வெள்ளி, 24 செப்டம்பர், 2010

காங்கிரஸ் கட்சியில் எப்போதும் கோஷ்டி கானங்கள்

தமிழக காங்கிரஸ் கட்சியில் எப்போதும் கோஷ்டி கானங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கும். தேர்தல் நெருங்கினால் அந்த கானங்கள் உச்சநிலையில் ஒலிக்கும். அப்படித்தான் கடந்த சில மாதங்களாக அபசுரங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா இல்லையா என்று மக்களுக்கே சந்தேகம் பிறந்து விட்டது.
நல்லவேளையாக "நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். எங்கள் உறவு உறுதியானது, இறுதியானது' என்று குலாம்நபி ஆசாத் அறிவித்தார். சோனியாவின் ஒப்புதலின்றி அவர் அப்படி அறிவித்திருக்க முடியாது. காரணம் அவருடைய அறிவிப்பு என்பது கொள்கை முடிவு.
1971-ம் ஆண்டிலிருந்து தி.மு.க.வுடன் அல்லது அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ்கட்சி கூட்டணி கண்டு வருகிறது. ஆனால் அமரர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் அரசியல் நாகரீகம், கண்ணியம், உறவு என்பதெல்லாம் அண்ணா தி.மு.க.வில் மங்கி மறைந்து வருகிறது.
1998-ம் ஆண்டு ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளைச் சேர்த்துக் ண்டுபி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி கண்டது. நாடாளு மன்றத் தேர்தலில் நல்ல வெற்றியும் பெற்றது. வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைக்க பி.ஜே.பி. தயாரானது. ஆனால் அ.தி.மு.க. பரிவாரங்களின் ஆதரவினைப் பெறுவதற்குள் அதன் விழிகள் வெளியே தெறித்து விட்டன. பதினொரு மாதங் களில் வாஜ்பாய் அரசை அ.தி.மு.க. கவிழ்த்தே விட்டது. காரணம் அ.தி.மு.க.வின்கட்டளை களுக்கு பி.ஜே.பி.யால் அடிபணிய முடியவில்லை. தமிழக தி.மு.க. அரசை கலைக்க வேண்டும். தங்கள் மீதுள்ள வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்பனவைதான் அ.தி.மு.க.வின் பிரதான கோரிக்கைகளாகும்.
என்றைக்கு தமது அரசு கவிழ்ந்ததோ அன்றைக்கே வைர வரிகளால் பொறிக்கத்தக்க ஓர் பொன்மொழியை வாஜ்பாய் கூறினார். "அப் பாடா! இனிமேல்தான் நான் நிம்மதியாகத் தூங்கப் போகிறேன்' என்றார். அந்த அளவிற்கு அவருக்கு அண்ணா தி.மு.கழகம் தினம் தினம் நெருப்புக் குளியல் நடத்திக் கொண்டிருந்தது.
அதன்பின்னர் அண்ணா தி.மு.கழகம் டெல்லி நட்சத்திர ஓட்டலில் முகாமிட்டது.சோனியாவை நேரில் சந்தித்தது. தாங்கள் அடுத்த பிரதமராக ஆதரவு என்று நேசக்கரம் நீட்டியது. என்ன காரணத்தாலோ அடுத்த சில தினங்களி லேயே அந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தது. அதனையும் இன்னொரு நடை போய் சோனியாவை நேரில் சந்தித்தே தெரிவித்தது. சோதனைதான்.
அதன்பின்னர் 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி காண வேண்டும் என்று அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் வலியுறுத்தியது. ஏற்கனவே பட்ட அவமானங் களை மறந்து கட்சியின் முடிவை சோனியா ஏற்றுக்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்திற்குத் தமிழகம் வந்தார்... இரண்டுஅம்மணிகளும் விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்தனர். சோனியா வந்தார். மணிக்கணக்காக மேடையில் காத்திருந்தார். ஆனால் அ.தி.மு.க. அம்மணி கடைசி வரை வரவே இல்லை. சோனியா தமது கடமையை நிறைவு செய்தார். இது அவர் கண்ட இரண்டாவது சோதனை.
இனி அ.தி.மு.க.வுடன் எந்த உறவும் வேண் டாம் என்று அப்போது சோனியாவிடம் ஒருவர் சொன்னார். அவர் வேறு யாருமல்ல. தனது அன்னை தன் கண் முன்னேயே அவமானப்படுத்தப்பட்டதைக் கண்ட பிரியங்காதான்.
2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆட்சிப்பீடம் ஏறியது. அடுத்து செல்வி ஜெயலலிதா டெல்லி சென்றார். சோனியாவைச் சந்தித்தார். நன்றி கூறினார். வெளியே வந்தார். வாசலில் நிருபர்கள் காத்திருந்தனர். தமிழகத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் கொண்டிருந்த உடன்பாடு தேர்தலுடன் முடிந்தது என்று தெளிவாகத் தெரிவித்தார். இதனை சோனியா சந்தித்த மூன்றாவது சோதனை என்று சொல்லலாமா?
சோனியாவைப் பற்றிய கடுமையான தனி நபர் விமர்சனங்களை அகில இந்திய அரசியலுக்கு அள்ளிக் கொடுத்ததே அ.தி.மு.க. தலைமைதான். அந்த வகையில் பி.ஜே.பி.க்கே ஆசானாக விளங்கியது என்றும் சொல்லலாம்.
இப்படி தங்கள் தலைவி அடுக்கடுக்காக அவமானங்களையும் சோதனைகளையும் சந்தித்தது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் கவலைப்படுவதேயில்லை. சூடு, சொரணையுள்ளவர்கள் மட்டும் எரிச்சல் கொள்கிறார்கள்.
தி.மு.க.வைப் பரம்பரை எதிரியாகக் கருதுகிற ஒரு சிறு பிரிவினர் செயல்படுகிறார்கள். அடுத்து அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி. தங்களுக்கு ராகுல்காந்தி சூசகமாகச் சொல்லிவிட் டார் என்றெல்லாம் அவர்கள் கிசுகிசுபிரச்சாரம் செய்கிறார்கள். காங்கிரஸ்-அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி என்கிறார்கள். காங்கிரஸ்-தே.மு.தி.க.-பா.ம.க. கூட்டணி என்கிறார்கள்.
டெல்லி அதிகாரத்தில் தி.மு.கழகத்திற்கு பங்கு தருகிறோம். தமிழகத்தில் ஏன் தி.மு.கழகம் தங்களுக்கு பங்கு தரக்கூடாது என்று கேட்கிறார்கள்.நியாயமான கேள்வி. இதே கேள்வியை கலைஞரிடம் டெல்லித் தலைவர்கள் கேட்டிருந்தால் விடை கிடைத்திருக்கும். தங்கள் அதிகார பற்றை தமிழக காங்கிரசாரும் சோனியாவிற்குத் தெரிவிக்க வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்னால் ராகுல் காந்தி தமிழகம் வந்தார். சென்னை சத்யமூர்த்தி பவனில் கட்சியினரை சந்தித்தார்.  தமிழகத்தில்  ஏன் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை என்று  ஒரு தொண்டர் துணிச்சலாகக் கேட்டார்.""தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன என்பது தலைமைக்குத் தெரியும். அதனால் கேட்கவில்லை'' என்றார் ராகுல்.
முந்தைய மன்மோகன்சிங் அரசு நிலையாக நின்று ஐந்து ஆண்டுகள் செயல்பட்டதற்கு தி.மு.கழகம்தான் காரணம். அதனை காங்கிரஸ் தலைமை அறியும். இன்றைக்கும் கூட்டணியின் சூத்திர தாரியே  கலைஞர்தான் என்று அந் தத் தலைமை  ருமையாகக் கூறு கிறது. எனவே மையத்தில் நிலையான அரசு அமைவதுதான் காங்கிரஸ் ட்சியின் லட்சியம். 1971-ம் ஆண்டிலிருந்து அந்த அடிப்படையில்தான் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும், தமிழகத்தில் கூட்டணி கண்டார்கள். அதன் அடிப்படை யில்தான் தி.மு.க. உறவு நாணயமானது -நம்பிக்கையானது என்பதை சோனியாகாந்தி அனுபவரீதியாக அறிந்து முடிவெடுக்கிறார்.
மையத்தில் நிலையான ஆட்சி வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் நாங்கள்பண்டாரம் பரதேசிகளாக இருக்க வேண்டு மா? எங்களுக்கும் அதிகார அரசியலில்ஆசை யிருக்காதா என்று கேட்க ஆரம்பித்திருக் கிறார்கள். இங்கேயும் ஆட்சியில் பங்கு என்ப தனை முதன் முதலில்  உரக்கச் சொன்னவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்தான். இப்போது ப.சிதம்பரம் என்ன சொல்கிறார்? தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்கிறார் அவர் நாட்டின் உள்துறைஅமைச்சர், கோவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை அருகில்அமர்த்திக்கொண்டு அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார். எனவே கூட்டணி ஆட்சி என்று அவர் போகிற போக்கில்  கூறியிருக்க முடியாது.
தங்களுக்கு சரிபாதி இடங்கள் வேண் டும். எல்லா மாவட்டங்களிலும் தொகுதிகள் வேண்டும் என்றும் கோருகிறார்கள்.அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்றும் சொல்கிறார்கள். குலாம்நபி ஆசாத் சொன்ன பின்னரும் இப்படி காங்கிரஸ்  அரங்கில் பல்வேறு ராகங்கள் கேட் கின்றன. இதிலிருந்து ஒன்று மட்டும்  உறுதியாகத் தெரிகிறது.
அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கேட்கும். ஆட்சியிலும் பங்கு  கேட்கும் என்பது தெளிவாகிறது. இறுதி முடிவு எடுப்பது சோனியா காந்தி என்று மெத்தனமாக இருந்து விடக்கூடாது. நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக் கும் தி.மு.கழகம் பணிந்த தில்லைதான்.ஆனாலும்  காலத்தோடு நிலைமையைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
வரலாறு ஏற்கனவே நமக்கு ஓர் பாடம் படித்துக் கொடுத்திருக்கிறது. 1980-ம்ஆண்டு தி.மு.கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உடன்பாடு ஏற்பட்டது. நாடாளு மன்றத் தேர்தலில் அந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.கழகம் இரண்டே இடங்களில்தான் வெற்றி பெற்றது.
அடுத்து சில மாதங்களிலேயே சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இன்றைக்குகாங்கிரஸ் கட்சியினர் சொல்லும் சூத்திரப்படி அன்றைக்கே தொகுதிப் பங்கீடுகள் நடந்தன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக...தி.மு.கழகம் 109 தொகுதிகளிலும் காங்கிரஸ் 109 தொகுதிகளிலும் போட்டியிட்டன. கூட்டணி வெற்றி பெற்றால்  கலைஞர்தான் முதல்வர் என்றுசென்னை வந்த அன்னை இந்திரா காந்தி அறிவித்தார்.
ஆனால் அந்தக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. அன்னக்காவடியாக எந்த வசதி வாய்ப்பும் இல்லாது களம் கண்ட எம்.ஜி.ஆர். அமோக வெற்றி பெற்றார்.அதிகாரத்தில் சமபங்கு என்ற காங்கிரஸ் சித்தாந்தத்திற்கு தமிழகம் முற்றுப்புள்ளி வைத்தது. தி.மு.கழகமும் பாடம் படித்துக்கொண்டது.
விளம்பர வெளிச்சங்களும் வண்ணத் தோரணங்களும் கட்சியின் வளர்ச்சியைக் குறிக்காது.   இன்றைக்கு அந்தக் கலையில் காங்கிரஸ் கைதேர்ந்திருப்பதையும் மறுப் பதற்கில்லை. திருமணம் என்றாலும் ஜோடிப் பொருத்தம் சரியாக இருக்கவேண்டும். டென்னிஸ் விளையாட்டில் இரட்டையர் ஆட்டம் என்றாலும் அவர்களு டைய திறமை சமமாக இருக்க வேண்டும்.
சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினரைப் பார்த்து அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஓர் கருத்தைத் தெரிவித்தார். ""தமிழகத்தில் அ.தி.மு. கழகம் ஆட்சி பீடத்தை விட்டு இறங்கினால் தி.மு.கழகம்தான் ஆட்சிபீடம் ஏறும்.நீங்கள் கோட்டைக்கு வரலாம் என்று கனவு காணாதீர்கள்'' என்றார். அவருடைய தீர்க்கதரிசனக் கருத்து என்றைக்கும் பொருந் தும்.
தமிழகம் மையத்தில் காங்கிரஸ் அரசு அமைய வாக்களிக்கும். தமிழகத்தில் திராவிடக் கட்சி ஆட்சி அமைக்க வாக்களிக்கும்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்    

கருத்துகள் இல்லை: