வியாழன், 23 செப்டம்பர், 2010

தஞ்சை பெரியகோவிலில் ஆயிரம் ஆண்டு விழா தொடங்கியது

தஞ்சை பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா தமிழக அரசு சார்பில் 5 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 26 ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. பெரியகோவில் உள்பட பல முக்கிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
பெரியகோவில் வளாகத்தில் இன்று மாலை கலை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடங்க நிகழ்ச்சியாக தேன்மொழி ராஜேந்திரன் குழுவினரின் கலை நிகழ்ச்சியும், சீர்காழி சிவசிதம்பரத்தின் தமிழிசை நிகழ்ச்சியும் நடைப்பெற்றன. திருநங்கை நர்த்தகி நடராஜன் நாட்டிய நிகழ்ச்சியும், சுதா ரகுனாதனின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தஞ்சை சிவகங்கை பூங்கா, ராஜராஜன் மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கரந்தை ஆகிய 5 இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 3 நாட்களும் மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் இந்த கலை நிகழ்ச்சியில் 1000 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்திய பெருமைக்கு தஞ்சையின் பங்களிப்பு என்ற ஆய்வரங்கத்தை நாளை மறுதினம் (24.09.2010) முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். மேலும் தஞ்சை பெரியகோவில் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
தஞ்சை அரண்மையில் அமைக்கப்பட்டுள்ள சோழர்கால சிறப்பு கண்காட்சியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 25ஆம் தேதி அமைச்சர் அன்பழகன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் கனிமொழி எம்.பி., அவ்வை நடராஜன் ஆகியோர் பங்கேற்கு பேசுகின்றனர். அன்று மாலை 1000 பேர் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. 26ஆம் தேதி நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.

கருத்துகள் இல்லை: