ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார்

திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. என்னிடம் நகை, பணம், வீடு என பலவற்றை மோசடி செய்துள்ளார் பரஞ்சோதி. எனவே அவரை வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று பரஞ்சோதியின் 2வது மனைவி ராணி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதிக்கு அக்டோபர்13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் பரஞ்சோதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பரஞ்சோதி கடந்த முறை ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிட்டவர். இந்த முறை கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்காக அத்தொகுதியை அவர் விட்டுக் கொடுத்தார். மேலும் ஜெயலலிதாவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்.


எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் பரஞ்சோதி. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்தபோது அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஜெயலலிதா அணியில் இணைந்து செயல்பட்டார். தீவிர ஜெயலலிதா விசுவாசி. இதற்குப் பரிசளிக்கும் வகையிலேயே அவருக்கு திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா.

இந்த நிலையில் பரஞ்சோதியின் 2வது மனைவி ராணி பரபரப்புப் புகார்களை அடுக்கி ஜெயலலிதாவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், எனது கணவர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. தனது முகல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக என்னிடமிருந்து 70 பவுன் நகைகளைப் பெற்றார். மேலும் எனது வீடு, ரூ. 10 லட்சம் பணம் ஆகியவற்றையும் அவர் மோசடியாக பெற்றுக் கொண்டார்.

இப்படிப்பட்ட ஒருவரை திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளராக நிறுத்தக் கூடாது. எனவே அவரை வேட்பாளராக அறிவித்ததை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ராணி.

ராணியின் இந்த புகார்களால் திருச்சியிலும், அதிமுக வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: