சனி, 27 ஆகஸ்ட், 2011

தி.மு.க., பணிகளை முடக்க முடியாது : ஸ்டாலின் சொல்கிறார்

திருச்சி: ""என்னதான் முடக்கினாலும், தி.மு.க.,வின் பணிகளை முடக்க முடியாது'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க., பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஸ்டாலின் நேற்று, திருச்சி மத்திய சிறைக்கு சென்றார். அங்கு எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.கோபி, கலைஞர் அறிவாலய கட்டிட நில அபகரிப்பு வழக்கில் கைதான, குடமுருட்டி சேகர், ஷெரீப், மாமுண்டி ஆகிய ஐந்து பேரையும் பார்த்து பேசினார்.

சிறைவளாகத்தில், நிருபர்களிடம், ஸ்டாலின் கூறியதாவது: தி.மு.க.,வினர் தொடர்ந்து பொய் வழக்குகளில் கைது செய்யப்படுகின்றனர். அவற்றை சட்டப்படி நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம். கருணாநிதி சொன்னது போல, அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார். தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான நேரு உள்ளிட்ட, சில கட்சியினர் மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் கைது செய்து, நீதிபதி முன் நிறுத்தியுள்ளனர். ஆளுங்கட்சியான, அ.தி.மு.க.,வினர் மீது, உண்மையான குற்றச்சாட்டுகளுடன் வரும் புகார்கள் மீது, நடவடிக்கை எடுப்பதில்லை. புகாரே இல்லாமல், தி.மு.க.,வினர் கைது செய்யப்படுகின்றனர். அதன்பின் அவர்கள் மீது மிரட்டி, அச்சுறுத்தி புகார்கள் வாங்கப்படுகின்றன. என்னதான் முடக்கினாலும், தி.மு.க.,வின் பணிகளை முடக்க முடியாது. ஒரு நேரு, வீரபாண்டி ஆறுமுகம், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தால், ஆயிரம் நேரு, வீரபாண்டி ஆறுமுகம், அனிதா ராதாகிருஷ்ணன் உருவாகி, சீரிய கட்சிப்பணியாற்றுவர். திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது, ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் என்பது வடிகட்டிய பொய். புகார் கொடுத்தவர் கலைஞர் அறிவாலய திறப்பு விழாவின் போது, கருணாநிதியால் சால்வை போர்த்தி, கணையாழி (மோதிரம்) வழங்கி சிறப்பு செய்யப்பட்டார். அவருடைய மகன் திருமணமும் கலைஞர் அறிவாலயத்தில் தான் நடந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்லியே தீர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: