீவிரவாதிகளா என்பது தெரியவில்லை.

பிஏபி என்று அழைக்கப்படும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் என்பது தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையிலான முக்கிய நீர்ப்பாசனத் திட்டமாகும். இரு மாநில அரசுகளும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலம் தண்ணீரைப் பங்கிட்டு வருகின்றன.

பரம்பிக்குளம் அணை கேரளாவில் உள்ளது. ஆழியாறு அணை தமிழகத்தில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மேல் நீரார் அணை, திருமூர்த்தி அணை, கான்டூர் கால்வாய் ஆகியவை வருகின்றன. இவை அனைத்தின் வரைபடங்களும் கிடைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு மாநிலங்களுக்கிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட அணைகளின் வரைபடங்கள் வனப்பகுதியில் சிக்கியிருப்பது பல்வேறு யூகங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை: