செவ்வாய், 6 டிசம்பர், 2011

தமிழர்களையும், வாகனங்களையும் தாக்கும் விஷமிகள்- குமுளியில் 144 போலீஸ் தடை

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு தமிழர்களையும், ஐயப்ப பக்தர்களையும், தமிழக வாகனங்களையும் விஷமிகள் தொடர்ந்து தாக்கி வருவதைத் தொடர்ந்து தமிழக, கேரள மாநில எல்லையில் உள்ள குமுளியில் 144 தடை உத்தரவை இடுக்கி கலெக்டர் பிறப்பித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை சில அரசியல் கட்சிகள் தூண்டி விட்டு வருவதால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சிலர் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் குதித்துள்ளனர். தமிழகத்தில் கேரள மக்களுக்கு எதிராக ஒரு சம்பவம் கூட நடைபெறாமல், தமிழக மக்கள் மிகப் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து வரும் நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்களைத் தாக்குவது, வாகனகங்களைத் தாக்குவது, ஐயப்ப பக்தர்களைத் தாக்குவது என்று அடாவடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இப்படி நடந்தும் கூட தமிழகத்தில் குறிப்பாக கேரள மக்கள் அதிகம் வந்து போகும் தேனி மாவட்டத்திலும் சரி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் சரி, கோவையிலும் சரி ஒரு பிரச்சினை கூட எழாமல் தமிழக மக்கள் கண்ணியத்தோடு நடந்து வருகின்றனர்.

ஆனால் கேரள, தமிழக எல்லையில் உள்ள குமுளியில் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதையடுத்து அங்கு நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவை இடுக்கி மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள், கூட்டமாக சேருவது, ஊர்வலம் போவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: