வெள்ளி, 23 செப்டம்பர், 2011

புதிய கூட்டணிக்கு வாய்ப்பு?இடதுசாரியினர் எதிர்பார்க்கின்றனர்


சென்னை, செப். 22: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் சேர்ந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.  இவ்விரு கட்சிகளும் தனியாக வந்தால் தாங்களும் அந்த அணியில் சேர்ந்து போட்டியிட விரும்புவதாக விடுதலை சிறுத்தைகள் சார்பில் இக் கட்சியினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.  உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் வேட்பாளர்களை முதலில் அறிவித்த அதிமுக, அடுத்தடுத்து 124 நகராட்சிகளுக்கும், அனைத்து பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கும்கூட எல்லா வார்டுகளுக்குமாக வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது அதிமுக.  இருந்தாலும் மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பதவிகளில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என இடதுசாரி கட்சிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.  மார்க்சிஸ்ட் கட்சியினர் தந்த விருப்பப் பட்டியலுக்கும், அதிமுக தரப்பில் தருவதாகத் தெரிவிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கைக்கும் அதிக வித்தியாசம் இருந்ததால், மார்க்சிஸ்ட் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். பின்னர் வேறொரு பட்டியலைத் தயாரித்து அதிமுக குழுவிடம் தந்திருப்பதாகத் தெரிகிறது.  புதிய பட்டியலில் உள்ளதற்கு நெருக்கமாக ஒதுக்கீடு தருவதாக இருந்தால் தங்களை அழைக்குமாறு மார்க்சிஸ்ட் தரப்பில் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.  இதற்கிடையில் வியாழக்கிழமை மாலை போயஸ் தோட்டத்தில் அதிமுக குழுவைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் குழு நீண்ட நேரம் பேசியது. பின்னர் வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்ட் குழுவினர் செய்தியாளர்களிடம் எதுவும் கூறாமல் சென்றுவிட்டனர்.  மனு தாக்கல் 29-ம் தேதி முடிவடைவதால், மாவட்ட அளவில் ஏற்கெனவே உத்தேசித்துள்ளபடி வேட்பாளர்கள் தனியாகவே வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யுமாறு மார்க்சிஸ்ட் தலைமை அறிவுறுத்தி இருப்பதாகத் தெரிகிறது.  2006-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்போது போட்டியிட்ட இடங்களுக்குக் குறையாத எண்ணிக்கையில் இப்போதும் போட்டியிட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் விரும்புகின்றன. அதற்கேற்ப தாங்கள் போட்டியிட விரும்பும் இடங்கள் பற்றிய பட்டியலை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.தி.மு.க.விடம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.  ஆனால், கடந்த தேர்தலில் இடதுசாரி கட்சிகள் வெற்றிபெற்ற இடங்களைக் கூட மீண்டும் அந்தக் கட்சிகளுக்கு அளிக்க அ.தி.மு.க. தயாராக இல்லை என்றும், அதைவிடக் குறைந்த இடங்களையே அளிக்க அ.தி.மு.க. உத்தேசித்திருப்பதாகவும் தெரிகிறது.  இடதுசாரிகளுடன் சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க விரும்புவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், இக் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.  விடுதலைச் சிறுத்தைகளுக்கு பா.ம.க. அழைப்பு விடுத்திருக்கிற போதிலும், அந்த அணியில் சேருவது பற்றி விடுதலைச் சிறுத்தைகள் இன்னும் உறுதியான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.  தங்களுடன் அணி சேருவது குறித்து விடுதலைச் சிறுத்தைகளின் விருப்பம் குறித்துப் பேச இன்னும் இரு தினங்கள் காத்திருப்பது என இடதுசாரித் தலைவர்கள் கூறியதாகவும் தெரிகிறது.  அவ்வாறு இல்லாமல் போனால், தனித்தேகூட களம் காணத் தயாராக இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் தரப்பில் மாவட்ட நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.  இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வெள்ளிக்கிழமை சென்னை வந்த பிறகு இந்த முட்டுக்கட்டையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படக்கூடும் என இடதுசாரியினர் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை: