புதன், 21 செப்டம்பர், 2011

200 வங்கி லாக்கர்கள் ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு

ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ

பெல்லாரி: சுரங்க மோசடி ஊழலில் சிக்கியுள்ள கர்நாடகத்தின் ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
ரெட்டி சகோதரர்களுக்குச் சொந்தமான ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக இரும்புத் தாது தோண்டும் உரிமம் வழங்கப்பட்டது, சட்டவிரோதமாகஅந்த நிறுவனம் பெருமளவில் இரும்புத் தாதை வெட்டியெடுத்தது உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக ஜனார்த்தன ரெட்டி, அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோருக்கு 200க் வங்கி லாக்கர்கள் இருக்கும் விவரம் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் பெல்லாரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பல்வேறு பெயர்களில் வைக்கப்பட்டுள்ள 350 லாக்கர்கள் குறித்து சிபிஐ ஆய்வு செய்ததில், அதில் 200 லாக்கர்கள் ரெட்டி சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகள் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.
இதில் ஜனார்த்தன ரெட்டிக்கு10 லாக்கர்கள் உள்ளன. அதில் தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்டவற்றை போட்டு அடைத்து வைத்துள்ளார். பல முக்கிய ஆவணங்களும் அதில் உள்ளன.
சமீபத்தில் ஜனார்த்தன ரெட்டியின் மச்சான் ஸ்ரீனிவாச ரெட்டியின் லாக்கர்கள் சிலவற்றை சிபிஐ அதிகாரிகள் திறந்து பார்த்தபோது 14 கிலோ தங்க நகைகள் சிக்கியது நினைவிருக்கலாம்.
இந்த ஒரு வங்கியிலேயே இத்தனை லாக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், மேலும் பல வங்கிகளில் இவர்கள் லாக்கர்கள் வைத்துள்ளனரா என்பதை அறிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளது சிபிஐ.
இது தவிர, ஜனார்த்தன ரெட்டியின் நிறுவனங்கள் கம்போடியா, துபாய், சிங்கப்பூர், வியட்நாம், சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டிருப்பதை சிபிஐயும், வருமான வரித்துறையும் கண்டுபிடித்து அவை குறித்து விசாரணையில் இறங்கியுள்ளன.

ஜனார்த்தன ரெட்டியும், மச்சான் ஸ்ரீனிவாச ரெட்டியும் செப்டம்பர் 5ம் தேதி கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: