புதன், 24 ஆகஸ்ட், 2011

பிரதமர், ப.சிதம்பரம், கபில் சிபலை சாட்சிகளாக அழைத்து விசாரிக்க

2ஜி ஏலத்தில் எந்தவித நஷ்டமும் அரசுக்கு ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலை சாட்சிகளாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று சிறப்பு சிபிஐ கோர்ட்டுக்கு வந்தது. அப்போது ராசா வாதிடுகையில், 2ஜி ஏல நடைமுறையால் நாட்டுக்கும், அரசுக்கும் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை. இதை நிரூபிக்க பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலை இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்க வேண்டும்.

அவர்களை கோர்ட்டுக்கு அழைத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படவில்லை என்பதை நி்ரூபிக்க முடியும் என்றார் ராசா.

2ஜி ஏல நடைமுறையில் பிரதமருக்குத் தெரியாமல் எதுவும் நடைபெறவில்லை என்று ஆரம்பம் முதலே ராசா கூறி வருவது நினைவிருக்கலாம். இந்த நிலையில் பிரதமரை சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: