ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

படப்பிடிப்பில் கேமராமேன் பலி நடிகைகள் மயக்கம் carborn monoxide from generator

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் இயக்குனர் கலைமாமணி என்பவர் இயக்கும் `143/144' என்ற சினிமா படப்பிடிப்பு கடந்த 9-ந்தேதி முதல் நடந்து வருகிறது. இந்த படத்தில் புதுமுகங்கள் கிருஷ்ணமூர்த்தி கதாநாயகனாகவும், சொர்ணாதாமஸ் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் நாயுடுபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று மாலை நடந்து கொண்டு இருந்தது. படக்குழுவினர் 55 பேர் இந்த படப்பிடிப்பில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு வசதிக்காக ஜெனரேட்டர் இயக்கப்பட்டு இருந்தது.
படப்பிடிப்பு தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்ததால் ஜெனரேட்டரை அறைப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அப்போது ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய அதிக அளவு புகை அறைகளுக்குள் பரவியது. இதனால் அறை முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இந்த புகையால் படத்தின் கேமராமேன் ஜான்பால் என்பவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இவர், சென்னை பள்ளிக்கரணை தேவி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்.மேலும் இந்த புகையால் படத்தின் கதாநாயகி சொர்ணா தாமஸ் (வயது 16) மற்றும் துணை நடிகைகள் சென்னையை சேர்ந்த பிரியா (20), மகேஸ்வரி (18). கேரளாவை சேர்ந்த ஸ்டெல்லா (18), படக்குழுவினர் ராஜன் (47), தாமஸ் கிளிட்டன் (38) ஆகியோர் மயக்கம் அடைந்தனர்.
இதையடுத்து கதாநாயகி உள்ளிட்ட 6 பேரும் கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு நின்றது.
இந்த சம்பவம் குறித்து படப்பிடிப்பு குழுவின் மேலாளர் ராமராஜன் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூச்சுத்திணறி பலியான கேமராமேன் ஜான்பாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: