வியாழன், 23 செப்டம்பர், 2010

இராணுவத்தின் ஊடுருவும் படை 'முடித்ததாக' ரீல் விடலாம்

நெருப்பில்லாமல் புகைகின்றது என்கின்றார் அரியநேந்திரன்
ததேகூவில் மேலும் சிலர் அரசுடன் இணைவு? அரியநேத்திரன் மறுப்பு
(சாகரன்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனிடம் கேட்டபோது, "இவ்வாறான சந்தர்ப்பங்களில் இது போன்ற வதந்திகள் வெளிவருவது வழக்கம். என்றாலும் இப்போதுள்ள 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவரும் கட்சி மாறக்கூடிய வாய்ப்பு இல்லை. ஒருவர் கூட மாற மாட்டார் என நான் உறுதியாக நம்புகின்றேன்" என்றார்.

அதேவேளை, அண்மையில் கல்முனையில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் பேசிய, 18 ஆவது அரசியல் திருத்த வாக்களிப்பின் போது அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.பியசேன, நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்குப் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.

"மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் நல்ல குணமுடையவர் சி.யோகேஸ்வரன். அவரை அரசாங்கத்துடன் இணையுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அரசாங்கத்துடன் அவர் இணையும் பட்சத்தில் அவருக்கு இந்து கலாசார அமைச்சைப் பெற்றுக் கொடுப்பேன்" என உறுதியளித்திருந்தார்.

அதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட மக்களிடையே, "நாம் வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அடிக்கடி வெளிநாடு செல்கிறார்களே தவிர, எமது நலனுக்காகச் செயற்படுகிறார்களில்லையே..." என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது.

"கட்சி தாவுவதானது வாக்களித்த மக்களை நட்டாற்றில் விடும் செயலாகும். எனவே வாக்குக் கேட்டு வரும்போது கூறியவற்றை மறந்துவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் கதிரையில் அமர்ந்த பின்பு, அன்று கூறிய உறுதிமொழிகளை மறந்து, மாற்றுக் கருத்துக்கள் தெரிவிப்பது கேலிக்குரியதாகும்" என்று மக்களில் ஒரு சாரார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற
உறுப்பினர் சி.யோகேஸ்வரன், அரசாங்கத்துடன் இணைவது எந்த வகையில் உண்மையென்று தெரியாவிட்டாலும் நெருப்பில்லாமல் புகையாது எனவும் கூறப்படுகிறது.
இலங்கை அரசுடன் ஏற்பட்டுள்ள உடன்பாட்டின் அடிப்படையில் மீள்குடியேற்றம், புனருத்தாரணம் போன்ற விடையங்களை அவதானிப்பதற்கு குழுவொன்றை நியமித்திருப்பதாக த.தே. கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. அவதானிப்பு என்று வெளியில் சொன்னாலும் உண்மையில் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட த.தே. கூட்டமைப்பு முடிவு செய்திருக்கின்றது என்பதே உண்மை நிலை என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இத் தெரிவுகளில் கிழக்கு மாகாண எம்.பி. கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக கிழக்கு மாகாண த.தே. கூட்டமைப்பு எம்பி கூறுகின்றனர். என்ன சில த.தே. கூட்டமைப்பு எம்பிகள் வெளியில் 'தமிழ் தேசியம்' பேசி மக்களை உசுப்பேத்திக் கொண்டு அரசுடன் பின்கதவால் உறவுகளை பலப்படுத்துகின்றனர், இன்னொருசாரர் பகிரங்கமாக அணிமாறி அரசுடன் உறவு கொள்கின்றனர்.
என்ன தமிழ்செல்வன் இருந்தால் கொழும்பில் அல்லது வன்னியில் வாகனத்தில் வைத்து 'முடித்து' விடலாம். பின்பு இராணுவத்தின் ஊடுருவும் படை 'முடித்ததாக' ரீல் விடலாம் அந்த வாய்ப்புக்கள் தற்போது த.தே, கூட்டமைப்புக்கு இல்லாததினால் சகட்டு மேனிக்கு பலரும் கட்சி மாற முற்படுகின்றனர். யார்தான் எதிர்பார்த்தார்கள் ஏகபோகம் இவ்வளவு வேகமாக தனது சாவுமணியை தானே அடிக்கும் என்று?
புலம் பெயர் தமிழ் புலிப்பினாமி அமைப்புக்களிடமிருந்து வரும் டாலர்கள் மிகவும் குறைந்து விட்டதால் பணத்தை அள்ள அரசின் திட்டங்களுடன் இணைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் த.தே. கூட்டமைப்பு இந்த முடிவிற்கு தள்ளப்பட்டிருப்பதாக புலம் பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகள் தெரிவிக்கின்றன.
(செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது) (புரட்டாதி 22, 2010)

கருத்துகள் இல்லை: