திங்கள், 5 டிசம்பர், 2011

கேரள எல்லையில் பதற்றம் முற்றுகிறது முல்லைப்பெரியாறு விவகாரம்

மதுரை : முல்லைப் பெரியாறு அணை பிரச்னை முற்றுகிறது.  கேரளாவில்  அரசு மற்றும் அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்னையை பூதாகாரமாக்கி,  மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தமிழக எல்லைப் பகுதியிலும் பெரியாறு அணை பகுதியிலும் வன்முறை ஏற்படும்  பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பெரியாறு அணை பிரச்னையில் பதற்றத்தை தணிக்க தமிழகம் மற்றும் கேரள உயர் அதிகாரிகளின் கூட்டத்தை மத்திய அரசு இன்று நடத்த ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையால் எந்த பயனும் ஏற்படாது என்பதால் இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதனால், அடுத்து என்ன செய்வது என்பது பற்றி மத்திய அரசும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தமிழக எல்லையில் கேரளத்தைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் வன்முறை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். அடாவடி வசூல்: புதிய அணை கட்ட தமிழகத்தை சேர்ந்த ஜீப்களுக்கு தலா ணீ100 கட்டணம் செலுத்த வேண்டும் என கேரள மாநில நுழைவு வாயிலில் அடாவடி வசூலில் சில அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் பாதியிலே வீடு திரும்பியதாக கம்பத்தில் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. கேரளாவில், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் பெரியாறு அணை பகுதிக்குள்  அத்துமீறி புகுந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் தலைமதகு பகுதிக்குள் நுழைந்த அம்மாநில இளைஞர் காங்கிரசார் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டத்தில் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், கோம்பை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரள மாநிலம் நெடுங்கண்டம், கட்டப்பணை, மேட்டுக்குழி, மாலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலம், காபி தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். தோட்ட உரிமையாளர்கள் ஜீப்களை மாத வாடகைக்கு பேசி, தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து செல்வர். தமிழ்நாட்டை சேர்ந்த 600 ஜீப்கள் கேரள மாநிலத்திற்கு தினசரி தோட்ட தொழிலாளர்களை ஏற்றி சென்று வருகின்றன.

நேற்று காலை வேலையாட்களுடன் சென்ற ஜீப்களை கம்பம் மெட்டு கேரள எல்லையில் கேரள மாநிலத்தவர்கள் மறித்தனர். அவர்கள் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும். அதற்கு பணம் வசூலிக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ணீ100 தர வேண்டும் என்று தகராறு செய்தனர். பணத்தை வாங்கிக் கொண்டு, டிரைவர் அசோசியேசன் என்று மலையாளத்தில் அச்சடித்த ரசீதை கொடுத்தனர்.

அதில், எந்த பதிவெண்ணும் கிடை யாது. இதனால் சந்தேகமடைந்த சில ஜீப் டிரைவர்கள், பணம் கொடுக்க முடி யாது என்றனர். ஆத்திரமடைந்த அக்கும்பல், வேனில் அமர்ந்திருந்த தமிழகத்தை சேர்ந்த பெண்களை ஜீப்பை விட்டு இறங்குமாறு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் கேரளாவில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் வீடு திரும்பினர்.

பா.ஜ கட்சியினர் கைது: பெரியாறு அணையில் உள்ள பேபி அணைப் பகுதிக்கு சென்ற பா.ஜ. கட்சியினர் 18 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. கேரள அரசியல் கட்சியி னரின் அத்துமீறும் செயல் களால் அணைப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று கேரள பா.ஜ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வல்லக் கடவு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாக 6 கி.மீ. தூரம் சென்றால் பெரியாறு அணைக்கு செல்லலாம்.

இப்பகுதி வழியாக ரகசியமாக இடுக்கி மாவட்ட பா.ஜ. இளைஞரணி தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 18 பேர் சென்றனர். அவர்கள் பெரியாறு அணை அருகேயுள்ள பேபி அணையில் ஏறி பெரியாறு அணையை உடைப்போம் என கோஷமிட்டனர். மேலும் அங்கு பா.ஜ. கட்சி கொடியை ஏற்றினர். இது குறித்து தாமதமாக தகவலறிந்த கேரள போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த 18 பேரையும் கைது செய்தனர்.

கேரள போலீஸ் பாதுகாப்பு: பெரியாறு அணையில் கேரள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கேரள அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பெரியாறு அணையை உடைப்போம் என அத்துமீறி வருகின்றன. நேற்று பாரதிய ஜனதா கட்சியினர், காங்கிரசுக்கும் தாங்கள் சளைத்தவர்களல்ல என்ற பாணியில் கடப்பாரைகளுடன் அணையை உடைப்பதற்கு சென்றனர்.

மத்திய படை பாதுகாப்பு: பெரியாறு அணையை உடைக்கும் முயற்சியில் கேரள அரசியல் கட்சியினர் பல்வேறு சுயநல சக்திகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை மக்களிடையே பீதியை ஏற்படுத்திய இந்த சக்திகள் தற்போது அணையை உடைக்கும் செயலலிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

 எனவே தென்தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் பெரியாறு அணையை பாதுகாக்க கேரள போலீசாரைவிட மத்திய ரிசர்வ் போலீஸ் படையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரியாறு அணையின் பாதுகாப்பு தற்போது கேள்விக் குறியாகி உள்ளது. இதனால் அணைப் பகுதிக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

குறும்பட சிடி இன்று முதல் ஒளிபரப்பு

கேரளாவின் சில அரசியல் கட்சியினர் கிராபிக்ஸ் சிடிக்களை டிவிடியாக தயார் செய்து இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இலவசமாக சப்ளை செய்தனர். தொடர்ந்து ‘டேம் 999Õ படம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேரள அரசின் செயல்பாட்டுக்கு பதிலடி தரும் வகையில், பெரியாறு அணை சம்பந்தமாக தமிழக பொதுப்பணித் துறைகளின் பொறியாளர் குழுவினர்,

கட்டுமான நிறுவனங்களை சேர்ந்த பொறியாளர் வல்லுநர் குழுவினர் தந்த அறிக்கையின் அடிப்படையிலும் 45 நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தை விவசாயிகள் தயார் செய்துள்ளனர். இன்று முதல் ஒளிபரப்பாகும். புதிய அணை கட்டினாலோ அல்லது அணையை இடிக்கும் முயற்சியில் இறங்கினாலோ தென்மாவட்டங்களில் சோமாலியா நாட்டில் நிலவும் பஞ்சம், பசி, பட்டினி ஏற்படும். குடிநீருக்கே திண்டாட்டம் ஏற்படும் நிலை உருவாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: