வியாழன், 22 செப்டம்பர், 2011

விவேகத்தின் அடிப்படையிலான நிதானமான சிந்தனைகள் நிலவவேண்டிய காலம்

jaffna-19ஸ்ரீலங்காவின் சமூகத் தொடர்பு வரலாறு
   -  கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன்
இதுதான் இப்போதைய எங்களின் நிலை. எதிர்காலத்துக்கு எப்படி நாங்கள் முன்னேறப் போகிறோம்? சிங்களவர் மற்றும் தமிழர் ஆகிய இருபகுதியினராகிய எங்கள்  அணுகுமுறைகளில் ஏதாவது மாற்றம் நிகழுமா?
சுதந்திரத்துக்கு பின்னான வருடங்களில் யாழ்ப்பாணத் தமிழர்களில் ஒரு பகுதியினரின் பிரச்சினைகள் அந்நாட்களிலிருந்த அதே பகுதியினரைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளால் அனைத்து தமிழருக்குமான பிரச்சினையாகச் சித்தரித்துக் காட்டப்பட்டது. இது மகத்தான விகிதாச்சரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வரலாற்றுத் தவறு.
இதன் வெளிப்பாடுதான் வட்டுக்கோட்டைத் தீர்மானம்
 அவ்வாறு சித்தரிக்கப்பட்டதின் பயனாக ஏற்பட்ட அனுகூலங்கள்தான் அவர்களுக்கு கிடைத்த உயர்தரத்திலான பாடசாலைகள். இயற்கையாகவே அமைந்த கடின வேலை செய்யும் மனப்பாங்குள்ள அவர்களின் பெற்றோர்களின் தியாகத்தால் கல்வியில் செய்யப்பட்ட முதலீடு, யாழ்ப்பாணத்திலுள்ள அதிக சன நெருக்கம் மற்றும் வாய்ப்புகளின் பற்றாக்குறை போன்ற  நிலமைகள் காரணமாக அவர்களை பின்னுக்கு தள்ளியிருக்க வேண்டும்
பிரித்தானிய காலனித்துவ நிர்வாகத்தாரின் சந்தேக நோக்கின் காரணமாக யாழ்ப்பாணத்துக்கு வழிமாற்றி விடப்பட்ட அமெரிக்க மதப்பிரசாரகர்களினால் யாழ்ப்பாணத்துக்கு பாடசாலை முறையில் மிகத் திறமையான முன்னேற்றமடைவதற்கு வழி அமைந்தது. இந்தக் கவனக்குறைவான அனுகூலமானது சுதந்திரத்துக்கு பின்னான காலத்தில், ஆதிக்கம் செலுத்தும் பகுதியினரான யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையாக உருவானது.
யாழ்ப்பாணத்தில் உள்ள மறுபகுதித் தமிழர்கள், வன்னி மற்றும் மன்னாரிலுள்ள தமிழர்கள், மற்றும் கிழக்கிலுள்ள தமிழர்கள் போன்றவர்கள் இதேபோன்ற சூழ்நிலையையோ அல்லது அனுகூலத்தையோ அனுபவிக்கவில்லை. மலையகத் தமிழர்கள் உண்மையில் அடிமைகளைப் போலத்தான் ஏனைய ஸ்ரீலங்காத் தமிழர்களால் தரக்குறைவாகப் பார்க்கப் பட்டார்கள். பசில் ராஜபக்ஸ முத்து சிவலிங்கத்தை ‘பற தெமலா’ என இழிவு படுத்தியது முற்றாக அவர்களின் நாகரிகமற்ற தன்மையை மேற்கோள் காட்டியே. எப்படியாயினும் ஸ்ரீலங்காத் தமிழர்களாகிய நாங்கள் மலையகத் தமிழர்களை எப்படி தரக்குறைவாக பார்க்கவும் உபசரிக்கவும் செய்கிறோமோ அதுகூட  காட்டுமிராண்டித்தனமும் அவமானகரமானதுமாகும். இந்த உயர்வகுப்பு யாழ்ப்பாணத் தமிழர்கள், மற்றைய ஸ்ரீலங்காத் தமிழர்களை சாதியின் பெயரால் ஒடுக்கி வைப்பதில் மிகவும் முன்னிலை வகித்தார்கள். நல்ல கல்வி வசதியைப் பெறும் அனுகூலம் பெற்ற யாழ்ப்பாணத் தமிழர்கள் தேசிய அரசியல் விவகாரங்களில் தங்கள் எண்ணிக்கைக்கு விகிதாசாரமற்ற முறையிலும் தங்கள் செல்வாக்கினை விரிவு படுத்தியிருந்தார்கள்.
சுதந்திரத்துக்கு பின்னான உடனடிக் காலகட்டத்தில் ஸ்ரீலங்காவின் விவகாரங்களில் ஒரு பகுதி யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு அதிகளவு பாரபட்சமான ஆதரவினைப் பெறக்கூடியதாகவிருந்தது. சிங்கள அதிக்கம் மிக்க அரசாங்கங்கள் இந்த நிலையைத் திருத்தி பெரும்பான்மை சிங்கள சமூகத்துக்கு அதிகாரத்தை உறுதி செய்தன. இது இயற்கையானதாகவும் தவிர்க்க முடியாமல் நடக்கவேண்டியதாகவும் இருந்தது. தமிழர்கள் இனிமேலும் சிங்களவர்களை விடவும்  புத்திசாலிகளோ மற்றும் திறமைசாலிகளோ இல்லை. இருந்தாலும் அநேகமான தமிழர்கள் தங்களை அப்படி நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிங்களவர்களை ‘மோடையர்கள்’ எனும் ஊனமுற்றவர்களின் அடையாளத்தைச் சொல்லி அழைத்து மகிழ்ந்தார்கள்.
ஸ்ரீலங்காவின் அரசாங்கங்கள் இந்த சமநிலையற்ற தன்மையை திருத்த முயற்சித்தது எப்படி தவறானதாகவும், குறுகிய கண்ணோட்டமுள்ளதாகவும்,கொடூரமானதாகவும் மாறியது. ஏனெனில் தென்பகுதிகளிலும் இதர அனுகூலமற்ற தமிழ் பகுதிகளிலும் கல்வியில் முதலீடு செய்வதையும் மற்றும் நேர அமைப்புள்ள ஒரு உறுதியான செயல்திட்டத்தையும் கொண்டுவருவதற்குப் பதிலாக ,அரசாங்கம் சிங்களம் மட்டும் சட்டத்தின் மூலமாகவும், தகுதி அடிப்படையிலான தேர்வு நடைமுறைகளை நீக்கியது மூலமாகவும், மற்றும் கண்டிப்பாக பல்கலைக்கழக அனுமதிகளுக்கான தரப்படுத்தல் முறையினை அமல்படுத்தியது போன்றவற்றால் நிலைமையினை வலுக்கட்டாயமாக வேகமாக்கியது. சில சிங்கள அரசியல்வாதிகளினாலும் ஏனைய சமூகத் தலைவர்களாலும், தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட பாஷை  அவமானப்படுத்துவதாகவும், எரிச்சலூட்டுவதாகவும், விவேகமற்றதாகவும் இருந்தது. இந்த நடவடிக்கைகள் சிங்களவர்கள் விடயத்தை முன்னேற்றிய அதேவேளை, நாட்டை முழு அளவில் பின்னடைய வைத்தது. தங்கள் வாழ்க்கை முழுவதையும் கல்வி, தொழில், மற்றும் செழிப்பு என்கிற குறிப்பிட்ட பாதையிலேயே திட்டமிட்டுத் தொடர்ந்து வந்த இந்த ஒருபகுதி யாழ்ப்பாணத் தமிழர்கள் இதன் காரணமாக நிச்சயமாக ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
இந்த நன்மைகள் யாவற்றையும் தங்களுக்கு ஆதரவாக பெற்று வந்த மற்றும் அந்த அனுகூலங்கள் கடவுளால் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமை என கருதிவந்த இந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் தீவிரமாக(பின்னர் வன்முறைகளிலும்) செயற்படத் தொடங்கினார்கள். அவர்கள் கவனக்குறைவாகவும் விகிதாசாரமற்ற முறையிலும் தவறாக அடைந்து வந்த நன்மைகளை தக்க வைப்பதற்காக, காலம் மாறிவிட்டது என்பதை புரிந்து கொள்ளும் தன்மையற்ற அவர்களின் தலைவர்கள் என அழைக்கப்பட்டவர்களுடன் மோதிக் கொள்ளத் தலைப்பட்டார்கள். மோதல் தவிர்க்க முடியாத ஒன்றானது. கலவரம், கொலை, வன்முறை என்பன வாழ்க்கை வழியாக மாறின. குறுகிய கண்ணோட்டத்திலான நடவடிக்கைகளுக்குப் பதிலாக அதே குறுகிய கண்ணோட்டத்திலான மறு நடவடிக்கைகள், மற்றும் இருபகுதியிலும் பிற்பாட்டுப் பாடும் தீவிரவாதிகளின் நடவடிக்ககைகள் போன்றவை ஒரு உள்நாட்டு யுத்தத்துக்கும் அதன் பயனாக உண்டான பின் விளைவுகளுக்கும் காரணமாயின. அனுகூலம் பெற்று வந்த பகுதியினரான யாழ்ப்பாணத் தமிழர்கள், தமிழர்களின் பிரதிபலிப்பைக் காட்டுவதில் முன்னணியிலிருந்ததுடன், அதன் விளைவுகளை ஏனைய ஸ்ரீலங்காத் தமிழர்களும் வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்பினார்கள். ஸ்ரீலங்காவிலிருந்த அரசாங்கங்கள் அதிகரித்து வளர்ந்து வரும் பிரச்சினைகளை அரும்பிலேயே கிள்ளி எறிவதற்கான பகுத்தறிவுடனும் தொலை நோக்குடனும் செயற்படத் தவறி விட்டன. இதனால் அரசாங்கங்கள் வளர்ந்து வரும் பிரச்சினைகளின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன.
இப்போது சமநிலையானது பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு சாதகமாகவே திருத்தியமைக்கப் பட்டுள்ளது. எப்படியோ அலையானது அனைத்து ஸ்ரீலங்காத் தமிழர்களுக்கும் எதிராகவே  மாறி வீசுகிறது. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள சகல தமிழ் மக்களும் இப்போது அனுகூலமற்றவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு சாதகமாக உறுதியான நடவடிக்கைகள் தேவை. மலையகத் தமிழர்கள் முன்னேற்றம் பெற்றதுக்கு சௌமியமூர்த்தி தொண்டமானின் அரசியல் விவேகத்துக்கும், கண்ணோட்டத்துக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
இதுதான் இப்போதைய எங்களின் நிலை. எதிர்காலத்துக்கு எப்படி நாங்கள் முன்னேறப் போகிறோம்? சிங்களவர் மற்றும் தமிழர் ஆகிய இருபகுதியினராகிய எங்கள்  அணுகுமுறைகளில் ஏதாவது மாற்றம் நிகழுமா?
விவேகத்தின் அடிப்படையிலான நிதானமான சிந்தனைகள் நிலவவேண்டிய காலம் வந்துள்ளது.
தமிழில்: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை: