சனி, 24 செப்டம்பர், 2011

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது புதிய தமிழகம்- தனித்துப் போட்டி

முதல்வர் ஜெயலலிதாவின் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எனவே உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவால் அரசியல் ரீதியாக அங்கீகாரம் பெற்ற கட்சிகளில் ஒன்று புதிய தமிழகம். இந்தக் கட்சி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார்.
ஆனால் வழக்கம்போல ஜெயலலிதாவின் அதிரடி அணுகுமுறையால் அதிமுக கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன. ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்ட தேமுதிக கூட்டணியிலிருந்து விலகி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் 2வது கட்சியாக புதிய தமிழகமும் வெளியே வந்துள்ளது. இந்தக் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாக தற்போது அறிவித்துள்ளது.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.அவர் அப்படியேதான் இருக்கிறார்.

அதிமுக கூட்டணியின் வெற்றிக்குக் காரணமான கூட்டணியினரை அவர் கழற்றி விட்டது தவறான முன் உதாரணம். இது சரியல்ல.

உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் தனித்துப் போட்டியிடும். நிறைய இடங்களில் போட்டியிடுவோம். குறிப்பாக தென் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவோம். ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: