வியாழன், 25 ஆகஸ்ட், 2011

அழகிரி: இந்தம்மா மீது கேஸ் நடந்துட்டு இருக்கு; கூடிய சீக்கிரம் முதல்வர் பதவியில் இருக்க மாட்டார்,'

திருச்சி: ""வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்; பேட்டி எதற்கு?'' என, திருச்சி மத்திய சிறையில், மத்திய அமைச்சர் அழகிரி, விரக்தியில் கூறினார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, எஸ்.ஆர்.கோபி, தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், "அட்டாக்' பாண்டி ஆகியோரை பார்க்க, நேற்று மதியம் 1.15 மணிக்கு, திருச்சி மத்திய சிறைக்கு, மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அழகிரி வந்தார். சிறைக்கு சென்று கைதிகளை பார்க்க, மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், மத்திய அமைச்சர் அழகிரியுடன், மத்திய இணையமைச்சர் நெப்போலியன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி ஆகியோர் மட்டுமே, உள்ளே சென்றனர். அட்டாக் பாண்டி, குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளதால், அவரை பார்க்க அனுமதி வழங்காமல், எஸ்.ஆர்.கோபி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரை பார்க்க மட்டுமே, சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்தது. சிறைக்குள் சென்ற மூர்த்தி, சிறிது நேரத்தில் வெளியே வர, அதுவரை வெளியே நின்றிருந்த முன்னாள் அமைச்சர் நேரு, சிறை உள்ளே சென்று அழகிரியுடன் சேர்ந்து கொண்டார். அரை மணி நேர சந்திப்புக்கு பின், 1.45 மணிக்கு அழகிரியும், மற்றவர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.
வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரியிடம், நிருபர்கள் பேட்டி கேட்க, ""வேட்டியே வேணாம்னுட்டேன்; பேட்டி எதற்கு?'' எனக் கூறி, மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.

தி.மு.க.,வினர் குழப்பம் : சிறையிலிருந்து வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரிக்கு, சில முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், சால்வை, தி.மு.க, கட்சிக்கரை போட்ட, துண்டு, வேஷ்டி ஆகியவை கொடுக்க முயன்றனர். அவற்றை வாங்க அழகிரி மறுத்து விட்டார். அதன்பின்னரே, இந்த வார்த்தையை அவர் கூறினார்.
ஆகையால், மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் இந்த கருத்தை மத்திய அமைச்சர் அழகிரி கூறினாரா அல்லது வேறு எதையும் மனதில் வைத்துக் கொண்டு, "பொடி' வைத்து பேசினாரா என, தி.மு.க.,வினர் குழம்பிப் போயினர்.

அழகிரிக்கு தைரியம் ஊட்டிய தி.மு.க.,வினர் : மதுரை மத்திய சிறையில் தி.மு.க.,வினரை நேற்று சந்தித்த மத்திய அமைச்சர் அழகிரி, வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடரப் போவதாக ஆறுதல் தெரிவித்தார்.
நேற்று மாலை 3.35 மணிக்கு கட்சிக் கொடி கட்டிய காரில் அழகிரியும், மத்திய அமைச்சர் நெப்போலியனும் சிறைக்கு வந்தனர். இவர்களுடன் முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி மற்றும் வழக்கறிஞர்கள் மோகன்குமார், லிங்கத்துரை சென்றனர். ஜெயிலர் அறையில் அவைத் தலைவர் இசக்கிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடி, குடும்ப டாக்டர் நவநீதகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் மலைச்சாமி, எஸ்ஸார் கோபியின் சகோதரர் ஈஸ்வரன், திண்டுக்கல் வேட்பாளராக போட்டியிட்ட விஜயன் ஆகியோரை சந்தித்தார்.

அப்போது அழகிரி, ""சிறைகளில் கட்சிக்காரங்களை தீவிரவாதிகளாக நடத்துறாங்க. உள்ளே வைத்த போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப் போகிறேன். அவர்களும் "உள்ளே' வருவாங்க. இந்தம்மா(ஜெயலலிதா) மீது கேஸ் நடந்துட்டு இருக்கு; கூடிய சீக்கிரம் முதல்வர் பதவியில் இருக்க மாட்டார்,'' என்ற அவரிடம், "அண்ணே, கட்சி வேட்டி கட்டக்கூடாதுனு சொல்றாங்கண்ணே' என்று ஈஸ்வரன் கூற, அங்கிருந்த ஜெயிலர் தமிழ்ச்செல்வன் மறுத்தார்.
பின், 3.55 மணிக்கு வெளியே வந்த அழகிரி, நிருபர்களிடம், ""உள்ளே இருந்தவர்களை சந்தித்தபோது, "எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பொய்யானது; அதை தைரியமாக சந்திப்போம்' என்று எனக்கு தைரியம் ஊட்டினர். வழக்கு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.

அழகிரி "டென்ஷன்' : கொடைக்கானல் நகராட்சித் தலைவர் முகமது இப்ராகிமை சந்திக்க கடந்த மாதம் மதுரை சிறைக்கு அழகிரி வந்தபோது, அவரது கார் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் நேற்று, "மத்திய அமைச்சராக அவர் வராததால், "ப்ரோட்டோகால்' படி அனுமதிக்க முடியாது' என்று அதிகாரிகள் கூறினர்.
இதனால், கேட்டிற்கு வெளியே காரில் 5 நிமிடம் காத்திருந்த அழகிரியும், நெப்போலியனும் நடந்தே உள்ளே சென்றனர். அப்போது தி.மு.க.,வினர், காவலர்களுக்கு எதிராக கோஷமிட, "இவ்வளவு பேரு வந்தா எப்படி உள்ளே விடுவாங்க?' என அழகிரி, "டென்ஷன்' ஆனார்.

கருத்துகள் இல்லை: