ஞாயிறு, 7 நவம்பர், 2010

President:பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஒரு சட்டமே நடைமுறையில் உள்ளது

- தங்காலையில் ஜனாதிபதி
சட்டம் சகலருக்கும் சமமானது அரசியல் மற்றும் குறுகிய நோக்கங்களுக்காக சட்டத்தைக் கையிலெடுக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீதிமன்றத் தீர்ப்புக்குச் சகலரும் தலைவணங்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டில் சகலருக்கும் பொதுவான ஒரே சட்டமே உள்ளது. பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை அதுவே நடைமுறை யிலுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தங்கல்லையில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,சட்டம் சகலருக்கும் பொதுவானது. நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குச் சகலரும் தலைவணங்க வேண்டும். எனது மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நான் மதிப்பளித்தேன். அதற்குத் தலைவணங்கினேன். அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்யவில்லை.
எமது நாடு சுதந்திரமடைந்து கெளரவமான சமாதானம் உருவாகியுள்ளது. சுதந்திரமும் சமாதானமும் கிடைத்துள்ளதால் நாம் திருப்திப்பட முடியாது. நீதியும் நியாயமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நீதிமன்றங்கள் வணக்கஸ்தலங்கள் போன்றவை மக்கள் நம்பிக்கைமிக்கதாக அவை அமைய வேண்டும். நீதி நியாயத்திற்கான உந்துசக்தியாக நீதிமன்றங்கள் மக்களுக்கான சேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்வதே எம் அனைவரினதும் பொறுப்பாக வேண்டும். நீதிமன்றங்களில் வழக்குகள் அளவுக்கதிகமாக தாமதமாகியுள்ளன. பல வழக்குகள் 25 வருடங்களுக்கு மேல் நீள்கின்றன. இதில் ஜோர்ஜ் ராஜபக்ஷவின் தங்கையின் வழக்கும் 25 வருடங்கள் பழமை வாய்ந்ததாகியது.
இத்தகைய நிலை மேலும் நீடிக்க இடமளிக்க முடியாது. இதனால் நாடளாவிய ரீதியில் 74 மேன் முறையீட்டு நீதிமன்றங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான இணக்கப்பாடும் நீதியரசர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
நீதியை நிலைநாட்டுவதற்கு சகலரும் முன்வர வேண்டும். நீதிமன்றங்கள் நீதி நியாயத்தை நிலைநாட்டும் மக்கள் சேவையை முழுமையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்.
கடந்த காலங்களில் வவுனியாவிற்கு அப்பால் நீதிமன்றங்கள் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் மட்டுமே எமது நீதிமன்றம் இருந்தது. வவுனியாவிற்கு அப்பாலுள்ள பிரதேசங்களில் நீதிமன்றங்களும் சட்ட நிறுவனங்களும் புலிகளின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இயங்கின.
தற்போது பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஒரே நீதி ஒரே சட்டம் என நடைமுறையிலுள்ளது. அதற்கேதுவாக நாடு உருவாக்கப்பட்டு விட்டது. அரசியல் தேவைகளுக்காக எவரும் சட்டத்தில் கைவைக்க முடியாது. சட்டத்தை எவரும் கையிலெடுக்கவும் இடமளிக்க முடியாது. சகல மக்களுக்கும் சட்டம் பொதுவானது. சுயாதீனத்தில் கைவைப்பதற்கான உரிமை எவருக்கும் கிடையாது. சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று எமது நீதிமன்ற சுயாதீனம் தொடர்பாக பேசுகின்றனர். நானும் நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணி அதே நேரம் ஒரு வழக்காளியாக இருந்தவன். எனினும் நான் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தலை வணங்கினேன். மூன்று தடவை சிறையிலிருந்த அனுபவமும் எனக்குண்டு. எனது மனித உரிமை மீறல் தொடர்பாக நான் ஜெனீவாவுக்குச் சென்றேன். எனது ஆவணங்கள் அபகரிக்கப்பட்ட நிலையில் என்னுடன் வந்த பொலிஸ் அதிகாரி எனது நிலைப்பாட்டை அங்கு தெளிவுபடுத்தினார்.
எவ்வாறெனினும் நீதிமன்றமானது எனக்கு எவ்வித மனித உரிமை மீறலும் இடம்பெறவில்லையென தீர்ப்பளித்தது. அதற்கு நான் தலை வணங்கினேன். நான் மட்டுமல்ல நீதிமன்றத் தீர்ப்பிற்குத் தலைவணங்க நாம் அனைவரும் கட்டுப்பட்டுள்ளோம்.
நீதிமன்றத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது. தங்கல்ல தற்போது அபிவிருத்தியில் வளர்ச்சி காணும் ஒரு பிரதேசமாகும் இத்தருணத்தில் இங்கு நீதிமன்றம் அமைவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இப்பிரதேசத்தில் மட்டுமன்றி நாட்டின் எப்பிரதேசத்திலும் மக்கள் தேவையை நிறைவேற்ற நாம் எந்நேரத்திலும் தயாராகவுள்ளோம்.
மக்கள் நம்பிக்கைக்குரியதாக நீதிமன்றங்கள் மாற்றப்பட வேண்டும். அவை, மக்களுக்கு பிரச்சினைகளிலிருந்து நிவாரணமளிப்ப தாகவும் தமைய வேண்டும். அதற்கான சகல வேலைத்திட்டங்களையும் நாம் முன்னெடுத்து வருகிறோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நேற்றைய இந்நிகழ்வில் அமைச்சர் அதாவுத செனவிரத்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
-Thinakaran -

கருத்துகள் இல்லை: