புதன், 24 ஆகஸ்ட், 2011

புதுதில்லி மாகாநாடு ஆரம்பம் இலங்கைத்தமிழ் கட்சியினர் பங்குபற்றும்

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கான ஈழத் தமிழர் மகாநாடு புதுதில்லியில் உள்ள இந்திய அரசியல் அமைப்பு அரங்கத்தில் (23-08-2011) செவ்வாய் காலை 12:30 மணியளவில் ஆரம்பமானது. இந்திய பாராளுமன்ற உறுப்பினர் திரு. நு.ஆ. சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் தலைமையில் ஆரம்பமானது.

இந்த மகாநாட்டில் கலந்துகொண்டவர்களை பெங்களுருவில் இருந்து வந்திருந்த “இந்திராகாந்தி சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த மாணவிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மகாநாட்டின் தொடக்கமாக ஈழத்தில் விடுதலைப் போரினால் மரணமடைந்த பொதுமக்களுக்கும், வீரர்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் ஈழம் “நாட்டுப் பண்” பெங்களுரு, இந்திராகாந்தி சர்வதேச பாடசாலை மாணவிகள் பாடினார்கள். அதன் பிறகு மாணவிகள் மகாநாட்டில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றதுடன், இந்த மகாநாட்டின் மூலமாக தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.
மகாநாட்டிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் மகாநாட்டு ஏற்பாட்டாளர் திரு. நு.ஆ. சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் வரவேற்றதுடன், வருகை தந்திருந்த இலங்கை தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களை திரு. நாகராஜா அவர்கள் திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இலங்கைத் தமிழரசு கட்சியின் சார்பாக திரு. மாவை சேனாதிராசா எம்.பி. அவர்கள் மற்றும் திரு. சுமத்திரன் எம்.பி. அவர்களும் கலந்து கொண்டனர்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE) சார்பாக உபதலைவர் திரு. கந்தையா சிவநேசன் அவர்களும் திரு. பெனடிக் தனபாலசிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திரு. செல்வராசா கஜேந்திரன் அவர்களும் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கலந்து கொண்டனர்.
தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) சார்பாக அதன் தலைவர் திரு. அடைக்கலநாதன் (செல்வம்) அவர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி(TULF) சார்பாக அதன் தலைவர் திரு. ஆனந்தசங்கரி அவர்களும் கலந்து கொண்டனர்.
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.(EPRLF-NAPA) கட்சியின் சார்பாக அதன் தலைவர் இரா. துரைரெத்தினம் அவர்களும் செயலாளர் திரு. சிறீதரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப். (பிரேமச்சந்திரன்) கட்சி சார்பாக அதன் செயலாளர் திரு. பிரேமச்சந்திரன் அவர்களும், திரு. சிவசக்தி அவர்களும் கலந்து கொண்டனர்.
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி(ENDLF) சார்பாக அதன் தலைவர் திரு. ஞா.ஞானசேகரன் அவர்களும், திரு. ரவீந்திரன் அவர்களும் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவமாகக் கொண்ட எட்டு தமிழ் கட்சிகள் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டன.
இந்த மகாநாட்டின் ஏற்பாட்டாளர் திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் அறிமுக உரையில், இந்தியா முழுவதும் பிரச்சினைகள் இருந்தாலும், அண்டை நாடான இலங்கையில் வாழும் தமிழர்களின் பிரச்சினையை அனைத்துக் கட்சிகளின் சார்பாக புதிய நோக்கத்துடன் பார்க்கவேண்டும் என்று “பார்ளிமென்ற் போரம்” என்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை தொடங்கியுள்ளோம்.
எனவே, இங்கு வருகை தந்திருக்கும் இலங்கையில் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாக இணைந்து தமிழர் பிரச்சினைகளைப் பற்றி பேசி இதுதான் தமிழர்களது பிரச்சினை என்ற ஒரே முடிவை நீங்கள் எங்கள் பாராளுமன்ற குழுவிற்கு தெரிவிக்க வேண்டும். அதை எங்கள் அனைத்துக் கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் கொண்டு சென்று இதை இந்தியா நடைமுறை படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நல்ல முறையில் வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு கோரிக்கையை வைக்கின்றார்கள். ஆனால், துன்பப்பட்டு, துயரப்பட்டு, பாதிக்கப்பட்டு, அல்லல்பட்டுக்கொண்டு தாய்மண்ணே கதி என்று கிடக்கும் இலங்கையில் வாழும் முப்பது இலட்சம் தமிழ் மக்களுக்கு என்ன தேவை அவர்களுக்கு என்ன தீர்வு அவர்களது பிரச்சினை தொடர்பாக அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நீங்களாகவே பேசுங்கள் ஒரு நல்ல முடிவை எடுங்கள்.
நாங்கள் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை, யாரும் எங்களுக்கு வழிகாட்டவில்லை, உங்கள் மக்களது பிரச்சினை நீங்கள்தான் பேசவேண்டும். ஒருமனதாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். அதை நாங்கள் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பாராளுமன்றத்தில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் கொண்டு வருவோம். அதை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் இணைந்து இந்திய அரசை நடவடிக்கை எடுக்கவைப்போம் என்றார்.
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில் எந்த தனிக்கட்சியையும் சாராத பல குழுக்கள் இருக்கின்றன. ஒரு தடவை, மியான்மர் சம்பந்தமாக ஒரு கூட்டம் நடத்தினோம். அதில் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு தீர்மானம் எடுத்தோம். அதை பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்றோம். அந்தத் தீர்மானத்தை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம்.
அதுபோல் பாகிஸ்தான், நேபாளம் சார்பாக பேசுவதற்கு பாராளுமன்ற குழுக்கள் உள்ளன. அதன் மூலம் ஒரு கொள்கையை ஒரு முடிவாக வகுக்க முடிகிறது. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் இந்திய பாராளுமன்றத்தில் வலுவான குழு இல்லை. அதனால்தான் நாங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக முதன் முறையாக “பார்ளிமென்ற் போரம்” என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.
இதன் மூலம் இந்தியாவின் அனைத்துக் கட்சிகளின் பா.உறுப்பினர்களும் இணைந்து ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை, இந்த மகாநாட்டின் தீர்மானமான ஒரே முடிவின் மூலம், ஈழத் தமிழர்களுக்கு இதுதான் தேவை என்பதை ஒரே குரலில், எந்த வித எதிர்ப்பும் இல்லாமல், அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு, இந்திய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, இந்திய அரசு உடனடியாக, ஈழத்தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க, வலுவாக அடித்தளம் அமைப்போம் என்று தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன் என்றார்;.
பின்னர் மகாநாட்டு உறப்பினர்களின் மதிய உணவிற்குப் பிறகு மகாநாடு திரு. நாகராஜா அவர்களின் தலைமையில் தொடர்ந்து கலந்துரையாடல் நடந்துகொண்டிருக்கிறது…

கருத்துகள் இல்லை: