வெள்ளி, 23 செப்டம்பர், 2011

யாழில் கொள்ளையர்களின் தாக்குதலில் அறுவர் காயம்


யாழ். கொக்குவில் பகுதியில் இரு வீடுகளில் இடம்பெற்ற கொள்ளையர்களின் தாக்குதலில் இரு வைத்தியர்கள் உட்பட 6 பேர் காயமடைந்ததுடன் இவர்களில் ஐவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுமுள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது...இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் வைத்தியரின் வீட்டின் புகை போக்கியினூடாக இறங்கி உள்நுழைந்து வைத்தியர்களின் மீது தாக்குதலை மேற்கொண்டு, அவர்கள் அணிந்திருந்த 4 பவுண் எடையுடைய காப்பு, சங்கிலியை பறிமுதல் செய்ததுடன் அவர்களது கையடக்கத் தொலைபேசியையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இதே கொள்ளையர்கள் வங்கியாளரின் வீட்டிற்குச் சென்று கதவை உடைத்து அவர்களைக் காயப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தடயங்கள் மற்றும் கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்ததுடன் துரித விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கொக்குவில் கிழக்கைச் சேர்ந்தவர்களான யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களாக கடமையாற்றும் கனகலிங்கம் சிவகோணேசன் (வயது 44), இவரது மனைவியான சிவகோணேசன் தாரணி (வயது 42), சிவகோணேசனின் பெற்றோர்களான கனகலிங்கம் (வயது 71), புஸ்பலீலாவதி (வயது 71) ஆகியோர் காயமடைந்ததுடன் மற்றும் ஒரு வீட்டில் வங்கி ஊழியரும் அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் இலங்கை வங்கியில் கடமையாற்றும் சபாரட்ணம் செல்வராசா (வயது 56), செல்வராஜா சர்வலோஜினி (வயது 43) ஆகியோரே காயமடைந்தவர்களாவார்.

கருத்துகள் இல்லை: