புதன், 22 செப்டம்பர், 2010

புலிகள் சார்பில் ஆஜராக வைகோவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான இந்தியாவின் தடையை எதிர்காலத்தில் நீடிக்கலாமா? இல்லையா என்பது குறித்து டில்லி மேல் நீதிமன்றம் விசேட விசாரணை நடத்தி வருகிறது. புலிகள் சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அங்கு ஆஜராகி வாதாடுவதற்கு அனுமதி வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விசேட வழக்கு நேற்று டில்லி மேல்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது ஆஜரான வைகோ இத்தடை நீடிக்கப்படக் கூடாது என்றவாறு தனது வாதங்களை முன்வைப்பதற்கு அனுமதி கோரினார்.
அவரது வாதங்களைச் செவிமடுத்த பின்பே நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி எஸ். தணியாயன், இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
புலிகள் இயக்கத்தை வைகோ சேராதவர் என்பதால் புலிகள் இயக்கத்தின் சார்பில் வாதாட அருகதையற்றவர் என்று அவர் தெரிவித்தார். இவரது ஆட்சேபனையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
புலிகள் இயக்கத்தின் சார்பில் வைகோ வாதாட முடியாது என்று தடை விதித்தது.
ஆயினும் சட்டத்தரணி ஒருவர் மூலமாக சமர்ப்பணங்களை வைகோ மன்றுக்கு சமர்ப்பிக்க முடியும் என்று தெரிவித்து நீதிபதி இவ்வழக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை ஒத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை: