ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

கிளிநொச்சி – உருத்திரபுரம் கோகிலாம்பாள் கொலை வழக்கு

சட்டத்தரணி கே.ஜீ. ஜோன்
இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1962 ஆம் ஆண்டுக்கும் 70 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழ் உலகில் கிளிநொச்சி – உருத்திரபுரம் என்னும் கிராமம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. காரணம் அங்கு நடந்த ஒரு கொலையாகும். வட மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி என்ற இடத்தில் இருந்து சிறு தொலைவில் உள்ள குக்கிராமமே உருத்திரபுரமாகும். இங்கு அபிவிருத்திக்காக குடியேறியவர்களே அதிகம். யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் மக்களுக்கும் இங்கு குடியேறியவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. இங்கிருந்த பிள்ளையார் கோவிலில் பூசகராக காசிலிங்க சர்மா விளங்கினார். இவரது தகப்பனாரும் ஒரு பூசகராவார். இவர் காரைநகரில் உள்ளவர். காசிலிங்க சர்மா இந்தியாவைச் சேர்ந்த அழகிய பிராமணப் பெண்ணான கோகிலாம்பாளை மணந்தார். காசிலிங்க சர்மாவுக்கும் கோகிலாம்பாளுக்குமிடையில் வயதில் மிகப் பாரிய வித்தியாசம் இருந்தது. இருபது வயது வித்தியாசம் இருந்தது. ஆரம்பத்தில் இது பிரச்சினையாக இருக்கவில்லை. பதினைந்து வருட கால வாழ்க்கையில் கோகிலாம்பாள் இரண்டு ஆண் குழந்தைகளையும் இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்தாள். தமிழ் குடும்ப மாது ஒருவர் செய்ய வேண்டிய அவ்வளவு கடமைகளையும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் செய்து வந்தாள். காலம் செல்ல செல்ல காசிலிங்க சர்மாவின் வயோதிபத்தன்மை கூடியது. ஆனால் கோகிலாம்பாளின் ஜவ்வனம் அவளிடம் அப்படியே இருந்தது. இதனால் அவர்களிடையே பாலியல் தகராறு அரும்பத் தொடங்கியது. இதனை உணர்ந்த காசிலிங்க சர்மா மதுவை அருந்தி மன ஆறுதலைப் பெற்றார். தனது மனைவியை சந்தோஷப்படுத்த முடியாததையிட்டு கவலையடைந்தார்.
இச்சந்தர்ப்பத்தில் இவர்களில் தோட்டத்தில் வேலுப்பிள்ளை என்னும் ஒருவன் வேலை செய்தான். இவன் மேலுக்கு துணி அணிவதில்லை. பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடம்பு பளிச்சென்று எல்லோருக்கும் தெரியக் கூடியதாயிருப்பான். கறுப்பு நிறமானாலும் இளமை அவனில் தளும்பியது. ஆகவே கோகிலாம்பாளின் பார்வை வேலுப்பிள்ளையின் பால் திரும்பியது. தனது பாலியல் தேவையை அவன் பூர்த்தி செய்வான் என அவள் நம்பி வேலுப்பிள்ளைக்கு தேவையான உணவுகள், இனிப்புப் பண்டங்கள், தேநீர் என்பவற்றை பக்குவமாக அளிக்கத் தொடங்கினாள். வேலுப்பிள்ளையும் இதை உணர்ந்து அவளுடன் நேசம் காட்டத் தொடங்கினான். இறுதியில் இது காதலாக மலர்ந்தது. பூசகர் இல்லாத நேரத்தில் வேலுப்பிள்ளை பூசகரின் வீட்டிற்கு வந்து தனியாக அறைக்குள் கோகிலாம்பாளுடன் உல்லாசமாக இருப்பது வழக்கம். அவளது மகளான இராஜலட்சுமிக்கு இது தெரியவந்தது. கோகிலாம்பாள் மிக கண்டிப்பாக தனது மகளுக்கு இச்சம்பவத்தை தனது தகப்பனுக்கோ வேறு யாருக்குமோ தெரிவிக்கக் கூடாது என்று கட்டளை இட்டாள். பல வருடம் இப்படி நடந்தது. உருத்திரபுரம் கிராமப்புறம் என்பதால் கோகிலாம்பாளின் நடத்தை பூசகருக்கும் தெரியவந்தது. எனவே பூசகர் வேலுப்பிள்ளையை தனது சேவையில் இருந்து நீக்கினார். இதனை கோகிலாம்பாள் எதிர்த்தாள். ஆயினும் இறுதியில் வேலுப்பிள்ளை பூசகரின் வீட்டிலிருந்து அனுப்பப்பட்டான். வேலுப்பிள்ளை அனுப்பப்பட்ட நேரத்தில் இருந்து கோகிலாம்பாள் வீட்டில் அடுப்பு பற்றவைப்பதை நிறுத்தினாள். பூசகருக்கோ குழந்தைகளுக்கோ உணவு சமைக்க மறுத்தாள். மூன்று நாட்கள் உண்ண உணவு இல்லாமல் பிள்ளைகள் பசியால் வாடினர். ஆகவே பூசகருக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போனது. இறுதியில் வேலுப்பிள்ளையை மீண்டும் தனது தோட்டத்திற்கு வரச்செய்து வேலைக்கு அமர்த்தினார். கோகிலாம்பாள் இதில் வெற்றி பெற்றதால் கோகிலாம்பாளுக்கும் வேலுப்பிள்ளைக்கும் வெளியரங்கமாக திரிய வாய்ப்புக் கிடைத்தது.
அவர்கள் மாட்டு வண்டியில் தோட்டத்தில் திரிவதும் கிணற்றடியில் உடுப்பு துவைக்கும்போது சல்லாபமாக கதைப்பதும் நடைபெறத் தொடங்கியது. இந்த விபரம் காசிலிங்க சர்மாவின் தகப்பனார் காரைநகரில் இருப்பவருக்கும் தெரியவந்தது. வேலுப்பிள்ளை சந்தேகத்தை போக்க வேண்டுமென்ற வஞ்சக எண்ணத்தால் பொன்னம்மா என்னும் பெண் ஒருத்தியை மணந்து உருத்திரபுரத்திற்கு கொண்டு வந்தான். பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல் ஒரு பெண்ணின் மனம், நடத்தை என்பவற்றை வேறொரு பெண் உடன் அறிவாள். பொன்னம்மா சில நாட்களுக்குள் வேலுப்பிள்ளையினதும் கோகிலாம்பாளினதும் தகாத உறவை அறிந்து கொண்டு வேலுப்பிள்ளையிடம் கேட்டபோது வேலுப்பிள்ளை பொன்னம்மாவை தாக்கி இனிமேல் இது பற்றி கேட்கக் கூடாது என அடித்து உதைத்தான். இதனால் வேதனையடைந்த பொன்னம்மா தனது ஊரான வவுனிக் குளத்திற்கு சென்று விட்டாள். வேலுப்பிள்ளை கோகிலாம்பாள் பாலியல் உறவு வேகமாக நடந்தது.
வேலுப்பிள்ளை கோகிலாம்பாளிடம் தான் கோகிலாம்பாளை மணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தான். கோகிலாம்பாள் தனது கணவன் இருக்கும் வரையுமே தனக்குப் பாதுகாப்பு என்றும் இல்லையேல் ஊரார் கதை கட்டுவார்கள் என்றும் கூறி விவாகத்தை மறுத்தாள். அப்படியானால் நாம் காசிலிங்க சர்மாவை கொலை செய்து அவர் இறந்த பின்னர் மணந்து கொள்வோம் என்று ஆலோசனையை வேலுப்பிள்ளை கூறினான். இதற்கு கோகிலாம்பாள் உடன்பட்டாள். ஆகவே காசிலிங்க சர்மாவை கொலை செய்ய திட்டம் போடப்பட்டது. இதற்கிடையில் காசிலிங்க சர்மாவின் தகப்பன் காரைநகரில் இருந்து ஒரு கடிதத்தை அனுப்பி தனது மகனையும் கோகிலாம்பாளையும் குழந்தைகளையும் வருமாறு கேட்டார். இக்கடிதம் கோகிலாம்பாளுக்கு கிடைத்தது. இதன்படி நடந்து கொண்டால் தாங்கள் காரைநகர் சென்று திரும்புவது நிச்சயமில்லை என உணர்ந்த கோகிலாம்பாள் வேலுப்பிள்ளையுடன் கலந்து ஆலோசித்து 1962ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி இரவு காசிலிங்க சர்மாவை கொல்ல திட்டம் தீட்டினர்.
14 ஆம் திகதி காசிலிங்க சர்மா வழக்கம்போல் தனது படுக்கை அறையில் படுத்திருந்தார். கோகிலாம்பாளும் படுத்திருந்தாள். வேலுப்பிள்ளை ஏற்கனவே காசிலிங்க சர்மாவுக்கு மதுவை ஊட்டி வெறியாக்கியிருந்தான். வெறியில் சர்மா உறங்கும்போது வேலுப்பிள்ளை சர்மாவின் வீட்டிற்கு வந்து கதவை தட்ட கோகிலாம்பாள் திட்டப்படி கதவை திறந்தாள். வேலுப்பிள்ளை தனது கையில் இருந்த கொடுவாக் கத்தியால் சர்மாவை ஒரே வெட்டாக வெட்டினான். ‘ஐயோ’ என்ற சத்தம் மட்டுமே கேட்டது. சர்மாவின் தொண்டைக் குழியிலிருந்து இரத்தம் பீய்ச்சி அடித்து நிலத்தையும் மற்றும் பொருட்களையும் அசுத்தப்படுத்தியது. சர்மா கொலையுண்டார். கொலையாளிகள் திட்டமிட்டபடி சர்மாவின் உடலை சாக்குக்குள் போட்டுக் கட்டியதுடன் இரத்தம் தோய்ந்த உடுப்புக்களையும் ஒரு சாக்குக்குள் போட்டு கட்டிக் கொண்டு இன்னுமொரு கூலியாளான பசுபதியின் உதவியுடன் சர்மாவின் தோட்டத்தில் புதைத்தனர். மறுநாள் காலையில் எல்லாம் வழமைபோல் நடந்தது. சர்மாவை காணவில்லை. குழந்தைகளுக்கு தகப்பனார் காரைநகர் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது. கிரிமினல் குற்றவாளிகள் எப்போதும் தாம் போடும் திட்டத்தை மற்றவர்கள் அறியக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு சில முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம். மற்றவர்களது அவதானத்தை திசை திருப்ப முயற்சிப்பது வழக்கம். இங்கும் கோகிலாம்பாள் இதனையே செய்தாள். கோகிலாம்பாள் ஒரு கடிதத்தை எழுதி தனது மாமனாருக்கு தபாலில் போட்டாள். தனது கணவன் காரைநகருக்கு போவதாக கூறி இரவு 10 மணி பஸ்ஸில் சென்றதாகவும் அவர் திரும்பும் வரை தானும் குழந்தைகளும் காத்திருப்பதாகவும் எழுதியிருந்தாள். இக்கடிதம் கிடைத்ததும் காசிலிங்க சர்மாவின் தந்தை சந்தேகப்பட்டதுடன் உடனடியாக தனது மருமகனை உருத்திரபுரம் அனுப்பி காசிலிங்க சர்மாவை தேடும்படி கேட்டுக் கொண்டார். அவர் தேடியபோதும் சர்மா அகப்படவில்லை. அத்துடன் கோகிலாம்பாளும் காரைநகருக்கு வந்து தனது கணவன் எங்கே என்று விசாரித்தாள். இதனால் காசிலிங்க சர்மாவின் தகப்பன் சந்தேகப்பட்டார். அத்துடன் இன்னும் சில தினங்களில் வேலுப்பிள்ளையும் அங்கு வந்து தான் சர்மா ஐயா அவர்களை பார்க்க வந்ததாக கூறினான்.
இவற்றில் சந்தேகம் கொண்ட காசிலிங்க சர்மாவின் தகப்பன் பொலிஸாருக்கு அறிவித்து வேலுப்பிள்ளையை கைது செய்யச் செய்தார். கோகிலாம்பாளை உருத்திரபுரம் அனுப்பினர். தனது மகனுக்கு ஏதோ நடந்து விட்டது என உணர்ந்த காசிலிங்க சர்மாவின் தகப்பன் தான் வணங்கும் தெய்வ ஆலயத்தில் பழிகிடந்தார். தனது மகனை காட்டித் தர வேண்டுமென்பதே அவரது கோரிக்கையாக இருந்தது. அப்போது கனவில் ஒருவர் வந்து அவரது கையை பிடித்து உருத்திரபுரம் செல்லுமாறு கேட்டதாகவும் தான் அதனை தொடர்ந்து உருத்திரபுரம் வந்து தனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும் போது இன்னுமொரு நாள் கனவில் தனது தோளை ஒருவர் தொட்டு காசிலிங்க சர்மாவின் தோட்டத்தில் ஒரு இடத்தைக் காட்டி அதனை தொட்டதாகவும் தகப்பன் வழக்கில் கூறினார். அவர் கண்டது உண்மையோ இல்லையோ நாம் அறிய மாட்டோம். ஆனால் அவரின் வேண்டுகோளின்படி சர்மாவின் தோட்டத்தை தோண்டியபோது அங்கே அவரது மகனின் உடல் புதைக்கப்பட்டு அதற்கு மேல் மண்போடப்பட்டு அதற்கு மேல் மாட்டுச் சாணி கும்பல் இருந்ததை எல்லோரும் கண்டனர். ஆகவே அவரது கனவு நனவாகவே இருந்தது. சர்மா கொலை செய்யப்பட்டு விட்டார். இதற்கு காரணம் கோகிலாம்பாளும் வேலுப்பிள்ளையுமே என்று கண்ட பொலிஸார் தமது புலன் விசாரணையை ஆரம்பித்தனர். வேலுப்பிள்ளை பொலிஸாரின் புலன் விசாரணைக்கு முன்னர் ஈடுகொடுக்க முடியவில்லை. சர்மாவை கொலை செய்த கத்தியை புதைத்து வைத்த இடத்தை காட்டினான். இது சாட்சியமாக சமர்ப்பிக்கப்பட்டது. கோகிலாம்பாளும் கைது செய்யப்பட்டாள். தனக்கும் கணவனுக்குமிடையில் பகமை இருந்ததாகவும் தான் கொலைக்கு உடந்தையாக இருந்ததை ஒப்புக் கொண்டாள். பசுபதி என்பவனும் இதில் சம்பந்தப்பட்டிருந்ததால் அவனும் கைது செய்யப்பட்டான். பின்னர் மூவருக்கும் எதிராக விசாரணை நடந்தது. வேலுப்பிள்ளைக்கும் கோகிலாம்பாளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பசுபதி விடுதலை செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை: