ஈவ்டீசிங்: சைக்கிளில் வேகமாக சென்ற +2 மாணவி கொலை: கல்லூரி மாணவர் கைது
பாளையங்கோட்டை தியாகராஜநகரைச் சேர்ந்தவர் செய்யது முகம்மது. இவருடைய மகள் மைமூன் சர்மிளா (வயது 17). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலையில் வகுப்பு முடிந்ததும் மாணவி மைமூன் சர்மிளா, சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது திடீர் என்று ஒரு கார், மாணவி சர்மிளா சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
பலத்த காயம் அடைந்த சர்மிளா ரத்த வெள்ளத்தில் ரோட்டில் விழுந்தார். உடனே அவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சர்மிளா நேற்று பரிதாபமாக இறந்தார்
இதை அறிந்ததும் அவருடன் படித்து வந்த பள்ளிக்கூட மாணவ மாணவிகள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சர்மிளா மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை, கல்லூரி மாணவர் ஒருவர் ஓட்டி வந்தார் என்பது தெரியவந்தது. உடனே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் அனைவரும், சம்பவத்துக்கு காரணமான அந்த கல்லூரி மாணவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்று போலீசார் தெரிவித்ததை அடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, முற்றுகை போராட்டம் நடத்தினர். மாணவர்கள் தரப்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனுவும் கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மாணவி மைமூன் சர்மிளா சென்ற சைக்கிளின் மீது, ஒரு கல்லூரி மாணவர் காரைக் கொண்டு மோதிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதில் மாணவி சர்மிளா இறந்துவிட்டார். தற்போது தலைமறைவாகி உள்ள அந்த கல்லூரி மாணவர், சர்மிளாவை பல நாட்களாக பின்தொடர்ந்து வந்து கேலி, கிண்டல் செய்தவர்.
சம்பவத்தின் போது ஒரு புதிய காரில் வந்து ஈவ்டீசிங் செய்து சர்மிளாவுக்கு தொல்லை கொடுத்தார். இதைப் பார்த்து பயந்து போன சர்மிளா சைக்கிளில் வேகமாக சென்றார். அப்போது அவரது சைக்கிளின் மீது அந்த மாணவர் வேண்டுமென்றே காரை மோதவிட்டுள்ளார்.
எனவே விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி, அந்த மாணவரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மாணவி சர்மிளா மீது மோதிய கார், மானூர் அருகே ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் தனியாக நின்று கொண்டிருந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்து நெல்லை கொண்டு வந்தனர்.
இதற்கிடையே நெல்லை மாநகரபோக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் விசாரணை நடத்தி மானூரை சேர்ந்த மாணவர் மோனீஸ் ரேஷர் (வயது 19) என்பவரை கைது செய்தனர். இவர் சென்னை தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் கமிஷனர் கருணாசாகர் கூறுகையில் மாணவி சர்மிளா மீது வாகனத்தை மோதிய மாணவர் மோனீஸ் ரேஷர், மாணவியை கிண்டல் செய்து அவர் மீது வேண்டும் என்றே வாகனத்தை மோதியதாக புகார் வந்து உள்ளது. இந்த புகார் மீது விசாரணை நடத்தி அந்த மாணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக