சனி, 10 டிசம்பர், 2011

உச்ச நீதிமன்றத்தையும் விஞ்சியவரா உம்மன் சாண்டி?

ஒவ்வொரு ஆண்டும் காவிரிப் பிரச்னை தமிழகத்தைக் கலங்கவைப்பது வழக்கம். இந்த ஆண்டு காவிரியின் இடத்தைக் கைப்பற்றியிருக்கிறது முல்லைப் பெரியாறு. 'முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், லட்சக்கணக்கான மக்கள் அழிந்துவிடுவார்கள்’ என்று 'டேம் 999’ திரைப்படம்,
கேரள முதல்வர் உம்மன்சாண்டி, எதிர்க் கட்சித் தலைவர் அச்சுதானந்தன், பா.ஜ.க, இளைஞர் காங்கிரஸ் என எல்லோரும் கேரளாவில் ஒருமித்த குரலில் எதிர்ப்புக் கிளப்பி வரும் நிலையில் பழ.நெடுமாறனைச் சந்தித்தேன்.

''அவ்வப்போது பெரியாறு அணை குறித்து சிறு சிறு சலசலப்புகள் இருந்த நிலையில், இப்போது ஏன் கேரளா தீவிரமாக முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையை எழுப்புகிறது?''

''இதற்குப் பின்னணியில் இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கேரளாவில் அமைந்துள்ள காங்கிரஸ் அரசு, மைனாரிட்டி அரசு. அமைச்சர் ஒருவர் மரணம் அடைந்த தொகுதியில் இப்போது இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. காங்கிரஸ் அணி எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும். தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி இருப்பதால், பொய்ப் பிரசாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது. இரண்டாவதாக, புனேவில் உள்ள மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையம், டெல்லியில் உள்ள மத்திய மண் மற்றும் கனிம ஆராய்ச்சி நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய மண்ணியல் கணக்கெடுப்புத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டு பெரியாறு அணையின் பலத்தை ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. இந்தக் குழு 'அணை பலமாக இருக்கிறது’ என்று அறிக்கை தாக்கல் செய்யவிருப்பதை கேரள அரசு அறிந்துள்ளது.
ஏற்கெனவே, மத்திய நீர் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் 1980 - களில் இருந்து பெரியாறு அணைபற்றி ஆராய்வதற்காக ஐந்து முறை நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுக்கள் 'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப் பானதுதான்’ என்று உறுதி செய்ததைத் தொடர்ந்துதான், 2006-ல் அணையின் நீர் மட்டத்தை 142 அடிகளாக உயர்த்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது மேற்கண்ட நிபுணர் குழுவும் அணையின் பாதுகாப்பை உறுதிசெய்துவிட்டால், கேரள அரசால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால்தான் பிரதமரை அணுகி, தமிழக அரசைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முயற்சி செய்கிறது. 'பேச்சுவார்த்தை நடக் கிறது’ என்பதையே காரணம் காட்டி, நமக் குச் சாதகமாக வரவேண்டிய தீர்ப்பைத் தடுப்பதற்கான சதிதான் இது. இந்தச் சூழ்ச்சியில் சிக்காமல் 'பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள மாட்டோம்’ என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது.''



''ஏற்கெனவே காவிரிப் பிரச்னையில் கர்நாடகாவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை. இப்போது கேரளாவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வில்லையே, ஏன்?''

''அதற்குக் காரணம், மத்திய அரசின் பலவீனம்தான். 1956-ல் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, நதி நீர்ப் பிரச்னைகள் தொடர்பாக இரண்டு சட்டங்களைக் கொண்டுவந்தார். முதலாவ தாக, நதி நீர்த் தாவா சட்டம். இதன்படி நதி நீரைப் பங்கிட்டுக்கொள்வதில் மாநிலங் களுக்கு இடையே பிரச்னை எழுந்தால், நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும். ஒருவேளை அந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏதாவது ஒரு மாநில அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்பதற்காகத்தான்... இரண்டா வது சட்டம். இந்தச் சட்டத்தின்படி நதி நீர் வாரியம் அமைக்கப்படும். உதாரணமாக, கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்காததால், நதி நீர் வாரியம் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். அதன் பிறகு வாய்க்கால்கள், அணைகள், மதகுகள் என்று எவற்றின் மீதும் தமிழக அரசுக்கோ, கர்நாடக அரசுக்கோ அதிகாரம் இருக்காது. இரண்டு மாநிலங்களுக்குப் பொதுவான நதி நீர் வாரியம்தான் நீரைப் பங்கிட்டுக் கொடுக்கும். ஆனால், நேருவுக்குப் பிறகு வந்த எந்த அரசுமே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தவில்லை. தமிழகத்துக்கு மட்டும் தான் மற்ற மாநிலங்களோடு பிரச்னை இருக்கிறது என்று இல்லை. இந்தியா முழுக்கவே நதி நீர்ப் பிரச்னைகள் இருக் கின்றன. ஆனால், மத்தியில் அமையும் அரசு கூட்டணி அரசாகவும் பலவீனமான அரசாகவும் இருப்பதால் உறுதியானநிலைப் பாட்டை எடுப்பது இல்லை.

'காவிரி எங்கள் மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது. எங்களுக்குப் போகத்தான் மிச்ச நீர்’ என்கிறது கர்நாடகா. இதே நியாயத்தை நாமும் பேசினால்? நெய்வேலி மின்சாரமும் எண்ணூர் அனல் மின்சார நிலைய மின் சாரமும் எங்கள் மாநிலத்தில் எங்கள் தொழிலாளர்களால் உற்பத்தி ஆகிற மின்சாரம். அதை கர்நாடகாவுக்குத் தர மாட்டோம் என்று சொன்னால், என்ன ஆகும்? அதே போல, தமிழ்நாட்டில் ஆனைமலையில் உற்பத்தியாகும் நீர்தான் கேரளாவில் பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடி ஆறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இங்கே உற்பத்தியாகும் தண்ணீரை இங்கேயே அணை கட்டித் தடுத்தால் என்ன ஆகும்? தமிழகத்தில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் வசிக்கிறார்கள். நமக்குப் பெரியாறு அணை மூலம் கேரளா தரும் தண்ணீர் வெறும் 10 டி.எம்.சி-தான். அதாவது, 126 மில்லியன் கன மீட்டர். ஆனால், 30 லட்சம் மலையாளிகள் தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்குப் பயன்படுத்தும் நீரோ 5,100 மில்லியன் கன மீட்டர் நீர். எனவே, தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், 'தயவுசெய்து பொய்ப் பிரசாரத்தை நிறுத்துங்கள்’ என்று கேரள அரசியல்வாதிகளுக்கு நீங்கள் சொல்ல வேண்டும். இல்லை என்றால்,எதிர் காலத்தில் இதே மாதிரி அமைதியான சூழல் நிலவும் என்று எதிர்பார்க்க முடியாது.

மேலும், பெரியாறு அணைக்குச் செல்லும் நீரில், 5-ல் 1 பங்கு தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது. அதாவது, 4867.9 மில்லியன் கன மீட்டர் நீர் இங்கிருந்து பெரியாறு அணைக்குச் செல்கிறது. ஆனால், நாம் கேட்பதோ வெறுமனே 126 மில்லியன் கன மீட்டர் நீர்தான். அதே போல் அரபிக் கடலில் கலக்கும் நீரின் அளவு 2,313 மில்லியன் கன மீட்டர். இதில் 18 சதவிகித நீர்தான் நாம் கேட்கிறோம். 'கடலில் வீணாகக் கலந்தாலும் பரவாயில்லை, தமிழகத்துக்குத் தர மாட்டோம்’ என்று அடம்பிடிக்கிறது கேரளா. இதே நிலை தொடர்ந்தால்... தேசிய ஒருமைப்பாடு சுக்குநூறாகும்.''

'' 'கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது இல்லை என்று தமிழர்கள் போராடுவதைப் போலத் தான், நாங்களும் பெரியாறு அணை பாதுகாப்பானது இல்லை என்று போராடுகிறோம்’ என்று ஜெயலலிதா வுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி சொல்லி இருக்கிறாரே?''

'' 'கூடங்குளம் அணு உலை பாதுகாப் பானது இல்லை’ என்று பல விஞ்ஞானி களே கூறுவதால்தான், நாம் தமிழர்களுக்கு எதிரான அந்த அணு உலையை எதிர்க் கிறோம். ஆனால், 'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதுதான்’ என்று உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவே சொல்கிறதே. உம்மன்சாண்டி என்ன விஞ்ஞானியா, அல்லது நிபுணரா? அல்லது உச்ச நீதிமன்றத்தையும் விஞ்சியவரா உம்மன்சாண்டி?''

'' 'ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்’, 'மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, ஈழ ஆதரவாளர்கள் ஜெயலலிதாவைப் பாராட்டினார் கள். ஆனால், இப்போது மாவீரர் நாள் கூட்டங்களுக் குத் தடை, மூவர் தூக்குத் தண்டனையில் முன்னுக் குப் பின் முரணாக நீதிமன்றத்தில் மனுக்கள் என்று செயல்படுகிறாரே ஜெயலலிதா?''

''தமிழக மக்களின் ஒட்டுமொத்த மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில்தான் ஒருமனதாக அந்த இரண்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அந்தத் தீர்மானங்களுக்கு முரணாக மாவீரர் நாள் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. விழுப்புரத்தில் நாங்கள் நடத்திய மாவீரர் கூட்டத்துக்குக் காவல் துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்று வெற்றி பெற்றோம். இனியும் தமிழகம் முழுக்க மாவீரர் நாள் கூட்டங்களை நடத்துவோம். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு முரணாக நடந்துகொள்வது, தமிழக அரசின் மதிப்பையே குறைக்கும் என்பதை ஜெய லலிதா புரிந்துகொள்ள வேண்டும்.''

''பிரபாகரன் குறித்து நீங்கள் எழுதி, வெளியாகஇருக்கும் புத்தகத்தில் இறுதிப் போர் குறித்தும் பிரபாகரன் என்ன ஆனார் என்றும் தகவல்கள் இருக்குமா?''

''புத்தகம் வந்தவுடன் படித்துத்தான் பாருங்களேன்!''

''நீங்கள் தொடர்ச்சியாக 'பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ என்று கூறி வருகிறீர்கள். அதற்கான ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா?''

''(சிரிக்கிறார்) இதே கேள்விக்கான பதிலைத்தான் இந்திய உளவுத் துறையும் இலங்கை அரசும் எதிர்பார்க்கிறது. அதனால், அது குறித்து வெளிப்படையாகப் பேச முடியாது. பிரபாகரன் இருக்கிறார். நலமாக இருக்கிறார்.''

''கனிமொழி ஜாமீனில் வெளிவந்திருப்பது, கட்டண உயர்வுகளால் அ.தி.மு.க. ஆட்சியின் மீது ஏற்பட்டு இருக்கும் அதிருப்தி... இவற்றால் தி.மு.க- வுக்கு எழுச்சி ஏற்படுமா?''

''தி.மு.க-வினர் தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் இருந்து குற்றமற்றவர்கள் என்று நிரூபித்து வெளிவர வேண்டும். அதை விட்டுவிட்டு, 'வழக்கே போடக் கூடாது’ என்று போராட்டங்கள் நடத்துவது நியாயம் இல்லை. காமராஜர் முதல்வராக இருந்தபோது, அவர் தங்கை வயிற்றுப்பேரன் விருதுநகரில் ஒரு அடிதடி வழக்கில் மாட்டியபோது அவரைக் கைது செய்ய காவல் துறை தயங்கியது. செய்தி தெரிந்ததும் காமராஜரே மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரிடம் அவரைக் கைது செய்ய உத்தரவிட்டார். அதுதான் ஒரு தலைவருக்கான இலக்கணம். ஆனால், கருணாநிதியாலோ தவறு செய்யும் தங்கள் கட்சிக்காரர்களைக் கண்டிக்க முடியவில்லை. காரணம், அவரது குடும்பத்தாரே தவறு செய்தபோது அவரால் எப்படி மற்றவர்களைக் கண்டிக்க முடியும்? தி.மு.க-வின் இன்றைய சீரழிவுக்குக் காரணமே, தலைமையில் இருந்து அடி மட்டம் வரை செய்த தவறுகள்தான். அதனால் அதைச் சரிசெய்யாமல், தி.மு.க-வுக்கு எழுச்சிமிக்க எதிர்காலம் இல்லவே இல்லை!''

கருத்துகள் இல்லை: