சனி, 27 ஆகஸ்ட், 2011

பாரதிராஜா:நடிகர், நடிகைகள், வக்கீல்கள், மாணவர்களைத் திரட்டி போராட்டம்

சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கில் போடுவதைக் கண்டித்து திரையுலகினரை திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

மூன்று பேரையும் தூக்கிலிட இன்று தேதி குறித்துள்ளது வேலூர் சிறை நிர்வாகம்.இதையடுத்து இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் சங்க அவசரக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்குப் பின்னர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டிருப்பது பெரும் வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது. இதை எதிர்த்து திரையுலகம் சார்பில் பெரும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், வக்கீல்கள், மாணவர்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம்.

முதல்வர் ஜெயலலிதா உடனடியாக தலையிட்டு மூன்று பேரையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதுதொடர்பாக அவருக்கு கடிதம் எழுதவுள்ளோம். மேலும் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.

இதைச் செய்யும் தகுதியும், அதிகாரமும் அவருக்கு உள்ளது. எனவே அவர் தலையிட்டு மூன்று பேரையும் காப்பாற்ற வேண்டும்.

மீடியா உலகம் இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தரவேண்டும். வெறும் விளம்பரத்துக்காக நடக்கும் லோக்பால் உண்ணா விரதத்தை ஒரே மாதத்தில் உலகளாவிய பிரச்சினையாக மாற்றிவிட்ட மீடியா, உயிர் போகிற இந்த அத்யாவசிய, அவசரப் பிரச்சினைக்காக ஆதரவு காட்ட வேண்டும், என்றார் பாரதிராஜா.

கருத்துகள் இல்லை: