சனி, 24 செப்டம்பர், 2011

திருப்பூர் மினி முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவுன் நகை, பணம் கொள்ளை


திருப்பூர்: பிரபல அடகு நிறுவனமான மினி முத்தூட் நிதி நிறுவனத்தின் திருப்பூர் கிளையில் 3489 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பேரதிர்ச்சி அடைந்து முத்தூட் நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தால் திருப்பூரே பரபரப்பாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரோட்டில் செயிண்ட் ஜோசப் கல்லூரி எதிரில் இந்த நிறுவனத்தின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அடமான நகைகளுக்கு பணம் வருவது வழக்கம். அந்த வகையில் 3,489 சவரன் நகைகள் மக்களிடம் இருந்து பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு வழக்கம் போல நிறுவன பணியாளர்களான மேலாளர் மதிவாணன் மற்றும் ஊழியர்கள் சிலர் வந்தனர். அப்போது நிறுவனத்திற்கு வந்த பத்து பேர் கொண்ட கும்பல், அவர்களைத் தாக்கி கைகளைக் கட்டி, வாயில் துணியை வைத்து அடைத்தது. பின்னர் அலுவலகத்திற்கு வந்த பிற ஊழியர்களையும் கட்டிப் போட்டனர். பின்னர் கத்தி முனையில், நிறுவனத்தின் லாக்கர் சாவியை வைத்திருந்த பெண் ஊழியர் பிரீத்தியை மிரட்டி, சாவியை வாங்கினர். கட்டப்பட்ட பணியாளர்களை நிறுவனத்தின் ஒரு அறையில் அடித்து அடைத்து விட்டு கொள்ளையை துவங்கினர்.

நிறுவன லாக்கருக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 3,489 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையிட்டனர். அதன்பின் தடயங்களை மறைப்பதற்காக அங்கு முழுவதும் மிளகாய் தூளை தூவி விட்டு தப்பியோடினர். போகும்போது நிறுவனத்தை வெளிப்பக்கமாக பூட்டி விட்டுப் போயினர் கொள்ளையர்கள்.

பின்னர் வந்த வாடிக்கையாளர்கள் நிறுவனம் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து திறந்து உள்ளே சென்றனர். அப்போதுதான் நடந்த சம்பவம் குறித்துத் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் போட்ட அலறலில் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். நகைகளை அடகு வைத்து மக்களும் அலறி அடித்து வந்தனர். அத்தனை பேரும் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். வாய் விட்டு பலர் அலறியபடி புலம்பினர்.

தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார். கைரேகை நிபுணர்கள் பதிவான கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். வழக்கு பதிந்த போலீசார் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

மிகமிக துணிகரமாக நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் திருப்பூர் நகரி்ல் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: