புதன், 8 பிப்ரவரி, 2017

பன்னீர் செல்வத்தின் திடீர் நேர்மை... காலில் விழுவதில் சாதனை படைத்தவர் மோடியின் காலில் விழுந்துவிட்டாரோ? நிஜ முகம் எது?

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்து விட்டு திடீரென புரட்சியாளராக மாறியிருப்பதை ஆச்சரியத்தை விட பல சந்தேகங்களையே வலுப்படுத்துவதாக உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் இதுவரை இப்படி முரண்பாடாக பேசியதில்லை, செயல்பட்டதில்லை.
ஆனால் முழுக்க மாறிய மனிதராக இன்று அவர் புது அவதாரம் பூண்டுள்ளார். இது பல குழப்பங்களையும் சந்தேகங்களையும்தான் எழுப்புவதாக உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் உண்மையிலையே தன்னெழுச்சியாகத்தான் இப்படிப் பேசியுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது. அப்படி என்றால் இத்தனை நாட்களாக சசிகலா கும்பலை ஆட விட்டு விட்டு வேடிக்கை பார்த்து வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
ஜெயலலிதாவின் ஆத்மா வந்து தன்னை தூண்டி விட்டதாக அவர் கூறியுள்ளார். ஏன் ஜெயலலிதாவின் ஆத்மா இத்தனை நாட்களை அவரை தூண்டுவிக்கவில்லை என்ற கேள்வியும் பின்னாலேயே வருகிறது.
சசிகலா குடும்பத்தினர் தன்னை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தியதாக கூறும் அவர் ஏன் அந்த அசிங்கத்தை இத்தனை நாட்கள் பொறுத்துக் கொண்டார் என்ற குழப்பம் வருகிறது.
இப்போது தன்மானமாக பேசும் அவர் ஏன் சசிகலா காலில் எல்லாம் விழந்தார் என்ற கேள்வியும் எழுகிறது.

அப்போதே அவர் மறுத்து புரட்சியில் குதித்திருக்கலாமே. திவாகரன் உள்ளிட்டோர் குறித்து இப்போது சொல்லும் ஓ.பன்னீர் செல்வம், அதை முதலிலேயே அம்பலப்படுத்தியிருந்தால் அதிமுகவினர் ஒட்டுமொத்தமாக அவருக்கு ஆதரவாக இருந்திருப்பார்களே. அதை ஏன் செய்யவில்லை.

சசிகலாவுக்கு எதிராக தமிழகமே இருக்கிறது என்பது ஓ.பன்னீர் செல்வத்திற்கு இது நாள் வரை தெரியாமல் போனது இன்னொரு ஆச்சரியமாக உள்ளது. அதை ஏன் அவர் இத்தனை நாட்களுக்குப் பிறகு உணர்ந்தார் என்பதும் புரியாத புதிராக உள்ளது.

உண்மையிலேயே ஓ.பன்னீர்செல்வம் நேர்மையாகத்தான் பேசுகிறாரா என்ற பெரும் குழப்பமும் மக்களுக்கு வருவதைத் தவிர்க்க முடியவி்ல்லை.
காரணம் அவரைப் பின்னாலிருந்து இயக்கும் சக்திகளாக மக்கள் சிலரைப் பார்க்கிறார்கள். அவர்களின் இயக்கத்தின்படியே முதல்வர் செயல்படுவதாகவும் கருதப்படுகிறது.
சசிகலா முதல்வராக வருவதை அந்த சக்திகள் விரும்பவில்லை. அவர்களுக்குத் தேவை ஓ.பன்னீர் செல்வம் மட்டுமே. அதற்காகத்தான் தற்போது அவரை விட்டே புரட்சியை உருவாக்கியிருப்பதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அதை விட முக்கியமாக பிற்பகலில் பி.எச். பாண்டியன் பிரஸ் மீட் வைக்கிறார். அதைத் தொடர்ந்து இரவில் ஓ.பன்னீர் செல்வம் கொந்தளிக்கிறார். இரண்டுக்கும் தொடர்பு உண்டா என்ற கேள்வியையும் கூட பலர் எழுப்புகிறார்கள். வழக்கம் போல காலம்தான் இதையும் நமக்கு வெளிப்படுத்த வேண்டும் tamiloneindia

கருத்துகள் இல்லை: