திங்கள், 22 ஆகஸ்ட், 2011

மட்டு., திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் இராணுவத்தினர் சோதனை

Checkpointமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை, ஆரையம்பதி, ஏறாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர், குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர். இந்த சோதனை நடவடிக்கைகள் காரணமாக மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களில் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மாவட்டத்தின் பல இடங்களில் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் சோதனை செய்யப்படுவதுடன் அவர்கள் பற்றிய விடயங்கள் இராணுவத்தினாரால் பதியப்படுகின்றது.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போது பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ அதிகரிகளுடன் தொடர்பு கொண்டு மக்களிடம் காணப்பட்ட அச்ச நிலை குறித்து விளக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
இது சுற்றிவளைப்போ தேடுதலோ அல்ல. வீடுகளில் தங்கியிருப்போரின் விபரங்களை மட்டுமே திரட்டப்படுகின்றது. இது பற்றி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தனக்கு பதில் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தின் பல இடங்களில் இராணுவத்தினரின் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை நகரின் சில இடங்கில் பொலிஸாரின் உதவியுடன் இராணுவத்தினர் வீடுகளுக்கு சென்று குடும்ப உறுப்பினர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்யகின்றனர்.கடந்த காலங்களில் மர்ம மனிதன் என்ற பீதியில் மக்கள் உறைந்துள்ள நிலையில் இத்தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் பொலிஸ், இராணுவ சோதனைகள் அதிகரிப்பு
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் பொலிசாரால் புதிதாக வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, இராணுவ உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மர்ம மனிதர்கள் என்று கூறப்படும் அடையாளம் தெரியாத ஆட்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் ஒருவித பீதி காணப்படும் சூழ்நிலையில், பாதுகாப்பு தரப்பினரால் இவ்வகையான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தொடர்புடைய விடயங்கள்வன்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் சில கிராமங்களில் பொலிசாரும் இராணுவத்தினரும் வீடு வீடாகச் சென்று தங்கியிருப்போர் விபரங்களைத் திரட்டியுள்ளனர்.
சில இடங்களில் பொலிசாரும் இராணுவத்தினரும் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டதால், அவ்விடங்களில் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் தெரிந்தது.
கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலுள்ள முனைக்காடு மற்றும் முதலைக்குடாஆகிய கிராமங்களிலுள்ள வீடுகளிலும் தங்கியிருப்பவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டதாக அப்பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
நீண்ட நாட்களின் பின்னர் தமது பிரதேசத்தில் இராணுவ நடமாட்டத்தை வீதிகளில் பரவலாக காண முடிந்தது என அப்பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.
தொடரும் வன்முறை "நீண்ட நாட்களின் பின்னர் தமது பிரதேசத்தில் தற்போது மீண்டும் இராணுவ நடமாட்டத்தை பரவலாகக் காண முடிந்தது."
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நாளாந்தம் நடந்துவருகின்ற மர்ம மனிதர்கள் என்று கூறப்படும் நபர்களின் வன்முறைகள் தொடருகின்றன.
சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு எதிராக நடந்த நான்கு வன்முறைகளில், மூன்று பெண்கள் கீறல் காயங்கிளுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பகல் வேலைகளிலும், ஆள்நடமாட்டம் உள்ள இடங்களிலும் இவ்விதமான தாக்குதல்கள் நடந்துள்ளதால் இரவில் மட்டுமல்லாது பகலிலும்கூட பெண்கள் கலக்கம் அடைந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை: