திங்கள், 8 நவம்பர், 2010

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

என் இனிய தாய் நிலமே!

(இது ஒரு கதை, கட்டுரை, காரியம்)
(சாகரன்)
ஏயர் லங்கா விமானம் தனது வழமையான இரைச்சலுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் என்று பிடிச்சு போடுவாங்கள் என்பதை விட துரோகியாக்கப்பட்டவர்களின் துப்பாக்கிகளுக்கே அதிகம் பயந்து நாட்டைவிட்டு வெளியேறிய என் தம்பி அன்பு தனது மனைவி குழந்தைகள் சகிதம் தனது தந்தையர் பூமியை தரிசிக்க வந்து இறங்கியிருக்கின்றான்.
ஏயர்போர்ட்டிலில் வெளிநாட்டிலிருந்து போகின்றவர்களை கைது செய்கின்றார்கள், திருப்பி அனுப்புகின்றார்கள் என்ற வெளிநாட்டு தமிழ் ஊடகங்களின் பரப்பல்கள் பொய்யாக இருப்பதை உணர்கின்றான். மற்றய விமான நிலையங்களில் நடைபெறும் வழமையான பாதுகாப்பு, குடிவரவு, சுங்க சோதனைகள் மட்டும் நடைபெறுகின்றன. திரும்பும் திசையெல்லாம் எயர்போர்ட்டில் சற்றே வெளிறிய நிறத்தில் எம்மவர்....
இவர்களும் தாய் நிலத்தை தரிசிக்கத்தான் போலும். ஆங்கில மொழியும், தமிழ் மொழியும் இவற்றின் பின்னே சிங்கள் மொழியென உத்தியோகத்தர்களின் உபசரிப்புகள். ஆனாலும் ஒரு அந்நியத் தன்மையை உணர்கின்றான் என் தம்பி. பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த பழக்கதோஷமோ? அல்லது உண்மையில் நம்மை அவர்கள் அந்நியராக பார்க்கின்றரோ...?அணுகுகின்றனரே அல்லது நாம் அந்நியர் என்ற உணரும் உணர்வலைகளோ? புரியவில்லை.
ஆனால் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லை. மற்றயபடி இன்முக வரவேற்பு
தம்பியை அழைத்துச் செல்ல அக்கா வாகனத்தோடு வந்திருந்தா. அக்காவிற்கு வயதாகி விட்டதோ என்று ஆண்டுகள் பல ஓடிவிட்டதை மறந்தவனாக மனத்திற்க அசை போட்டுக் கொண்டான் தம்பி.
'என்ன பயணங்கள் எல்லாம் எப்படி?'
'ம் பரவாய் இல்லை.'
'அத்தான் வரவில்லையோ?'
'நல்லா கறுத்துப் போனாய்'
'அப்படியா?'
டாலருக்கு ஓடி வாழ்வை தொலைத்த நம்மவர்களின் சோகங்களை அக்காவிற்கு சொல்ல விரும்பவில்லை. சொன்னாலும் புரியாது... என மனதுக்குள் மென்ற விழுங்கினான் தம்பி.
வாகனத்திற்குள் எல்லோரும் அமர்ந்து கொண்டனர் வழியில் துப்பாக்கிகள் நின்றன. மறிக்கவில்லை.
ஒரு இடத்தில் மட்டும் மறித்தனர் ட்ரைவர் எதோ சிங்களத்தில் சொல்ல போக அனுமதித்தனர்;. ட்ரைவர் என் தம்பியைப் பார்த்து ஒரு பெருமித சிரிப்பு... 'சமாளிச்சு சாதித்து விட்டேன்' என்பதைப் போல்.
கொழும்பு பழைய மாதிரியே கட்டடங்கள், வாகன நெருச்சல், சனநெருச்சல், வெக்கை என அதே தலை நகர். ஆனால் மறிப்பு, சோதனை என்று எந்த கெடு பிடியும் இல்லாமல் இருந்தது. சில தினங்கள் அக்காவோடு தங்கி விட்டு தான் பிறந்து வளர்ந்த யாழ் பூமியை நோக்கி தரை வழிப்பயணத்திற்கு ஆயத்தமானான்.
ஓமந்தை வரை எந்த மறிப்பும், சோதனையும் இல்லை.
ஓமந்தையில் ஒரு மறிப்பு. ஆனால் சோதனையில்லை. பயண பத்திரங்களை சரி பார்த்துக் கொண்டனர் பாதுகாப்பு படையினர். பிரபாகரன் - ரணில் 'சமாதான' ஒப்பந்த காலத்திலிருந்த பாதுகாப்பு படையினரின் சோதனைக்கு பிறகு புலிகளின் சோதனை, பண அறவிடுதல், கேள்விகள் ஏதும் இருக்கவில்லை என்பது எதிர்பார்கப்பட்டதுதான்.
ஓமந்தை தொடக்கம் பளை வரை போர் நடந்த பூமியாக காட்சியளித்தது. கட்டடங்கள் பெரும்பாலும் இடிந்த நிலையில். ஆனால் சில புதுக் கட்டங்கள் முளைக்க தொடங்கியருந்தன. அவற்றில் சிலவற்றிற்கு அருகில் அமைதியாக புத்த பெருமான்.......?
பளையிலிருந்து யாழ் குடா நாட்டை நோக்கி நகருகையில் யாழ்பாணத்தின் உள்பகுதிகளின் போர் நடைபெற்றதற்கான தடையங்கள் குறைவாக காணப்பட்டன. வீதியின் மருகுகளில் நன்றே வண்ணம் பூசப்பட்ட சிறிய கோவில்கள்.
யாழ் மக்கள் புலிகளால் இரண்டாவது முறை சாய்த்து செல்ல முடியாமல் போனதன் அறுவடைகள் இதுவோ என்று வெளிநாட்டில் தங்கியிருந்து போது சில இணையத்தளங்களில் வெளிவந்த பக்க சார்ப்பற்ற செய்திகளை உண்மையாக்கியது என் தம்பி கண்ட காட்சிகள்.
இலங்கையின் வடகோடிக் கடற்கரையில் அமைந்த தனது கிராமத்தை அடைந்தாகிவிட்டது.
கிராமம் பிரதான வீதிகளுக்கு அண்மையிலிருந்த வீடுகள் சிலவற்றைத் தவிர ஏனைய கிராமத்தின் பகுதிகள் போர் நடந்த சுவட்டை எதிர்வு கூறி நிற்கவில்லை. பிரதான வீதிக்கு அருகில் உள்ள வீடுகளில் வசித்து வந்த என் தம்பியின் கிராமத்தின் 'குடியானவர்கள்' ஊரை விட்டே இடம் பெயர்ந்திருந்தனர். சமூகத்தின் மாற்றத்தை நிலை நிறுத்த இந்த செயற்பாடுகளோ என்று எண்ணிக் கொண்டான். இவ் குடியானவர்கள் தமிழருக்குள் தமிழராக இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்தப்பட்டது என் தம்பிக்கு தெரியும். தனது அரசியல் போராட்ட வாழ்வில் சமாதான சக, சம வாழ்விற்காக போராடியது தம்பியின் நினைவலைகளில் மீண்டும் வந்து போய்கொண்டிருந்தது. சைக்கிளில் சரியான சாப்பாடு ஓய்வின்றி கிராமம் கிராமமாக அரசியல் வகுப்புக்கள் எடுத்தது....எல்லாம் வந்து வந்து போய் கொண்டிருந்தன.....
ஊற வைச்சு கல்லு உரலில் இடிச்சு அவிச்ச பச்சை அரிசிமா புட்டும் மனத்திiயில் ஓடி வந்தது. இழந்து விட்ட பலவற்றின் நினைவலைகள் கன்னத்தில் கண்ணீரை நனைய வைத்தது. தன் சிறிய மகனுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டான் என் தம்பி.
சன்னதி முருகனை வேண்டி பால் செம்பு, காவடி, தூக்குக் காவடி எனவும் நடை பவனியாக தனது வீட்டின் தெரு வழியே பக்தர்கள் போன நினைவலைகள் வந்து வந்து போய்கொண்டே இருந்தன. எமது தேசத்தின் தேவதைகள் திருவிழாவிற்கு அலங்கரித்து போகும் அழகு நடைப் பவனி ரம்ய நினைவுகள் மனத்தில் ஓடி ஒரு வெறுமை மட்டும் மனத்தில் ஏற்படுத்தின.
அடக்கு முறைகளுக்கெதிராக உடுப்பிட்டி தொடக்கம் மானிப்பாய் வரைக்கும், ஊர்காவற்துறை தொடக்கம் பளை வரைக்கும் வெறும் பிளேன் ரீயுடன் ஓய்வு ஒழிச்சல்லின்றி மக்கள் மத்தியில் அரசியல் வேலை செய்த அந்த நாட்கள் மீண்டும் ஏற்படாதா என்ற ஏக்கமும் மனதை மீண்டும் மீண்டும் வந்து வாட்டியது.
பின்பு துப்பாகியை மட்டும் நம்பியவர்களால் போராடும் தனது உரிமை மறுக்கப்பட்டு கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளான போது மக்கள் மத்தியில் செய்த அரசியல் வேலைகள் தன்னையும் உயிர் காத்ததையும் அவ்வாறு உயிர்காத்த முகம் தெரியாத, உறவறியாத மனிதர்களையும் தனது தேசம் தோறும் தேடி அலையவேண்டும் என்று விருப்புக்கள் அவனை சுண்டியிழுத்தன. இந்த 23 வருட இடைவெளியில் அவர்கள் போரின் வடுக்களால் இல்லாமல் போய்விட்டார்களோ? அல்லது பாதி சிதைந்து ஒதுங்கி விட்டார்களோ? எங்கு தேடுவது என்ற திசை வழி தெரியாமல் தவித்து போகும் என் நிலமையை என் சின்ன மகன் புரிந்து கொள்வானோ என்று தனக்குள் முணு முணத்துக் கொண்டு தனது கிராமத்தின் கல்லு வீதிகளில் கால் தடம் பதித்து நடக்கின்றான் என் தம்பி.
தனக்கு வசதியிருந்தமையினால் என் குஞ்சியப்புவால் என் தம்பியை அன்றே வெளி நாடு ஒன்றிற்கு புலம் பெயர வைக்க முடிந்தது. பின்பு என் தம்பியை காப்பாற்றிய பலரும்  தமிழரசுக் கட்சி வழியில் 'தமிழ் தேசியம்' பேசியவர்களை நம்பி ஏமாறியது வேறு விடயம். தன்னைப் போல் புலம் பெயர முடியாத தன்னால் அரசியல் வாழ்விற்கு கொண்டுவரப்பட்ட கிளி, மனோவை போன்றவர்களை காண வேண்டும் என்ற உந்துதலில் அவர்கள் வீடுதேடிச் சென்று 23 வருட இடை வெளியை ஒரு மணி நேரத்தில் நிரப் முயற்சித்த என் தம்பி உண்மையில் களைத்துத்தான் போய் விட்டான். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முன் வந்த போதும் கௌரவமான மறுப்புகளுடன் மத்தியிலும் என் தம்பி உதவியே வந்தான். இவர்களுடன் பேசிய போது இடையிடையே எங்கள் மண்ணின் மைந்தன் நடைமுறை இடதுசாரிப் போராளி 'சாமி' இன் நினைவலைகளும் குறுக்கே வந்து சென்றன.
போராடும் உரிமை மறுக்கப்பட்டு தமிழ் மக்கள் மத்தியிலிருந்த துப்பாக்கிதாரிகளுக்கு தலை மறைவாக இருந்த போதும் கிடைத்த சில இடைவெளிகளை பயன்படுத்தி தீவிரமான தலை மறைவு வாழ்விற்கு தள்ளப்பட்ட தனது சகாக்களை தேடி கிராமம் கிராமமாக அலைந்து உதவியதையும் இதற்கு மக்கள் கொடுத்த மறைமுக ஆதரவையும் அவனது நினைவலைகள் மீண்டும் மீண்டும் மீட்டே வந்தன. ம்.... எல்லாம் முடிந்து விட்டது...
எல்லாம்; முடிந்து விட்டது என்ற பெரு மூச்சின் இடையே 500 மீற்றருக்கு ஒரு தடவை சகஜமாக மக்களுடன் பழகிகக்கொண்டு இருக்கும் இராணுவக் காவல் அரண்களில் எந்நேரமும் எம்மை கண்காணிக்கும் துப்பாகிகள் மட்டும் இருப்பது என் தம்பியை உறுத்திக்கொண்டே இருந்தது.
அவர்கள் சிங்கள் மொழி பேசுவதையும், தமிழில் கதைக்க முயலுவதையும் வீதியால் போகும் பெடி பொட்டைகள் இயல்பாகவே அவர்களுடன் கதைத்தபடி கடந்து செல்வதையும் காணக் கூடியதாக இருந்தது. வெடி இல்லை, குண்டுப்பயம் இல்லை, தடுத்து நிறுத்தி சோதனையும் இல்லை..... ஆனால் சுதந்திரம் என்பது இதுவும் அல்ல என்பதை மட்டும் அடி மனம் உறுத்திக் கொண்டுதான் இருந்தது.
30 வருடகால பொது வாழ்க்கையில் கிடைத்த அனுபவம் மீண்டும் எவ்விடத்தில் தன்னை அமையாளப்படுத்திக் கொள்ளவது என்பதில் ஒரு எச்சரிக்கையுணர்வு என் தம்பியிற்கு ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் ஒன்று மட்டும் புரிகின்றது இதிலிருந்து விடுபடவும் முடியாது விடுபடவும் விரும்பவில்லை என்பது மட்டும் யதார்த்தம் என்பது.
ஊரின் வட கோடியிலிருந்து தென் கோடி வரைக்கும் கிழக்கிலிருந்து மேற்கு வரைக்கும் மாமா, மாமி. சித்தப்பா, சின்னம்மா, பெரியப்பா, பெரியம்மா, மச்சாள், மச்சான், அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி, நண்பன், நண்பி என்று பலரும் இருக்கின்றார்கள், ஆனால் வருகின்றேன் என்று அறிவிக்காமல் பெட்டியுடன் வந்திறங்கி ஒரு மூலையில் உரிமையுடன் படுத்துறங்க எனக்கு ஒரு தனிமரம் இல்லை என்பது மட்டும் அவன் கண்களில் கட்டுக்கடங்காமல் கண்ணீரை வர வழைத்தது என்னவோ உண்மைதான்.
ஏன் அப்பா அழுகின்றீர்கள் அம்மாவை நினைத்தா...? என்றான் அப்பாவியாக என் சின்ன மகன்
இல்லை என் தந்தையர் நிலத்தை என்று என்று என் மகனிடம் வெளியில் சொல்லாமல்… ம்... என்று மட்டும் சொன்னான் என் தம்பி
தங்கி நிற்க எனக்கு ஒரு தனி மரம் வேண்டும் தோப்பு அல்ல என்று மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
இழந்து போன தான் தவழ்ந்து, உருண்டு, ஓடி, ஆடி, பாடி, விளையாடிய அந்த தனிமரம் தற்போது புதருக்குள்ளும் மரங்களுக்கு இடையிலும் இடிந்து மறைந்து கிடந்தது. ஆமாம் நான் பிறந்து, வளர்ந்த அந்த குடிசை..... இடிந்த பின்பு யாரும் பராமரிக்காமல் தற்போது புதரும், புத்துமாக இருக்கின்றது. தம்பி தங்கியிருக்கு தற்போது தனது கிராமத்தில் ஒரு தனிமரம் இல்லை.... தனிமரம் இல்லை.... தோப்பு அல்ல….. கண்ணீரை அடக்க முடியவில்லை.
என் தம்பியின் கண்ணீர் எனக்கொரு பாடம் சொல்கின்றது. நான் கண்ணீர் விடத் தயார் இல்லை.
எனவே ஊருக்கு போக முன்பு தங்கியிருக்க எனக்கொரு தனி மரம் வேண்டும். அதுவும் என் கிராமத்தில் நான் பிறந்து தவழ்ந்து, உருண்டு, ஆடிப்பாடி, ஓடியாடி ஆடு மாடு மேய்த்து இதற்கிடையே அகரம் கற்று அதன் அரிசுவட்டில் ஆசானாக என்னை மாற்றிய என் கிராமத்தில் எனக்கொரு தனி மரம் வேண்டும். என் தந்தையின் தோள்களில் தொங்கித் திரிந்த என் வீதிகளில் தடம் பதிக்க எனக்கொரு தனிமரம் வேண்டும். என் கிராமத்து தேவதைகளின் ரம்யத்தில் மிதந்த என் கிராமத்தில் எனக்கு ஒரு தனிமரம் வேண்டும். என் அக்காளும், அண்ணையும், மச்சானும், மச்சாளும், மாமாவும், மாமியும், பெரியய்யா, பெரயம்மா, குஞ்சாச்சி, குஞ்சப்பு, ஆச்சி, அப்பு, நண்பன், நண்பி எல்லோரும் வாழ்ந்து மகிழ்ந்த பூமியில் எனக்கு ஒரு தனிமரம் வேண்டும். எந்தையும், தாயும் காதலித்து, இணைந்து, மகிழ்ந்து, வாழ்ந்த பூமியில் எனக்கு ஒரு தனிமரம் வேண்டும். மண்ணர் அப்பா பிறந்த பூமியில் எனக்கு ஒரு தனிமரம் வேண்டும்...... நான் கேட்பது தனிமரம்……. தோப்பு அல்ல……. என்னுடன் கூடவே வீடற்ற யாவருக்கும் தங்கியிருக்க ஒரு தனிமரம் வேண்டும்.
நம்பிக்கை இருக்கின்றது இன்னமும் யாவருக்கும் தனிமரம்; கிடைக்க செய்ய முடியும் என்று. என் பயணங்கள் தொடரும். என்ன சின்ன மகளுக்கு இது புரியுமோ தெரியாது. என் வளர்ந்த மகனுக்கு புரிகின்றது என் உணர்வுகள். என் பாதையை நான் மாற்றத் தயார் இல்லை. என் சின்ன மகள் என்றோ ஒரு நாள் என்னைப் புரிவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. என்வாழ்க்கைத் துணைவியாள் என்றும் என்றுடன் இணைந்து இசைக்க, நானும் அவளுடன் இணைந்து இசைக்க என் கரத்தை தொடர்ந்தும் பற்றியே இருப்பாள், நானும் அவளின் கரத்தை பற்றியே இருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
கொழும்பிற்கு விமானம் ஏறுவதற்காக புறப்படுவதற்கு முதற் தினம், தனது சகாக்கள் யாழ்ப்பாணத்தில் அலுவலகம் அமைத்து செயற்படுகின்றார்கள் என்பதை கேள்விப்பட்ட என் தம்பி ஆட்டோகாரரை அவ் அலுவலத்தை நோக்கி திருப்பச் சொன்னார். 1985 வரை ஒன்றாக செயற்பட்ட இவர்கள் 'அரசியல்' வேறுபாடுகளினால் மூன்று அணிகளாக பிரிந்து செயற்படுவதாய் அறிந்து இருந்தான். இதில் ஒரு அணியைத் தவிர்த்து ஏனைய இருவரையும் சந்திக்கும் நோக்கம் என் தம்பியின் விருப்பாக இருந்தது. ஆட்டோகாரர் இடத்தை மாறி விட்டதினால் இடம் மாறிச் சென்றவர்களிடம் மற்றயவர்களின் இடத்தைக் கேட்ட போது இராணுவ முகாமிற்கு வழி சொன்ன 'தமிழ் தேசியம்' பேசும் தலைவர்களின் வக்கிர புத்தியை எண்ணி நொந்து கொண்டான். பின்பு பொது மகன் ஒருவரின் வழிகாட்டலில் சரியான இடத்தை அடைந்தான் என் தமபி. அலுவலக வாசல் முன்றலில் எந்த பாதுகாப்பு கெடுபிடிகளும் இன்றி வீதிவரை வந்து காத்திருந்து தம்பியின் நீண்டகால சகா மோகன் வரவேற்றார். 23 வருட இடைவெளியை ஒரு மணிநேரத்தில் பேசமுடியுமா....? முடிந்தவற்றை பேசி முடிந்து விட்டு அடுத்தவர்களின் இடத்திற்கு போகும் வழியை மோகனின் உதவியுடன் அறிந்து கொண்டு புறப்பட்டான் தம்பி.
சினிமா தியேட்டர் ஒன்றில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் சிறிய முகாமிற்குரிய பாதுகாப்புடன் காணப்பட்டது. பாதுகாப்பு வட்டத்தை கடந்து தனது முன்னாள் சகாக்களை சந்தித்தான் என் தம்பி. இங்கும் 23 வருட இடைவெளியை ஒரு மணிநேரத்தில் பேசித்தீர்க்க முடியாமல் திணறியபடியே வெளியேறினான். 23 வருட இடைவெளி 'சோசலிஷம்' பேசிய இவர்களை 3 குழுக்களாக பிரித்திருந்தன. இதில் சில நியாயத் தன்மைகளும், நாற்காலிக் கனவுகளும், காட்டிக் கொடுப்புகளும் இருந்திருக்கின்றன என்பதை தம்பியால் உணர முடிந்தது. வர்க்க நலன்களின் அடிப்படையிலான பிளவுகள் பிரிவுகள் ஏற்பட்டன என்பதை தான் கற்றறிந்த இடதுசாரிக் கோட்பாட்டின் வழியில் பாகுபடுத்திக் அறிந்து கொண்டான். மீண்டும் இவர்களை இன்னுமொரு 23 வருடங்களின் பிறகுதான் காணமுடியுமோ என்று குடும்பம் குட்டி வெளிநாட்டு 'பஞ்சம் பிழைக்கும்' வாழ்வு முறை என்பனவற்றிகுள் சிக்கித் தவிக்கும் ஓராயிரம் புலம் பெயர் தமிழர்களில் ஒருவனாக என் தம்பியின் நிலையுள்ளதை தளத்தில் உள்ள உற்றார் உறவினர், நண்பர்கள், சகாகள் புரிந்து கொள்ளவார்களோ என்ற ஒரு குற்ற உணர்வுடன் மீண்டும் விமானம் ஏறும் தேதியை தனக்குள் நினைந்தவனாய  ிராமத்திற்கு பயணமானான்.
புலம் பெயர் தேசங்களில் டாலர்கள் கிடைக்கலாம் வாழ்வு கிடைக்குமா என்பது அங்கிருப்பவர்களுக்குத்தான் புரியும். தனது அடையாளத்தை இழந்து வாழுதல் என்பது மனிதனை ஜடமாக்கிவிடும் நிலைக்கு தள்ளிவிடும் என்பது புலம் பெயர் தேசத்து எம்மக்கள் பலருக்கு பொருந்தும். வெளித் தோற்றத்திற்கு 'மினுக்கமாக' தோன்றினாலும் உள்ளே ஓராயிரம் ஏமாற்றங்கள், ஏக்கங்கள், இழப்புக்கள், இல்லாமைகள், இயலாமைகள். இவற்றை கார், வீடு, தொலைபேசி, மின்சார உபகரணங்களுடன் கூடிய டாலர்கள் நிவர்த்தி செய்யுமா என்றால்.... இல்லை என்பதே பதில். தொலைத்து விட்ட வாழ்வை எண்ணி ஏங்காதவர்கள் என்று புலத்தில் யாரும் இல்லை. அப்படியில்லை என்று யாரும் வாதிட்டால் அவர்கள் பொய்மைகளை வாய்மைகள் என்கின்றனர் என்பதாகவே அர்த்தப்படும். 
எனக்கு டாலர்களைவிட வாழ்வுதான் முக்கியம். டாலரைத் தேடி நான் புலம் பெயரவில்லை மாறாக உயிரைப் பாதுகாத்துக் கொள்ள புலம் பெயர் தேசத்திற்கு விருப்பமின்றி எய்தப்பட்டவன். நான் விருப்பின்றி புலம் பெயர்ந்தேன், விருப்பின்றி புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றேன், விருப்புடன் திரும்பி சென்று விடுவேன். நான் தளத்திலிருந்து புலத்திற்கு புடுங்கி நாட்டப்படவில்லை மாறாக பூச்சட்டிக்குள் கொண்டு வரப்பட்டேன். எனவே மீண்டும் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிலத்தில் நாட்டப்படுவதையே விரும்புகின்றேன். புலத்தில் உழைப்பில் ஈடுபட்டதினால் டாலர்கள் கிடைத்து என்னவோ உண்மைதான். ஆனால் எமது அடையாளத்தை இழந்து மகிழ்ச்சிகளை இழந்து 'பஞ்சம் பிழைக்கும்’ கூட்டத்தில் ஒருவனாக உப்புச்சப்பற்ற காலம் கடத்தலில் ஈடுபட்டதே உண்மை நிலை. வாசமற்ற பூக்களில் சுகந்தத்தை தேடும் ஜடமாக தொடர்ந்தும் புலத்தில் வாழ விரும்வில்லை. எனவே என் தாய் நிலமே மீண்டும் என்னை ஏற்றுக் கொள்ளவாய். வாசமுள்ள பூக்களில் வசந்தத்தை தேடும் மனிதனாக நான் வாழ விரும்புகின்றேன்..
(என்னைப் போல் வாழ்வின் சந்தோஷங்களை தொலைத்து வாசமற்ற பூக்களின் சுகந்தங்களை தேடி அலைந்து மீண்டும் வாசமுள்ள பூக்களிடம் புகலிடம் தேடி செல்ல முற்படும் யாபேருக்கும இது சமர்பணம்)
(இது ஒரு கதை, கட்டுரை, காரியம்)
(சாகரன்) (கார்த்திகை 07, 2010)

கருத்துகள் இல்லை: